கடந்த ஞாயிறு 22/01/2023 அன்று மேலைக் கரம்பனைச் சேர்ந்த திருமதி சாரதா பரநிரூபசிங்கம் அவர்கள் எழுதிய “ அம்மு அம்மாவுக்குச் சொன்ன” என்று தலைப்பிட்ட கவிதை நூல் ஸ்கார்புரோ ஒன்ராறியோ கனடாவில் வெளியீடு கண்டது. அமானா மகாநாட்டு மண்டபத்தில் நூற்றுக்கும் அதிகமான பார்வையாளர்களும் , அபிமானிகளும் கலந்துகொண்டிருக்க விழா வெகுவிமரிசையாக ஆரம்பித்தது.

மோசமான காலநிலை காரணமாக நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்திலிருந்து கொஞ்சம் தாமதமாகத் தொடங்கினாலும் எந்தவிதத் தொய்வுகளுமின்றி விறுவிறுப்பாக நடைபெற்றது.

செல்வி சியாமளி பரநிரூபசிங்கம் வந்தவர்களை வரவேற்று உரை நிகழ்த்தியதுடன் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

மங்கல விளக்கேற்றி விழாவை திருமதிகள் ஜெயகெளரி ஜெகநாதன்,மனோரதி நிர்மலநாதன்,கெளசல்யா சாந்திக்குமார், விஜிதா சிறிதரன் மற்றும் சுகன்யா கமல் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்தை திருமதிகள் செல்வராணி ராஜரட்ணம்,விஜயா குகநேசன், ரஞ்சி மகேந்திரன், ஷகிலா செந்தூரன் , சுரபி சுதன் ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட, செல்விகள் சைந்தவி ஜீவகுமார், சேஷனா செந்தூரன் மற்றும் செல்வன் கெவின் திருக்குமரன் ஆகியோர் சிறப்பாக கனடிய தேசிய கீதத்தைப் பாடி வழங்கினார்கள்.

திரு பேரின்பம் விநோதன் அவர்கள் தலைமைதாங்கி தனது தலைமை உரையுடன் நூல்வெளியீட்டையும் செய்து வைத்தார்.

முதல்பிரதியை பெறவிருந்த திரு பி. விக்னேஸ்வரன் அவர்கள் வருகைதரத் தாமதமானதால் முதல்பிரதியை திரு கிருஸ்ணகோபால் செல்லத்துரை பெற்றுக் கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் இணைந்து கொண்ட திரு பி. விக்னேஸ்வரன் தனக்கான பிரதியை தலைவர் பேரின்பம் விநோதனிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

விசேட பிரதிகளை திருவாளர்கள் விநாகயகமூர்த்தி கந்தையா, நடா நடராஜா, அரவிந்தநாதன் ஆசைப்பிள்ளை, ஜெகநாதன் சண்முகநாதன் , சிறீதரன் செல்வமணி மற்றும் திரு ஜீவகுமார் சிவபாதம் ஆகியோர் தலைவர் திரு பேரின்பம் விநோதனிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து கவிஞரும் எழுத்தாளருமான திருமதி வாசுகி நகுலராஜா அவர்கள் நூல்பற்றிய தனது மதிப்புரையை வழங்கினார்.

அவரைத் தொடர்ந்து தொழிலதிபர் விவேகானந்தன் சுப்பிரமணியம், கவிஞர் சிற்றம்பலம் கணபதிப்பிள்ளை மற்றும் அவதானி ஆகியோர் தங்கள் மதிப்புரைகளை சுவைபட வழங்கினார்கள்.

திரு பி. விக்னேஸ்வரன் அவர்கள் நூலாசிரியரை அவருடனான தனது இலங்கை வானொலி அனுபவங்களை சபையினருடன் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அடுத்த கட்டமாக நூலுக்கும் நூலாசிரியருக்குமான பாராட்டுரைகளை திருவாளர்கள் கிருஸ்ணகோபால் செல்லத்துரை, வரதராஜன் கந்தையா மற்றும் திரு பரநிரூபசிங்கம் கந்தையா ஆகியோர் சிறப்புற வழங்கினார்கள்.

கரம்பன் சண்முகநாத மகாவித்தியாலாய பழைய மாணவர்கள் சங்க கனடாக் கிளை சார்பில் அதன் நிர்வாகிகளால் நூலாசிரியர் திருமதி சாரதா பரநிரூபசிங்கம் அவர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வாழ்த்துப்பா பொறிக்கப்பட்ட கேடயமும் வழங்கப்பட்டது.

நூலாசிரியர், வருகை தந்திருந்த பார்வையாளர்களையும் , உரை வழங்கியவர்களையும் விளித்து தனது அன்பையும் நன்றியயும் சிறு உரைமூலம் தெரியப்படுத்தினார்.

இறுதியில் செல்வி சுரபி பரநிரூபசிங்கத்தின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

நிகழ்ச்சி காலதாமதமாகத் தொடங்கினாலும், சீரான நேர்த்தியுடன் சுவையான சிற்றுண்டி , சுடுபானங்களுடன் மிகச்சிறப்பாக விழா அமைப்பாளர்களால் கொண்டெடுக்கப்பட்டதைக் கண்ணாரக் காணக் கூடியதாக இருந்தது.

நன்றி.- அவதானி