sabaratnamஆசான் திரு. ஆ சபாரத்தினம் அவர்கள் நாரந்தனையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆறுமுகம், அன்னம்மா அவர்களின் கடைசி மகனாவார். இவரது மூத்த தமக்கையார் கரம்பொன்னில் திருமணம் முடித்திருந்த படியால், இவருக்குக் கரம்பொன் தொடர்பு கல்வி பயிலும் காலத்தில் ஏற்பட்டது. பின்னர் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் பாடசாலையில் ஆசிரியராக இருந்தமையாலும், கரம்பொன்னில் திருமணம் செய்தமையாலும், சண்முக நாத மகா வித்தியாலயத்தில் அதிபராக இருந்தமையாலும் இவர் கரம்பொன்னிலேயே வாழ்ந்து வந்தார்.

மாணவர்கள் படிப்பில் முன்னேற வேண்டும் என்னும் எண்ணத்தைக் கொண்ட இவர் தன்னால் இயன்ற வரையில் அதற்காகப் பாடுபட்டார். அது மட்டுமன்றி அயலவர்களுக்குத் தன்னாலியன்ற உதவிகளையும் இல்லையெனாது செய்து வந்தார். ஆறு தொடக்கம் பன்னிரெண்டு வரையிலான வகுப்புகளுக்குரிய வரலாற்றுப் பாடநூல்களையும் இவர் எழுதியிருந்தார். இன்றும் எண்பது வயதிலும் மாணவர்களுக்குக் கல்வி தொடர்பாக மிகுந்த உதவிகளை வழங்கி வருகிறார்.

இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டில் இவரது எழுத்துப் பணிகளுக்காக இவருக்கு கௌரவ முதுமாணிப் பட்டம் யாழ் பல்கலைக் கழகத்தால் வழங்கப் பட்டது. அவ்விழாவில் அப்போது கலைப் பீடாதிபதியாக இருந்த பேராசிரியர் ப. கோபால கிருஷ்ண ஐயர் அவர்கள் இவரை அறிமுகம் செய்து வைத்த போது வழங்கிய உரையைக் கீழே பிரசுரிக்கிறோம்.

சைவசித்தாந்தத்திலும் தமிழிலும் மற்றும் சமயம் சார்ந்த ஒப்பியல் துறையிலும் புலமைத்துவமிக்க ஆறுமுகம் சபாரத்தினத்துக்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் கௌரவ முதுமாணிப் பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளது.

சபாரத்தினம் ஊர்காவற்றுறையில் நாரந்தனை என்னுமிடத்தில் 30.10.1928 அன்று பிறந்தார். தமது தொடக்கக் கல்வியை நாரந்தனை கணேச வித்தியாலயம், சண்முக நாத மகா வித்தியாலயம்,   சன்மார்க்க போதனா பாடசாலை, ஆகியவற்றிலும் பின்னர் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆகியவற்றிலும் பெற்றார்.

இதனையடுத்து ஆங்கில ஆசிரியப் பயிற்சியினை மகரகமையில் உள்ள ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பெற்றார். பின்னர் 1964ம் ஆண்டில் பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம், தமிழ், வரலாறு ஆகிய பாடங்களுடன் கூடிய கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றார். இவர் ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் பல்வேறு பாடசாலைகளில் பணியாற்றி நல்லாசிரியனாகக் கல்வித்துறையில் பரிணமித்தார்

இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை மற்றும் பொ.கைலாசபதி ஆகியோரது வழிகாட்டலில் சைவ சித்தாந்தத்தில் தமது அறிவை விருத்தி செய்து கொள்ளும் வாய்ப்பினையும் சபாரத்தினம் பெற்றார்.

இதன் வழி தமது புலமைத்துவத்தின் மற்றுமொரு பரிணாமத்தை வளர்த்துக் கொண்டார். இவர் இந்தியாவுக்கு பல தடவைகள் மேற்கொண்ட பயணங்களின் மூலம் அங்குள்ள அறிஞர்களோடு நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பேற்பட்டதோடு இலக்கியம் மற்றும் ஆன்மீகத் துறைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவும் முடிந்தது.

சபாரத்தினம் இளந்தலைமுறையினரின் நன்மை கருதி பல பாடநூல்களை எழுதி வெளியிட்டதன் பயனாக மாணவர்கள் தமது அறிவை வளர்த்துக் கொள்ள ஏதுவாயிற்று.
1980ஆம் ஆண்டு முதல் 1993 வரை இலக்கியத்துறையில் இவர் பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டதன் மூலம் கீழைத் தேசத்தவர்களுக்கு மேலைத்தேச இலக்கியத்தை அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பேற்பட்டது.

1989-1990 ஆம் காலப்பகுதியில் ஸ்வீடனிலுள்ள உப்சலா பல்கலைக்கழகம் இவரை ஆய்வாளனாக அழைத்திருந்தது. அங்கு சமய வரலாற்றுத்தறையில் உள்ள அறிஞர்களுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் யாழ்ப்பாணத்துச் சமயங்கள் பற்றிய நூற்பட்டியலைக் குறிப்புரைகளுடன் தயாரிப்பதில் தமது பங்களிப்பை நல்கியவர்.

மேலும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி மேற்கத்தைய அறிஞர்கள் சைவசித்தாந்த விழுமியங்களை அறிந்து கொள்ளக் கூடிய வகையில் ஸ்வீடனிலுள்ள ஸ்டொக்ஹோம் பல்கலைக்கழகம், லூண்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அதிதி விரிவுரைகள் நிகழ்த்திய பெருமையும் இவருக்குண்டு.

இதன் வழி மேலைத்தேய அறிஞர்களிடையே சைவ சித்தாந்தத்தில் ஆர்வம் ஏற்பட வாய்ப்பேற்படலாயிற்று. 1989ஆம் ஆண்டு ஸ்வீடனில் உள்ள தேவாலய அமைப்பின் சார்பில் நடைபெற்ற சர்வதேச சமாதான மாநாட்டில் யாழ்ப்பாணத்தில் இந்து-கிறிஸ்தவ மதங்கள் பற்றிய கட்டுரையொன்றினையும் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

தமக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பல ஆய்வுக் கட்டுரைகளை சபாரத்தினம் எழுதி வெளியிட்டுள்ளார். அவை உப்சலா பல்கலைக்கழக ஆய்வு சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. இதன் வழி அப்பல்கலைக்கழக அறிஞரிடையே நன்கு அறிமுகமாகிய ஒருவராக விளங்கினார்.

'சற்றடே ரிவியூ' என்ற ஆங்கில வாரப்பத்திரிகையின் தமிழ்ப் பிரிவின் பொறுப்பாளராக விளங்கிய காலத்தில் காப்ரில் மார்சல் எழுதிய சமயஞ்சார்ந்த மெய்மைக் கோட்பாடு பற்றிய கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்து அப்பத்திரிகையின் தமிழ் ஏடாகிய 'திசையில்' 1986இல் வெளியிட்டுள்ளார்.

சபாரத்தினம், பொ.கைலாசபதி சிந்தனைகள் என்ற நூலைத் தொகுத்துப் பதிப்பித்து வெளியிடும் பணியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேராசிரியர் சு.சுசீந்திரராஜாவுடன் இணைந்து பணியாற்றியவர்.

1994ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளியீடாக இந்நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் இந்து நாகரிகத்தில் முதுதத்துவமாணி ஆய்வுக்கும் மற்றும் இலக்கிய கலாநிதி பண்டிதமணி மு.கந்தையா எழுதி வெளியிட்ட சைவசித்தாந்த நோக்கில் கைலாசபதி ஸ்மிருதி என்ற நூலுக்கும் மூலமாக அமைந்தமை குறிப்பிடற்பாலது.

இந்நூலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடாகும். தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்கும் பட்டதாரி மாணி.ஆ.சபாரத்தினத்தின் இலக்கியப் பணிகள் என்ற தலைப்பில் 2000ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் இலக்கியத்துறையில் இவரது ஈடுபாடு பற்றி விரிவாகக் கூறப்பட்டது.

சபாரத்தினம் இளம் ஆய்வாளர்களுக்க உதவும் மனப்பாங்கு உடையவர். அத்துடன் பல்வேறு இலக்கிய சமூக நிறுவனங்களில் தம்மை இணைத்து சமூகப் பணியாற்றி வருபவர். 1980 முதல் கரம்பன் இலக்கிய வட்டத்தின் தலைவராகவும், சரஸ்வதி பிருந்தாவனம் நம்பிக்கை நிதியத்தின் அமைப்பாளராகவும், தற்பொழுது பொ.கைலாசபதி நூற்றாண்டு நினைவுக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றி வருபவர்.

சபாரத்தினம் அவர்கள் சைவசித்தாந்தம், இலக்கியம், சமயஞ்சார்ந்த ஒப்பியல் ஆய்வு மற்றம் சமூகம் சார்ந்த துறைகளில் உடையவராகவும் விளங்கி பெருமை பெற்றுள்ளதோடு இந்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அறிஞர்களால் மதிக்கப்படும் ஒருவராகவும் விளங்கி வருகிறார்.

இவருடைய இலக்கியப் பணிகள் இன்னும் பல ஆண்டுகள் தொடரவேண்டுமென்று வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி: பேராசிரியர் ப.கோபாலகிருஸ்ண ஐயர்.