sivalingamதென் கரம்பொன் கிராமத்தில் படித்துப் பட்டம் பெற்று அரச பதவிகளில் பணிபுரிந்தோர் அன்றைய கால கட்டத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய வெகு சிலரே ஆவர். அவர்களுள் தனது கல்வி அறிவினாலும், கண்ணியமான கடின உழைப்பினாலும் அரச பதவியில் சாதாரண எழுது வினைஞராக இணைந்து படிப்படியாக முன்னேற்ற மடைந்து இலங்கையின் தலைநகரான கொழும்பில் குடியமர்வு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய பெருமைக்குரிய திரு.வி.சிவலிங்கமும் ஒருவராவர்.

கரம்பொன் தெற்கைச் சேர்ந்த காலம் சென்ற வினாசித்தம்பி சுந்தரம் தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள். முதலாவது மகளாக நாகம்மாவும், இரண்டாவது மகனாக குமாரசாமியும், மூன்றாவதாக செல்லப்பிள்ளையாக பிறந்தவர்தான் சிவலிங்கம். தமக்கையாரும், தமையனாரும் தங்களது தம்பி படித்து உயர்ந்த நிலைக்கு வரவேண்டுமென்பதில் அதிக அக்கறை காட்டினார்கள். 'விளையும் பயிரை முளையிலேயே தெரியும் என்பதுபோல் தம்பியும் சிறுவயதிலேயே படிப்பில் சிறந்து விளங்கினார். இவர் தனது ஆரம்பக் கல்வியினை கரம்பொன் மேற்கு சண்முகநாத மகா வித்தியாசாலையில் மேற்கொண்டார். அங்கு கல்வி அறிவோடு சைவ சமயப் பின்னணியுடன் கூடிய நேர்மை, கண்ணியம் ஆகிய அருங்குணங்களையும் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் காவலூர் புனித அந்தோனியார் கல்லூரியிலும், யாழ் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியினை மேற்கொண்டார். படிப்பு முடிந்ததும் அரசாங்க எழுது வினைஞர் பரீட்சைக்கு விண்ணப்பித்து அதிலும் தேர்ச்சியடைந்து பத்தொன்பதாவது வயதில் தான் பிறந்த ஊரிலிருந்த உதவி அரசாங்க அதிபர் (டி.ஆர்.ஓ.) அலுவலகத்தில் முதன் முதலாகப் பதவி ஏற்றார். சில காலம் அங்கு பணியாற்றிய பின்னர் பதவி உயர்வுடன் யாழ் அரசாங்க அதிபர் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கேயும் சிலவருட காலம் திறமையாகச் செயலாற்றியதன் மூலம் தலைநகர் கொழும்பிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கொழும்பில் தங்கியிருந்து பணியாற்றி வந்தபோது தனது கிராமத்தைச் சேர்ந்தவரும் நண்பருமான திரு.சோ.சிவபாதசுந்தரத்தை அடிக்கடி சந்தித்துப் பழகி வந்தார். அச்சமயத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த திரு.சிவபாதசுந்தரத்துடன் நவாலியைச் சேர்ந்த குஞ்சிதபாதம் என்பவரும் அவருடன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி வந்தார். அதனால் சிவபாதசுந்தரத்தை அடிக்கடி சந்திக்கச் சென்ற சிவலிங்கத்தை குஞ்சிதபாதத்திற்கு நன்கு பிடித்துக் கொண்டது. அதனால் அவர் தனது ஒரேயொரு சகோதரியான ஜெயமணியை 1959ம் ஆண்டு சிவலிங்கத்துக்கு திருமணம் செய்து வைத்தார்.

திரு.குஞ்சிதபாதம் பின்னர் பாராளுமன்றத்தில் மொழி பெயர்ப்பாளர் பதவியை ஏற்று பணி புரிந்து வந்தார். திருமணத்தின் பின்னர் திரு.சிவலிங்கமும் தனது பதவியில் படிப்படியாக முன்னேறி இறுதியாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் உயர் பதவியான கட்டுப்பாட்டாளர் (Assit. Controler of  Immigration & Emigration Dept.) பதவியினை வகித்தார். அப்போது இவருக்கு அரசாங்கத்தினால் கொள்ளுப்பிட்டியில் சௌகரியமான வதிவிட வசதியும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. அறுபது வயதாகியதும் 1984ம் ஆண்டு திரு.சிவலிங்கம் பதவியிலிருந்து ஓய்வு பெற முயன்றபோது அவரது சிறப்பான சேவையின் காரணமாக அரசாங்கம் அவருக்கு சேவை நீடிப்பு வழங்கி மேலும் ஐந்தாண்டு காலம் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டது. அவ்வேண்டுகோளினை ஏற்று 1989ம் ஆண்டு வரை திரு.சிவலிங்கம் பதவி வகித்து அறுபத்தைந்தாம் வயதில் ஓய்வு பெற்றார். 1995ல் கனடாவுக்கு புலம் பெயர்ந்த திரு.சிவலிங்கம் தற்போது மிசிசாகாவில் தனது குடும்பத்தாருடன் வாழ்ந்து வருகின்றார்.

தனது சிறந்த சேவையின் மூலம் தான் பிறந்த தென் கரம்பொன் கிராமத்துக்கு பெருமை தேடிக் கொடுத்த அவரை கரம்பொன் இணையத்தளத்தில் வாழும் போதே கௌரவிப்போர் பகுதியில் கௌரவிப்பதில் நாமும் பெருமை அடைகின்றோம்.

நன்றி: வீரகேசரி மூர்த்தி