ஈஸ்டர் விடுழுறை நாட்களான ஏப்ரல் 08 மற்றும் 09ம் திகதிகளில் சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்னில் (Bern)  உலகத் தமிழர் பூப்பந்தாட்ட (பாட்மின்டன்) பேரவையினால் எட்டாவது தடவையாக (Badminton) போட்டி நடாத்தப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா, டென்மார்க், நோர்வே, அமெரிக்கா, பெல்ஜியம், சுவீடன், அவுஸ்திரேலியா, அயர்லாந்து, போத்துக்கல், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய 18க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 280 போட்டியாளர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள்.

பிரித்தானியாவில் இருந்து மட்டும் 70க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருக்கிறார்கள். கனடாவில் இருந்து 40 மேற்பட்ட போட்டியாளர்கள் வரை கலந்துகொண்டார்கள்.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வவொரு நாட்டில் ஒழுங்கு செய்யப்படும் இந்தப் போட்டி இந்த வருடம் சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்னில் (Bern) இடம் பெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்தில் 2013 இல் ஸ்தாபிக்கப்பட்ட உலகத் தமிழர் பூப்பந்தாட்ட (பாட்மின்டன்) சம்மேளனம் அவ்வருடத்திலிருந்து ஆண்டுதோறும் உலகக் கிண்ண பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகளை நடத்தி வருகின்றது. இப்போட்டிகள் தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளிலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

கனடா நாட்டின் சார்பில் இவர்கள் அனைவரும் வெற்றிவாகை சூடி வர கரம்பொன் நெட் இணையத்தளமும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

சர்வதேச தமிழினத்தை கனடாவில் ஒன்றிணைத்த பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி2017

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களை ஒரே புள்ளியில் இணைக்கும் விளையாட்டுக் களமாக பூப்பந்தாட்டம்(Badminton) இன்று முன்னிலை பெற்றுள்ளது. அந்த வகையில் கடந்த சில வருடங்களாக புலம் பெயர்ந்த தேசங்களில வாழும் தமிழர்கள் பூப்பந்தாட்ட விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் நிலையில் தத்தமது நாடுகளில் மட்டுமே ஆடிவந்த விளையாட்டை சர்வதேச போட்டிக் களத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. சுவிஸ் நகரில் வசிக்கும் “சிங்கம் கந்தையா” அவர்களின் சிந்தையில் உருவாகிய ” தமிழர்; பூப்பந்தாட்ட உலகக் கிண்ண சுற்றுப் போட்டி” என்ற சர்வதேச தமிழர் விளையாட்டுக் களத்துக்கான திட்டமிடலானது 2013 ஆம் ஆண்டில் உதயமானது.

சுவிஸ் நாட்டில் தொடங்கிய தமிழர் பூப்பந்தாட்ட சர்வதேசப் போட்டிகள் அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு நாட்டிலும் இடம்பெற்ற போடடிகளின் போதும் கனடாவைச் சேர்ந்த தமிழ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டதோடு பல வெற்றிகளையும் குவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டில் நாலாவது சுற்றுப் போட்டி ஜேர்மனியில் இடம்பெற்ற போதே 2017 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் ஐரோப்பிய நாடுகளைக் கடந்து வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான கனடாவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கமைய ஐந்தாம் ஆண்டுக்கான போட்டிகளை கனடாவின் ரொரன்ரோ மாநகர பிரதேசத்தில்

நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திரு. அன்ரனி ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் அதற்கென ஒரு செயற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது. ஒரு வருட காலமாக பலரது அயராத உழைப்பின் வெளிப்பாடாக ” உலகத் தமிழர்; பூப்பந்தாட்ட பேரவையின் 5 ஆவது உலகக் கிண்ணப் போட்டி ரொரன்ரோ 2017″ ஜூலை 29, 30 ஆம் திகதிகளில் மிகவும் விறுவிறுப்பாகவும், கோலாகலமாகவும் இடம்பெற்றது.

2016 ஆம் ஆண்டில் ஜேர்மனியில் இடம்பெற்ற சுற்றுப் போட்டியின் போது 11 நாடுகளைச் சேர்ந்த தமிழர் விளையாட்டு வீரர்கள் பங்குகொண்டிருந்தார்கள். இம்முறை அதற்கும் மேலதிகமாக அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பின்லான்ட், போத்துக்கல் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டதால் பங்கு பற்றிய நாடுகளின் எண்ணிக்கை பதினைந்தாக அதிகரிந்திருந்தது. பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தமிழ் வீரர்களும், வீராங்கனைகளும் இம்முறை போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

போட்டிகளுக்கான அரங்காக கனடாவின் ஸ்காபுரோ பிரதேசத்தில் அமைந்திருக்கும் ” Epic Sports Centre” தெரிவு செய்யப்பட்டு, கனடிய ஏற்பாட்டுக் குழுவினரால் அனைத்து ஒழுங்குகளும் நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தன. 13 வயதுக்கு உட்பட்டவர்களுடன் ஆரம்பித்து அதற்கு மேற்பட்ட எந்த வயதினரும் பங்கு கொள்ளும் வகையில் வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. வயது வாரியாகப் பிரிக்கப்பட்ட போட்டியாளர்கள் பெண்கள் தனியாக, ஆண்கள் தனியாக, இருபாலாரும் சேர்ந்து என்று 25 வரையான பிரிவினருக்கிடையே போட்டிகள் இடம்பெற்றன. ஒற்றையாட்டம், இரட்டையாட்டம், கலப்பின ஆட்டம் மற்றும் திறந்த போட்டி பிரிவினருக்கான (open category) போட்டிகள் உள்ளடங்கலாக 500 வரையிலான போட்டிகள் இரு நாட்களிலும் நடாத்தி முடிக்கப்பட்டன என்பது பெருமைக்குரிய விடயமாகும். இடம் மற்றும் கால நேரத்தைக் கருத்தில் கொண்டு 13 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலாருக்கும், 15 வயதான ஆண் போட்டியாளர்களுக்கும் வேறு ஒரு களத்தில் போட்டிகள் இடம்பெற்றன என்பது குறிப்பிpடத்தக்கது. அவர்களில் இறுதிச் சுற்றுக்கு தெரிவானவர்கள் மறுநாள் பிரதான மையத்தில் நடைபெற்ற போட்டிகளில் பங்கு பற்றியிருந்தார்கள்.

முதல்நாள் நிகழ்வாக 29 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் 10.00 மணியளவில் போட்டிகள் நிறுத்தப்பட்டு சம்பிரதாயபூர்வமான ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து என்பவற்றோடு, மங்கள விளக்கேற்றலும் இடம்பெற்றது. கனடா செயற்பாட்டுக் குழுத் தலைவர் அன்ரனி ஜெயகாந்த், உலக பூப்பந்தாட்ட சம்மேளன தலைவர் சிங்கம் கந்தையா(சுவிஸ்), மார்க்கம் கவுன்சிலர் லோகன் கணபதி, ஸ்காபுரோ கவுன்சிலர் நீதன் சண் ஆகியோரின் வாழ்த்துரைகளை தொடர்ந்து மீண்டம் போட்டிகள் ஆரம்பமாகின. இரவு 11.00 மணிவரை தொடர்ந்து போட்டிகள் இடம்பெற்றன.

அன்றைய போட்டிக்களம் மிகவும் உற்சாகமாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்தது. பார்வையாளர்களன் உற்சாகமூட்டல்களால் அரங்கம் அதிர்ந்தபடி இருந்ததை காணக்கூடியதாக இருந்தது. போட்டிகளில் கலந்து கொண்ட நாடுகளின் தேசியக் கொடிகள் ஒவ்வொன்றும் அரங்கில் தொங்கவிடப்பட்டு அந்தச் சுற்றாடலே வர்ணமயமாகக் காட்சியளித்தது. போட்டி நிகழ்வுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் விளையாட்டுக் குழுவால் செவ்வனே செய்யப்பட்டிருந்தன. பிரபல உணவகமான “பாபு கேற்றறிங்” சிற்றுண்டி மற்றும் உணவுச் சாவடியை அமைத்திருந்தது. முதலுதவி மற்றும் அவசர மருத்துவ தேவைகளுக்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தன. முக்கியமாக விளையாட்டு வீரர்களினதும், பார்வையாளர்களினதும் பாதுகாப்பு, கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் உறுதி செய்யப்பட்டிருந்தது. தொலைக்காட்சித் திரையில் போட்டிகள் பற்றிய விபரங்களும், போட்டியாளர்களின் நிலவரங்களும் அறிவிக்கப்பட்டவண்ணம் இருந்தன.

நூற்றி ஐம்பதுக்கு மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள், நீலநிற ஆடைகளில் தம்மை அடையாளம் காட்டி, தேவைகளுக்கு ஏற்றாற்போல் சேவைகளை வழங்கிக்கொண்டிருந்தார்கள். போட்டிகளில் பங்குகொண்ட கனடிய வீரர்களும், வீராங்கனைகளும் சிவப்பு நிற ஆடையில் வலம்வந்து தம்மை இனம் காட்டியிருந்தார்கள். பார்வையாளருக்கென 300 ஆசனங்கள் அரங்கில் போடப்பட்டிருந்தன. போட்டிகள் ஆரம்பமாகி இரவு 11.00 மணிக்கு முடியும் வரை, தொடர்ச்சியாக வந்தும் போய்க்கொண்டும் இருந்த பார்வையாளர்களால் மண்டபம் நிறைந்தே காணப்பட்டது.

இரண்டாம் நாள் ஞாயிறு காலை 8.00 மணிக்கு மீண்டும் போட்டிகள் ஆரம்பமாகின. இறுதிப்போட்டிக்கான பரபரப்பான தினமென்பதால் முதல் நாளைவிடவும் உற்சாகம் அன்று மிகுந்து காணப்பட்டது. மாலை நாலு மணி அளவில் போட்டிகள் நிறைவடைந்து வெற்றியாளர்கள் கௌரவிக்கும் நிகழ்வு (Award Ceremony) இடம்பெற்றது. மூன்றாக வகைப்படுத்தப்பட்ட 25 பிரிவுகளில் வெற்றியீட்டிய முதல் மூன்று போட்டியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணம் பரசளிக்கப்பட்டது. Open பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்பட்டன. மொத்தத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பரிசில்களை வெற்றியாளர்களுக்கு வழங்கியதன் மூலம் போட்டியாளர்கள் உற்சாகப்படுத்தப்பட்டதோடு மலர் செண்டு கொடுத்து கௌரவித்திருந்தார்கள். அதேசமயம் 19 வயதுக்கு உட்பட்ட போட்டியாளர்கள் அனைவருக்கும் விளயாட்டில் பங்குபற்றியதற்கான சான்றிதழ்கள் வழங்குவதற்கான சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வின்போது ஹரி ஆனந்தசங்கரி(MP), நகரசபை உறுப்பினர்கள் லோகன் கணபதி, நீதன் சண், குபேஸ்(Nava Law), Dr. கிருபாலினி மற்றும் Germany -Hamburg மாநில முன்னாள் பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் “இயன் கரன்” அவர்களும், அவரது பாரியாரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

இந்தச் சுற்றுப் போட்டிகளில் அதிகம் கேடயம் பெற்ற நாடு “கனடா” என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதன்மை வெற்றிக் கிண்ணமான (Challenge cup) கனடாவின் சார்பில் கடந்த காலங்களில் பல வெற்றிக் கேடயங்கள் வென்ற “செறினா சிங்கராயா'” என்ற 13 வயது இளம் கனடிய வீராங்கனைக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விளையாட்டுப் போட்டிகள் இனிதே நிறைவடைந்த நிலையில் போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து வீரர்களையம் மகிழ்விக்கும் வகையில் இராப்போசன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  Estate Banquet Hall , இல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கனடாவின் முன்னனி இசைக்குழுவான “அக்னி” தங்கள் இசையால் விருந்தினர்களை மகிழ்வித்தார்கள். இந்த சுற்றுப் போட்டியை வெற்றிகரமாக நிகழ்த்தி முடிப்பதற்கு கைகொடுத்த அனுசரணையாளர்கள் அனைவரும் இரவு விருந்தின்போது கௌரவிக்கப்பட்டார்கள். இறுதிச் சுற்றுப்போட்டிகள் சம்பந்தமான விடயங்கள், அனசரணையாளர்களின் விளம்பரங்கள், வாழ்த்துச் செய்திகளைத் தாங்கிய சிறப்பு விழா மலரும் அங்கு வெளியிடப்பட்டது.

அடுத்த ஆண்டுக்கான (2018) சுற்றுப் போட்டி “டென்மார்க்” நாட்டில் இடம்பெற முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கனடாவில் இடம்பெற்ற போட்டியானது பூப்பந்தாட்ட விளையாட்டில் பலரது ஆர்வத்தையும் தூண்டியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அது அடத்த ஆண்டுக்hன போட்டிகளில் மேலும் அதிகப்படியான நாடுகளையும் விளையாட்டு வீரர்களையும் பங்குபற்றச் செய்வதற்கான உந்துதலை கொடுத்திருக்கும் என நம்பலாம். இந்த பூப்பந்தாட்ட போட்டியானது கனடாவின் தமிழ் மக்களிடையே மட்டுமல்லாமல் வேற்றின மக்களையும் கவர்ந்திருக்கிறது என்பதை பார்வையாளர்களாக அவர்கள் கலந்து கொண்டதிலிருந்து தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

போட்டியில் பங்குபற்றியவர்கள் மற்றும் அவர்களோடு கூட வந்தவர்கள் அனைவருமே தத்தமது சொந்தச் செலவிலேயே கனடாவுக்கு வந்து கலந்து கொண்டார்கள் என்பது பூப்பந்தாட்ட விளையாட்டில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. தேசம் தேசமாய் பிரிந்து வாழும் நாம் விளையாட்டின் மூலம் தமிழர்களாய் ஒன்று கூடி மகிழ்ந்தோம் என்று பெருமை கொள்ளும் வகையில் இருநாள் நிகழ்வுகளும், புதிய அறிமுகங்களும், சந்திப்புகளும் அமைந்ததாக நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் கருத்தாக இருந்தது.

கனடாவில் இடம்பெற்ற தமிழரின் சர்வதேச பூப்பந்தாட்டப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு பலரது பங்களிப்பு கைகொடுத்திருக்கிறது. அனுசரணை வழங்கிய வர்த்தகப் பெருமக்கள், தன்னார்வத் தொண்டர்கள், விளையாட்டில் பங்கு பற்றி தமது ஆர்வத்தை வெளிப்படுத்திய கனடிய மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், நேர்மையோடு செயற்பட்ட நடுவர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், ஊடகங்கள் போன்றவை போற்றுதலுக்கு உரியவர்களாக கருதப்படுகிறது. பெருந்தொகையான பார்வையாளர்களின் வாகனங்கள் வீதியோரங்களில் தரிப்பதற்கான வசதியை ரொரன்ரோ மாநகரசபை இலவசமாக வழங்கியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐந்து வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட தமிழரின் சர்வதேச பூப்பந்தாட்டப் போட்டியானது இம்முறை கனடாவில் மிகவும் சிறப்பாகவும், போற்றக்கூடிய வகையிலும் இடம்பெற்று முடிந்திருக்கிறது. இதற்கு காரணகர்த்தாக்களாக விளங்கிய கனடாவின் பூப்பந்தாட்ட ஏற்பாட்டுக் குழுவினர் மிகவும் திறம்பட செயல்பட்டு தமது திறனை வெளிப்படுத்தி உள்ளார்கள். வெற்றிpகரமான ஒரு நிகழ்வை நிகழ்த்தி முடித்ததற்கான வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.