நிமிடத்துக்கு நிமிடம்,வியர்வைத் துளிகளை வழித்தெறியத் தேவையற்ற,குளிருக்கான ஆடைகள் எவற்றினும் தேவைகளற்ற, ஒரு கச்சிதமான காலநிலை.பூமி விரைவாகச் சூடாகி, உலகம் முழுவதுமே குழப்பமான காலநிலையை எதிர்கொள்கின்ற இந்தக் காலகட்டத்தில் , கனடா போன்ற ஒரு நாட்டில் இத்தகையதான நாட்கள் கிடைப்பதென்பது மிக அரிது.

அத்தகையதொரு கச்சிதமான காலநிலையைக் கொண்டிருந்த நாளில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களாக உறவுகளும் நண்பர்களும் ஒன்று கூடினோம். இடம்: ஸ்கார்புரோ சீனக் கலாச்சார மண்டபம் நாள்: ஆவணி 19,2023

பதினெட்டு வருட இடைவிடாத கற்றலுக்குப் பின்னர் இருவரும் தங்கள் திறமைகளை அரங்கேற்றத் தயாராக இருந்தார்கள்.

இந்துமத சம்பிரதாய  நிகழ்வுகளுடன் விழா ஆரம்பமாகியது.மொத்தமாக ஒன்பது நடனங்கள் அரங்கேற்றப்பட்டன. தனியொரு குழந்தையின் நடன நிகழ்வெனில், இந்தக் குழந்தை இந்நிகழ்வு முழுவதையும் எப்படித் தனது தோள்களில் சுமக்கப் போகின்றதோ என்ற பதட்டம்தான் பார்வையாளர்கள் மனதில் வந்து போகும்.

ஆனால் இங்கே இந்த இரட்டையர்கள் , ஒருவருக்கு மற்றவர் சளைத்து விடாமல் நிகழ்ச்சியை பார்ப்போர் விழிகளுக்கு விருந்தாக எடுத்துச் சென்றதுதான் மிகச்சிறப்பு.

இதை எழுதும் நான் சங்கீத இராகங்களை அறிந்தவனோ அன்றில் நடன முத்திரைகளுடன் பரிச்சயமானவனோ அன்று ,ஒரு சாதாரண பாமரன், ஆனால் நிச்சயமாக என்னால் ஒன்று சொல்லமுடியம், அது,

தங்களது பதினெட்டு வருடக் கற்றலை நடனக் கலைஞர்கள் வெளிப்படுத்தியிருந்த விதம் மிக உயர்ந்த பாராட்டுக்குரியது.

இருவரதும் பலங்கள், பலவீனங்களை சரியான முறையில் உள்வாங்கி , அவர்களது நடனகுரு மாணவர்களை நன்றாக நெறிப்படுத்தியிருந்தார் என்பது கண்கூடு.

நடனம் என்பதும் உடல் உழைப்புத்தான். நேரம் ஆக ஆக, களைப்பும் சோர்வும் கலைஞர்களைப் பற்றிக் கொள்ளும், ஆனால் இங்கே இவர்களோ , அடுத்தது அடுத்தது என தங்கள் திறமைகளால் ஒவ்வொரு நடனத்திலும் ஜொலித்தார்கள்.

இசைக்கலைஞர்களைப் பற்றிக் கூறவே தேவையில்லை.

நடனகுருவின் நட்டுவாங்கத்துடன் சேர்த்து மூன்றே மூன்று இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு ஒரு பெரிய இசை சாம்ராஜ்யத்தையே நடத்திக் காட்டிவிட்டார்கள். ஒரு இடத்தில்கூட விழாவின் நாயகர்களின் கலை வெளிப்பாடுகளை மீறி தங்கள் வித்துவங்களைக் காட்ட முயலவில்லை.

விழாவிற்கு பிரதம விருந்தினராக வந்திருந்த அம்மையாரின் ஆங்கில உரை, விழாவின் முழுச் சிறப்பையும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருந்தது என்றால் அது மிகையில்லை.

விழாவைத் தொகுத்து வழங்கிய இளைஞர்கள் இருவரும் மிகுந்த சிரத்தையுடன் தங்கள் கடமைகளைச் செய்ததைப் பாராட்டியே ஆகவேண்டும்.

விழாவின் ஹைலைட்டாக நான் கரைந்துபோன இடம் எதுவென்றால்,பாடகர் அருண் கோபிநாத் “ நின்னைச் சரணடைந்தேன் “ என கண்ணம்மாவை தன் குரல் இனிமையால் அழைத்துவர, அதற்கு செல்வி ஹரிணியின் நடனமும் அபிநய பாவங்களும் , அந்த பாரதியின் கண்ணம்மாவே கண் முன்னால் வந்து நின்றதுபோல் தோன்றியதுதான்.

நிகழ்வின் வெற்றிக்கு உழைத்த அனைத்துக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்!

-அவதானி