கனடாவில் கோடைகாலம் வந்தால் நூல் வெளியீட்டு விழாக்கள் தொடர்ந்து நடைபெறுவதுண்டு. அணிந்துரை அல்லது வாழ்த்துரை எழுதவோ அல்லது வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றவோ சில எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களைக் கொண்டு வந்து தருவதுண்டு. அப்படி என்னிடம் சமீபத்தில் கிடைத்த அந்த நூல்களை எப்படியாவது ஆவணப் படுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. எனக்குக் கிடைத்த நூல்களை மட்டும், சர்வதேச ஆர்வலர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதாலும், மற்றும் அடுத்த தலைமுறையினருக்குப் பயன்படும் என்பதாலும் இங்கு ஆவணப்படுத்துகின்றேன்.

எழுத்தாளர் அகில் சாம்பசிவம் தொகுத்து வெளியிட்ட ‘இலக்கியவெளி’ சிறப்புமலர் 3-12-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றது. எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் ‘ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்’ (கவிதைத்தொகுப்பு), ‘நவீன விக்கிரமாதித்தன்’ (நாவல்), வ.ந. கிரிதரன் கட்டுரைகள் ஆகியன 19-11-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றது. இதே தினத்தில் கலாநிதி சண்முகம் வெற்றிவேல் எழுதிய ‘இலக்கியத்தில் உளவியல்’ ‘தமிழர் பண்பாட்டு அடையாளச் சிக்கல்கள்’ ஆகிய நூல்கள் ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றன.

திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களின் ‘ஒற்றை வானமும் ஒரு பறவையும்’ (கவிதைத் தொகுப்பு ) ‘பொன்வண்டு’ (சிறுகதைத் தொகுப்பு) ஆகியன கனடியத் தமிழ் வானொலியால் 12-11-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றது. கனடா தமிழ் கவிஞர் கழகத்தின் கவிச்சரம் இதழ் 5-11-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. ஒலி,ஒளி ஊடகர் பி. விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூல் அறிமுகவிழா 4-11-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் நடைபெற்றது. எழுத்தாளர் சம்பந்தனின் ‘விழியும் துளியும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு 14-10-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றது. உரையாளர் பொன்னையா விவேகானந்தனின் ‘தமிழ்மொழிக் கல்வி,’ ‘தமிழ்ப்பண்பாடு,’ ‘நாடகங்கள்,’ ‘பெயர்வுத் தமிழ்ச்சமூகம் – இருப்பும் இடர்களும்’ ஆகிய நூல்கள் 8-10-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிட்டு வைக்கப்பெற்றது.

மாவை நித்தியானந்தனின் ‘இனிச் சரிவராது,’ ‘ஐயா லெக்சன் கேட்கிறார்’ ஆகிய நூல்கள் வெளியிட்டும், ‘சின்னச் சின்ன நாடகங்கள்,’ ‘சட்டியும் குட்டியும்,’ ‘நாய்க்குட்டி ஊர்வலம்’ ஆகிய மூன்று நூல்கள் ஸ்காபரோவில் 7-10-2023 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தும் வைக்கப்பட்டன. மறுமலர்ச்சி மன்றத்தின் சிறுகதைப் போட்டியில் தெரிவான சிறுகதைகள் அடங்கிய ‘மறுமலர்ச்சி’ நூல் அறிமுகவிழா ஸ்காபரோவில் 1-10-2023 ஆம் ஆண்டு நடைபெற்றது. வீணைமைந்தன் கே.ரி. சண்முகராஜாவின் ‘தமிழ் சினிமாவும் நடிகர் திலகமும்,’ ‘மண்ணும் மனசும்,’ ‘தமிழ் சினிமாவில் மகாகவி பாரதி பாடல்கள்,’ ‘மறக்கத் தெரியாத மனசு’ ஆகிய நூல்களின் அறிமுகவிழா ரொறன்ரோவில் 23-09-2023 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதே தினத்தில் கனடா தொல்காப்பிய மன்றத்தின் ‘தொல்காப்பிய ஆண்டுமலர்’ ஸ்காபரோவில் வெளியிட்டு வைக்கப்பெற்றது.

எழுத்தாளர் அகணி சுரேஸ் அவர்களின் ‘குவலயம் ஆளும் குடிசார் பொறியியல்’ என்ற கட்டுரைத் தொகுதி 13-8-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிட்டு வைக்கப்பெற்றது. தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ என்ற நாவல் 30-7-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் அறிமுகம் செய்து வைக்கப்பெற்றது. ஆசி காந்தராஜாவின் ‘அகதியின் பேர்ளின் வாசல்’ என்ற நாவல் ஸ்காபரோவில் 29-7-2023 ஆம் ஆண்டு வெளியிட்டு வைக்கப்பெற்றது.

எழுத்தாளர் குரு அரவிந்தன் வாசகர்வட்டத்தின் ஆதரவில் ‘அம்மாவின் பிள்ளைகள்’ (நாவல்), ‘ஆறாம்நிலத்திணை’ (கட்டுரை), ‘சதிவிரதன்’ (சிறுகதைத்தொகுப்பு) ஆகிய நூல்களின் அறிமுக விழாவும், இனிய நந்தவன பிரசுரத்தின் வெளிநாட்டுக் கதைத்தொகுப்பான ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ என்ற சிறுகதைத்தொகுப்பும், எழுத்தாளர் மாலினி அரவிந்தனின் ‘பறவைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் மிசசாக்காவில் 22-7-2023 ஆம் ஆண்டு வெளியிட்டு வைக்கப்பெற்றது.

தமிழர் தகவல் ஆண்டுமலர் ரொறன்ரோவில் வெளியிட்டு வைக்கப்பெற்றது. எழுத்தாளர் க. நவம் எழுதிய ‘எனினும் நான் எழுகின்றேன்’ என்ற கவிதை நூல் ஸ்காபரோவில் 24-6-2023 ஆண்டு வெளியிட்டு வைக்கப்பெற்றது. காலம்செல்வனின் ‘பனிவிழும் பனைவனம்’ என்ற நூல் ஸ்காபரோவில் வெளியிட்டு வைக்கப்பெற்றது. விஜயராணி மதியழகனின் ‘அழியாப்புகழ்’ என்ற கவிதைத் தொகுப்பு மென்றியலில் வெளியிட்டு வைக்கப்பெற்றது. புலவர் மயில்வாகனனின் ‘குறட்கவியமுதம்’ என்ற கவிதைத் தொகுப்பு ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றது. செ. அன்புராசா அடிகள் எழுதிய ‘அன்புள்ள ஆரியசிங்க’ என்ற நூல் ஸ்காபரோவில் 16-6-2023 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து வைக்கப்பெற்றது.

– குரு அரவிந்தன்