பாவம், தாளம், ராகத்தின் சங்கமமாக இடம்பெறும் பரதக்கலை பாரதநாட்டில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் மேடையேற்றப்படுகின்றது. தமிழ் நாட்டில் பரதநாட்டியம் எனவும், கேரளாவில் மோகினி ஆட்டம், அந்திராவில் குச்சுப்பிடி எனவும், ஒரிசாவில் ஓடிசி எனவும் வெவ்வேறு பெயர்களோடு இடம்பெறும் இந்திய நடன வகைகளில் தென்னகத்தில் பிரபலமானவை கதகளி, குச்சுப்பிடி, பரதம் என்பன என்பது பலரும் அறிந்தவிடயம். பரதக்கலையைப் பயனுறப் பயின்று மேடையேறுவது என்பது மிகவும் சிரமம் மிக்க ஒன்று. சகானாவின் பெற்றோரான தென்கரம்பனைச் சேர்ந்த மகேந்திரமோகன் தம்பதிகள் அவளுக்கு நடனத்தைக் கற்பிக்கவேண்டும் என்ற பேரவாக் கொண்டு இளமைக்காலம் முதலே பரதநாட்டியத்தைப் பயின்றுகொள்ள வாய்ப்புக்களை நல்கி வந்துள்ளனர். தொடர்ச்சியான முயற்சியின் பயனாக சகானா தனது அரங்கேற்றத்தை கடந்த 19.07.2009 அன்று மார்க்கம் கலையரங்கில் செய்து பாராட்டைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வுபற்றிய கட்டுரையையும் நிழற்படங்களையும் ஒளிக்காட்சியையும் இங்கே காணலாம்.

பாவம், தாளம், ராகத்தின் சங்கமமாக இடம்பெறும் பரதக்கலை பாரதநாட்டில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் மேடையேற்றப்படுகின்றது. தமிழ் நாட்டில் பரதநாட்டியம் எனவும், கேரளாவில் மோகினி ஆட்டம்,  அந்திராவில் குச்சிப்பிடி எனவும்,  ஒரிசாவில் ஓடிசி எனவும் வெவ்வேறு பெயர்களோடு இடம்பெறும் இந்திய நடன வகைகளில் தென்னகத்தில் பிரபலமானவை கதகளி, குச்சிப்பிடி, பரதம் என்பன என்பது பலரும் அறிந்தவிடயம். பரதக்கலையைப் பயனுறப் பயின்று மேடையேறுவது என்பது மிகவும் சிரமம் மிக்க ஒன்று. சகானாவின் பெற்றோர் அவளுக்கு நடனத்தைக் கற்பிக்கவேண்டும் என்ற பேரவாக் கொண்டு இளமைக்காலம் முதலே பரதநாட்டியத்தைப் பயின்றுகொள்ள வாய்ப்புக்களை நல்கி வந்துள்ளனர். தொடர்ச்சியான முயற்சியின் பயனாக தனது அரங்கேற்றத்தக் கடந்த 19.07.2009 அன்று மார்க்கம் கலையரங்கில் செய்து பாராட்டைப் பெற்றுக்கொண்டார். மிகுந்த அர்ப்பண சிந்தையோடு சகானா நடனத்தைப் பயின்றுள்ளார் என்பது வெளிப்படை.மாதவியின் அரங்கேற்றத்தைப் பற்றி இளங்கோவடிகள் சித்தரிக்கும் காலப்பிரமாணங்கள், நடன நுட்பங்கள் என்பனவற்றைக் கற்றுக்கொண்டதோடு மாதவி பொன்மயிலாளின் ஆட்டத்தை நேரே பார்த்தது போன்று அவ்வித பௌவியத்தைக் கொண்டவராக நடனத்தின் சுளிவு நெளிவுகளை எல்லாம் நன்கு கற்றுக்கொண்டு அரங்கேற்றத்தைத் தற்றுணிவோடு செய்து முடித்துள்ளமை அவர் எடுத்துக்கொண்ட சொந்த முயற்சியும் தன்னம்பிக்கையும் தான் என்பதனை அன்றைய அரங்கேற்றம் கோடிட்டுக்காட்டி நின்றது என்பதில் சந்தேகம் இல்லை.

மிகப் பெரும் நடன அரங்கேற்றங்களில் கூட இரண்டு நட்டுவனார்களைக் காண்பது அரிது. ஆனால் சகானாவின் அரங்கேற்றத்தில் ஆசிரியை நிர்மலா சுரேஷ் அவர்களுடன், ஆந்திராவில் இருந்து வருகை தந்த ஆர்.எல்.வி. ஆனந்த அவர்கள் குச்சுப்பிடி நடனத்தை மிகக் குறுகிய காலத்தில் பயிற்றுவித்து அரங்கேற்றத்தின் இரண்டு நடன உருப்படிகளாக ஆக்கி அவளை ஆட்டுவித்தமையை பார்த்திருந்த அனைவருமே வியந்து பேசியதோடு மட்டுமன்றி ஆனந்தைப்பாராட்டாதவர்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். குச்சுப்பிடி நடன வகைகளில் இரண்டு அங்கு இடம்பெற்றிருந்தது. ஒன்று தட்டத்தில் நின்று நடனமாடுவதோடு தலையில் செம்புவைத்து ஆடும் நடனம் ஒருவகை. அதேபோன்று இன்னொருவகை நடனம் நவ ரசங்களைப் பிரதிபலிக்கும் தன்மையைக் கொண்டது போன்ற ஒரு நாட்டிய நாடக அமைப்பினைக்கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்த நடனம். விஸ்னுவின் பத்து அவதாரங்களையும் எடுத்து சித்தரிக்கும் ஒரு கிராமிய நாட்டிய வகையைச் சார்ந்த பாணியில் அமைந்திருந்தது நடனம். பாடல் தமிழில் இல்லாதகாரணத்தால் பெரும்பாலனவர்களால் அதன் உட் பொருட்களை நன்கு விளங்கிக் கொள்வதில் சிரமம் காணப்பட்டது என்பது உண்மைதான் என்றாலும் சகானாவின் பதம், பாவம் இரண்டுமே தெற்றென பொருட்களை விளங்கவைத்தன என்றே சொல்லவேண்டும். பாடகரான கேரளாவைச் சேர்ந்த அருண் கோபிநாத் மிகவும் சிறந்த பாடகர் மட்டுமல்ல அவர் இசைக்கல்லூரி விரிவுரையாளராகவும் பணியாற்றும் திறன் கொண்டவர். தந்தன பதம் என்னும் கிராமிய பாடலுக்கு ஆடிய நடன உருப்படி சற்று வித்தியாசமான பாணியில் அமைந்திருந்தமை சபையோரைக் கவர்ந்திழுத்திருந்தது.

வித்துவான் அமிர்தநாத் கலப்புரிகள் மிருதங்கத்தையும், தபேலாவையும் பொருத்தமான வேளைகளில் மாறிமாறி இசைத்துச் சபையோரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டார். இடைவேளையின் போது அருண் கோபிநாத் அவர்களால் இசைக்கப்பட்ட 'பாட்டும் நானே பாவமும் நானே' என்னும் பாடலுக்கு மிருதங்கம், தபேலா, வீணை, வயலின், புல்லாங்குழல் இசைகள் மிகக் கச்சிதமாக ஒத்தாசை வளங்கின. வீணையை ஜெயந்தி ரட்ணேஸ்வரனும், வயலினைக் இசைஞான பூபதி கேசவமூர்த்தியும், புல்லாங்குழலை ஸ்ரீமதி கமலா சதாசிவமும் நல்கிச் சிறப்பித்தனர். 
நடராஜரின் சிலை வைக்கப்பட்டு சலங்கைப் பூசைகள் இயற்றப்பட்டு அமைதியான முறையில் ஆரம்பமான நடன அரங்கேற்றத்தில் முறைப்படியான புஸ்பாஞ்சலி, ஜதீஸ்வரம், தொடர்ந்து மீனாஷ்சி ஸ்துதி, வர்ணம் என்பன இடைவேளைக்கு முன்னராக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இறைவனுக்கே எனது முதல் வணக்கம் என்பது தமிழர் பண்பாட்டில் இரண்டறக்கலந்துவிட்ட ஒன்று. முதலில் இராகமாளிகாவில் அமைந்த புஸ்பாஞ்சலி நடனத்திலேயே சகானாவின் நடனத்தின் திறன் மிளிரத்தொடங்கியது. மலர்களால் இறைவனை அர்ச்சிப்பதான நடன அமைப்பைப் கொண்ட புஸ்பாஞ்சலி எல்லா பரதநாட்டிய அரங்கேற்றத்திலும் ஆரம்பத்தில் இடம்பெறும் ஒரு உருப்படி என்பது குறிப்பிடத்தக்கது. இறைவணக்கத்தை நடன நர்த்தகி வெளிக்காட்டித் தனது உள்ளத்தை இறைவனிடம் ஒப்படைக்கும் இனியதொரு உருக்கமான காட்சியாக இந்தப் புஸ்பாஞ்சலி அமைகின்றது. மாலை கட்டி தான் அணிந்து அழகுபார்த்து அதனை இறைவனுக்கு அழகுபார்த்தார் காரைக்கால் அம்மையார். அதேபோன்று இந்த புஸ்பாஞ்சலி நடனத்திலும் மாலையைக்கட்டி இறைவனுக்கு அணிந்து தனது உள்ளத்தை ஒப்படைக்கும் ஒப்பனையை உள்ளவாறே காண்பித்தார் சகானா என்றால் மிகையாகாது. 
தொடர்ந்து இடம்பெற்ற ஜதீஸ்வரம் இராஜாளி இராகத்திலும், ஆதி தாளத்திலும் அமைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. முத்திரைகளாலும் உடல் அசைவினாலும் கருத்துக்களை வெளிப்படுத்தும் நடன வகையான ஜதீஸ்வரத்தை மிகச் சிறப்பாகவும் துல்லியமாகவும் எடுத்துக்கையாண்டார் சகானா. அதனைத் தொடர்ந்து மீனாஷ்சி ஸ்துதி நடனம் ஆபோகி இராகத்திலும், ஆதி தாளத்திலும் அமைத்து வெளிக்காட்டினார் சகானா. பாண்டிய மன்னனின் புதல்வியாக அவதரித்து கையில் கிளிப்பாவையுடன் வனத்தில் தவம் இருந்த மீனாட்ஷியின் வரலாற்றைச் சித்தரிப்பதாக அமைந்திருந்தது நடன அமைப்பு. கடம்ப மரத்தின் கீழ் இருந்து தவமிருந்து ஆடல் வல்லான் நடராசப்பெருமானின் திரு உருவத்தை வணங்கி சுந்தரேசுவரப் பெருமானைத் திருமணம் செய்த மீனாக்ஷியின் வரலாற்றை காதல் ததும்ப எடுத்து அமைக்கப்பட்ட பாடல்களோடு கூடிய ஒரு நடன உருப்படியாக அமைந்திருந்தது. 
தொடர்ந்து இடம்பெற்றது பரதநாட்டியத்தில் மிகவும் நீண்ட காலப்பிரமாணத்தை உடையதாக அமைக்கப்படும் வர்ணம் என்பதாகும். வர்ணத்தில் பல வகைகள் காணப்படுகின்றன. இங்கு நிருத்தியம், நிருத்தம் இரண்டையும் இணைத்து மேற்கொள்ளப்படும் ஒரு உருப்படி வகையினதாகும். தாளம், பாவம், என்பனவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் முறைமையைப் பின்பற்றியதாக அமைகின்றது இந்த நடன அமைப்பு. சுமார் 30 நிமிடங்களைக் கொண்டதாக இந்த நடனம் தயாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 'சரவண பவ குகனே' என்னும் பாடலை ஹமாஸ் இராகத்திலும், ஆதிதாளத்திலும் அமைத்து அருண் பாட களைப்புச் சலிப்போ இளைப்போ இன்றி ஆடினார் சகானா. இந்த வர்ணத்தில் முருகனை நினைந்து அவரது பிரபலமான கதைகளைச் சித்தரிப்பதாக அமைந்திருந்தது. ஒளவைக்கு சுட்டபழம் நல்கிய இடைச்சிறுவனாக, ஒளவையாக, பிள்ளையாராக. யானையாக, வள்ளியாக பல்வேறு வடிவங்களில் காட்சி தந்தார் சகானா. அத்தனை உருவங்களையும் உருவக்பபடுத்தினார் தனது நடன ஆற்றலால் என்றால் மிகையாகாது. 
வர்ணத்தைத் தொடர்ந்து குச்சிப்பிடி நடனங்களும், அதனைத் தொடர்ந்து பதம், கீர்த்தனம், தில்லானா என்பன இடம்பெற்றன. 
மொத்தத்தில் ஒரு நல்ல நடனத்தைப்பார்த்த திருப்தி ஏற்பட்டது. இந்த அரங்கேற்றத்திற்கு பிரதம விருந்தினராகக்கலந்து கொண்டு உரையாற்றினார் உதயன் பத்திரிகையின் அசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம்.  அவர் உரையாற்றும் போது சகானாவை இரண்டுவயதுக் குழந்தையாகக் கண்ட போது அவள் துள்ளித் திரிந்த நாட்களை எண்ணிப்பார்க்கும்போது இன்று நடன அரங்கேற்றம் செய்கின்றாள் என்பதனைப் பார்த்த்து நான் பிரமிப்படைந்துவிட்டேன். இந்த நடனத்தைப்பார்க்கும் போது எனக்கு மிகவம் மனமகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒளையாக, பிள்ளையாராக பல நிலைகளில் நின்று அவர் மேற்கொண்ட நடனம் உண்மையிலேயே அவரின் சிறப்பை, திறமையை எடுத்துக்காட்டுகின்றது. அவளை இந்த நிலைக்குக் கொண்டுவந்த மகேந்திரமோகன் எனது நீண்டநாள் நண்பர். நாங்கள் இருவருமே இணைந்து பத்திரிகைத் துறையில் வேலை செய்திருந்தோம். பொறுப்போடு பிள்ளைக்கு என்ன கற்றுத் தரவேண்டுமோ அதனைக் கற்றுத் தந்து அவளை இன்று ஒரு சிறந்த நடன நர்த்தகி ஆக்கியுள்ளார். தாயகத்தின் நிலைமைகளால் மனமுடைந்து போயிருக்கும் பலருக்கு இத்தகைய நிகழ்வுகள் சற்று மன அமைதியைத் தரத்தக்கனவாக அமைகின்றன என்றும் உரைத்தார். 
தொடர்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொணடு உரையாற்றிய முன்னைநாள் யாழ் பல்கலைக்கழகத் தமிழத்துறைப் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் உரையாற்றும்போது இன்று சகானா மகேந்திரமோகனின் நடன அரங்கேற்றம் சாதாரணமான அரங்கேற்றங்களில் இருந்து மாறுபட்டதாக அமைகின்றது என்பது எனது அபிப்பிராயம். மிகத் திறமையோடு தனது திறனை வெளிக்காட்டிக்கொண்டிருக்கின்றார் சகானா. அவர் ஆடிய நடனத்தில் ஒரு நாட்டிய நாடகத்தையே முழுமையாககத் தந்துள்ளமை போன்ற ஒரு கருத்து எனக்குப் படுகின்றது. ஒளவையை, இடைச்சிறுவன், பிள்ளையார் என்பனவற்றை அவர் நடிக்கும்போது தத்துருவமாக அவை எம்முன்னே வந்து நிற்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவதாக அமைந்தது அவரது நடனம் என்று அவர் தொடர்ந்து உரையாற்றும்போது பெற்றோர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கலையைப் பிள்ளகைளுக்குக் கற்றுத் தரவேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார். நடனம்,  இசை,  கராட்டி போன்ற கலைகளை மேலதிகமாகக் கற்றுக்கொள்ளும் பிள்ளைகளுக்கு பல்கலைக் கழகத்தில் அனுமதி கிடைப்பதில் சிறப்புரிமை கொடுக்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். 
இவ்வரங்கேற்றத்தை பொன்னையா விவேகானந்தன் தனது அழகு தமிழிலும் செல்வி லமா தவகுமாரன் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கி வழிநடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. வானொலி, தொலைக்காட்சி, மேடைப் பேச்சு எனப் பழக்கப்பட்டவர் பொன்னையா விவேகானந்தன். அவர் மகேந்திரமோகனின் வகுப்புத் தோழனாக யாழ் இந்துக்கல்லூரியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. செல்வி லமா முதன்முறையாக மேடையில் தோன்றினாலும் தனது ஆடம்பரமற்ற, அடக்கமான பேச்சாலும், குரல் வளத்தாலும் சபையோரைக் கவர்ந்து கொண்டார் எனலாம். 
இனிதே நிறைவுற்ற அரங்கேற்றத்தில் இறுதியாக பரத நாட்டிய ஆசிரியை ஸ்ரீமதி நிர்மலா சுரேஸ் உட்பட அனைத்துக் கலைஞர்களும் கௌரவம் செய்யப்பட்டார்கள்.

த.சிவபாலு -எம்.ஏ

 

 

[Best_Wordpress_Gallery id=”22″ gal_title=”gallery12″]