சென்ற 23 ஆம் திகதி ரொறன்ரோவில் ‘செப்பேட்’ வீதியில் உள்ள சீன கலாச்சார மண்டபத்தில் பிரியங்கா, பிருத்திக்கா ஆகிய சகோதரிகளின் வீணை அரங்கப்பிரவேசம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீமதி. குகனேஸ்வரி சத்தியமூர்த்தி அவர்களின் மாணவிகளின் இந்த அரங்கேற்றத்திற்கு வைத்திய கலாநிதி சயந்தன் சாய்சர்மா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். கனடா தமிழர்தகவல் இதழின் பிரதம ஆசிரியர் திரு எஸ் திருச்செல்வம் மற்றும் எழுத்தாளர் குரு அரவிந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
திரு எஸ் திருச்செல்வம் தனது உரையில் ‘தமிழரின் பாரம்பரிய இசைக்கருவிகளான தோல், காற்று, நரம்பு வாத்தியங்கள் பற்றியும், ஒரே மரத்துண்டில் இருந்து தண்டியும், குடமும் குடைந்து செய்யப்பட்டதுதான் ‘ஏகாந்தவீணை’ என்றும் குறிப்பிட்டு, இந்த அரிய கலையை இத்துடன் கைவிட்டு விடாமல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை இவர்களுக்கு இருக்கிறது’ என்பதையும் குறிப்பிட்டார்.
எழுத்தாளர் குரு அரவிந்தன், ‘பண்டைக்காலம் தொட்டு எமது பாரம்பரிய இசைக்கருவியான வீணை வாசிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டு வீணைக்கொடி கொண்ட இலங்கை வேந்தன் இராவணண் சிறந்த வீணையிசைக் கலைஞன் என்பதையும், ‘மாசில் வீணையும்’ என்று 7 ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசரும், ‘எம்மிறை நல்வீணை வாசிக்குமே’ என்று சம்பந்தரும், ‘நல்லதோர் வீணை செய்தே’ என்ற பாரதியாரும், அதையே பாரதிதாசன் ‘துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து’ என்று பாடியிருப்பதையும் எடுத்துக் காட்டினார். இந்தப் பாரம்பரியக் கலையைக் கற்றவர்கள் சிலர்தான் கனடாவில் இருப்பதால், இவர்கள் இதை மறந்துவிடாது அடுத்த தலைமுறையினரிடமும் எடுத்துச் சென்று கற்பிக்க வேண்டும் என்ற தனது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட கலாநிதி சயந்தன் சாய்சர்மா அவர்கள் ஒவ்வொரு பாடல்களிலும் உள்ள நிறைகுறைகளைத் தெரிவித்து, இவற்றைத் திறமையாகக் கற்பித்த குருவான குகனேஸ்வரி சத்தியமூர்த்தியையும், ஆர்வத்Nதூடு இந்த வீணை இசையைக் கற்பிக்க வைத்த பெற்றோர்களான திரு. திருமதி ஜெயரட்ணம் அவர்களையும் பாராட்டினார்.
இந்த நிகழ்வில் இவர்களின் அம்மம்மா திருமதி தனலட்சுமியும் பேர்த்தியும் ஒன்றாக இணைந்து மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியதையும், ‘சின்னஞ் சிறுகிளியே,’ ‘துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து’ போன்ற பாடல்களை இவர்கள் மீட்டிய போதும் அதிக கரவொலியுடன் சபையோர் பாராட்டியிருந்தனர். இந்த நிகழ்வுக்கு ஸ்ரீ வாசுதேவன் இராஜலிங்கம், ஆனந்தகுமார் நடராஜா, சயந்தவி குலேந்திரராஜா, ரகுராம் கிருஸ்ணராஜா, ஜதீசன் ரவீந்திரன், மோகனன் ரவீந்திரன் ஆகியோர் முன்னணி இசை வழங்கினார்கள்.
நன்றியுரை வழங்கிய, பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த பாவலர் பாலரவி அவர்கள் கவிதை வடிவில் நன்றியுரை வழங்கியிருந்தார். நிகழ்ச்சிகளை ரஞ்ஜித் பரணிவாசகம், மைதிலி பரமேஸ்வரன் ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தனர்.
குரு அரவிந்தன்