வேறொன்றுமில்லை……✍️

உரையாடல்கள் வேண்டும்
நல்லோருடன் நல்லோர்களென தம்மை எண்ணிக் கொண்டிருப்பவர்களுடன் அசத்தலான புத்திசாலிகள்
சூட்சுமமான புத்திஜீவிகள் என….

இவர்களில் எவரிடம் எங்களை நாங்கள்
எங்ஙனம் பொருத்த முடியுமென்பதை
அறிந்து கொள்ள இவர்களுடனான
உரையாடல்கள் வேண்டும் அவர்கள்
வார்த்தைகளை உட்கொள்ள வேண்டும்

எமது தேடல் நாள்பட்டுவிட்டதாகவே
எனக்குத் தோன்றுகிறது
இவர்களிடம் எமக்குக் கூறுவதற்கு
நல்ல கதைகள் இருப்பின் நாம் எமது இலக்குகளையும் மறுபரீசிலனை செய்ய முடியும்

நேர்மையானவர்கள் ஆழமானவர்கள்
மற்றவர்களிடமிருந்து இரகசியங்களைக் காப்பாற்றக் கூடியவர்களென இன்னமும்
கொஞ்சமேனும் இணக்கமான உணர்வுகளுடன்
குற்றங்கள் காணாதவர்களாய் வேண்டும்

இனியேனும் சிக்கலான மனம் வெளிப்படுத்தும்
துல்லியமான சிந்தனைகளைக்
கூர்மையான நாக்கினால் செதுக்கும்
சொற்றொடர்களில் தெளிவு பெறவேண்டுமெனில்
இவர்களுடனான உரையாடல்கள் வேண்டும்..✍️

நன்றி🙏

—————————————————————————————————-

ஆச்சி ஊருக்குப் போகிறாள்……..😊

அன்றாடங்கள் மேம்பட்டு வருவதாக
உணரும் நாட்கள் சில உள்ளனவெனில்
அவை மோசமாகச் செல்வதாகத்
தோன்றும் நாட்கள் பலவும் இருந்தன ஒருபோதும் ஒரே மாதிரியாக எவையும் இருந்ததில்லை என்பதும் புரிந்தே இருந்தது
ஆனாலும் ஆச்சி ஊருக்குப் போகிறாள்…

பங்குனிபோய் சித்திரை வந்தால்
அகவை எண்பது ஆச்சிக்கு
பகலில் தூங்கி இரவில் விழித்திருக்கும்
முதுமைப் பருவம் அவளது
அலோபதி ஹோமியோபதி அனைத்தும்
அவள் உடம்புக்கு அத்துப்படி ஆனால்
எவற்றிடமும் இல்லை அவள் இருப்பை
இலகுவாக்கும் மருத்துவக் கெடுபிடி
ஆனாலும் ஆச்சி ஊருக்குப் போகிறாள்…

புலம்பெயர்ந்த இத்தனை வருடங்களில் எத்தனையோ தடவைகள் பயணித்தாலும்
புறப்படுமிடமோ சேருமிடமோவன்று அதற்கான பயணம்தான் அவளது விசனம் ஐந்து பத்து மணிநேரங்களல்லாமல் இருபத்துநான்கு மணிநேரங்கள் அதுவும் முன்னைப் போன்றற்ற உடல்நிலையுடன் தனியே பயணம் மனதில் கலக்கம்
ஆனாலும் ஆச்சி ஊருக்குப் போகிறாள்…

சொல்பேச்சுக் கேட்காமல் ஆச்சி
பிடிவாதமாக ஊருக்கு போவதில்
ஒரேயொரு மகளுக்குக் கோபம் ஆனால்
ஆச்சியின் விருப்பப்படி நடக்கட்டும் என்ற
ஒரேயொரு மகனுக்கு ஆச்சியின் ஆர்வம்
கவலையை மறுதலிக்கும் மகிழ்ச்சிக் கோலம்
கடல்கடந்து பயணம் போயிருக்கும் ஒரேயொரு
பேத்தியும் நேரலையில் வந்து தன் தமிழால்
ஆச்சி ஊருக்குப் போவதில் உள்ள
தன் ஆட்சேபணையைக் கூறிவிட்டாள்

விமானநிலையத்தில் சக்கரநாற்காலியில்
அமர்ந்தபடி ஆச்சி காட்டிய ஆளுமை
ஊருக்குப் போய்விட்ட உணர்வை
உண்டுபண்ணுவதாக ஆச்சியின்
உறவுகள் தமக்குள் பேசிக்கொண்டன

கண்கலங்கிய மகளின் கழுத்தைச் சரித்து
கன்னத்தில் முத்தமிட்டபடி ஆச்சி கூறினாள்
“நான் அங்கைபோய் வீட்டுவாசலை தொட்டு வணங்கி உள்ளே போனென்றால் என்னில் உள்ள
எல்லா நோய்களும் ஓடி ஒளிந்துவிடும்” என்று
ஏனெனில் தடைகள் பலவும் தாண்டி
ஆச்சிக்கு தன் ஊருக்குப் போகவேண்டும்…….❤️

நன்றி🙏

——————————————————————————————————————–

புதியதாய்…… …..😞

என்னைப் புரிந்துகொண்டதாக
நீ எண்ணிக் கொள்வதில்
எனக்குத் திருப்தியில்லை ஏனெனில்
நீ மற்றும் உன் எண்ணங்கள்
உன்னையே என்னில்
பொருத்திப் பார்ப்பதும் நான் நானாகவும்
நீ நீயாகவும் இருக்க மறுப்பதும்
இருவருக்கும் ஏற்புடையவையில்லை

என்னை நேசிக்கும் முறையை
நீ மாற்றிக்கொள்ள வேண்டும்
உன்னிடம் என் இருப்பின்
ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ளும்
என் தொடர் போராட்டம்
ஒரு முடிவிற்கு வரவேண்டும் ஆதலால்
என்னை நேசிக்கும் முறையை
நீ மாற்றிக்கொள்ள வேண்டும்

நீ என்னில் பார்க்கக்கூடிய
அனைத்தையும் நான் அறிவேன்
யாரோ ஒருவரைப் போன்றே
நானும் எப்போதும் இருப்பேன் என்று
நீ நினைப்பதெல்லாம்
அதரப் பழையதான சிந்தனைகள்
அவை காயங்களைப் பெருக்குமேயன்றி
கடுகளவு மெருகையேனும் காதலில் ஏற்றாது

எப்போதாவது என்னால் உன்னைப்
பிரிந்து செல்லமுடியும் என்று
நீ நினைத்திருக்கிறாயா
என்னில் நீ வைத்திருக்கும்
தப்பெண்ணத்தை கடந்து செல்ல
நான் உருவாக்கிய படம்தான் இந்தத்
தற்காலிகப் பிரிவினைவாதம் என்பதை
உன்னால் உணரவேனும் முடிந்ததா

உன் குரல் எனக்குள் இறந்து
நீண்ட நாட்களாகிறது
உன் உணர்ச்சித் தூண்டலில் இனி
நான் மண்டியிடவும் மாட்டேன்
நான் சிரிக்கும்போது உனக்கு
வலிக்குமென்று கூறியது எனக்கு
நினைக்கும்போதெல்லாம் வலிக்கிறது

நீ என்னில் பார்க்கும்
அனைத்தையும் நான் அறிவேன்
எப்பொழுதும் இப்பொழுது போன்றே
நான் இருந்துவிடுவேன் என்ற
உன்னுடைய பத்தோடு பதினொன்றான
பாவச்சிந்தனை மாறவேண்டும்
என்னை நேசிக்கும் முறையை
நீ மாற்றிக் கொள்ளவேண்டும்
அதற்காகவேனும் நமதுறவை அழித்து
நீயும் புதிதாக எழுதவேண்டும்……❤️

நன்றி🙏

——————————————————————————————————————–

நன்றி காற்றுக்கும் உனக்கும்…….🌹

காற்றின் வீச்சில் அசைந்தாடும் மரங்கள்
நீண்டு செல்லும் அவற்றின் முழக்கம்
உன் மௌன விழியசைவுகளில்
அங்கீகாரம் தேடும் ஒரு நட்புக்கான ஏக்கம்

அது என்ன வழங்கக்கூடும் என்பதை நான்
கவனமாகக் கேட்கிறேன் மற்றும்
உன் நம்பிக்கையான கண்களில்
நான் மகிழ்ச்சியையே காண்கிறேன்

உடைக்க முடியாத நூலால் தைத்த துணி வயதாகையில் வலிமையுடன் இருப்பது போன்றே
பேரிடரிலும் கரையாதது நம் நட்பென்பது
ஒரு மழை நாளில் நீ எனக்குக்
கற்பித்த பாடம்

மேகத்தை உடைக்கும் மழையின் தைரியமும்
இமைகளை மூடி கண்களில்
சூரியனை உறிஞ்சும் சூட்சுமமும்
உன் மென்மைக்கு நன்றி கூறுமுகமாய்
கடவுள் உனக்குக் கொடுத்த பரிசுகள்

இந்த நிபந்தனையற்ற அன்பின் அங்கீகாரத்தை வணங்குகிறேன் அன்பாகவும் ஏற்றுக்கொள்பவராகவும் இருத்தல் நம்
பொருந்தும் உள்ளங்களின்
அன்புப் பகிர்வென்பதை உணர்கிறேன்

விடுபட்ட துண்டுகளுடன் இருந்த இப்புதிர்
தற்போது முடிவுக்கு வந்துள்ளது
இன்னும் இவற்றிற்குத் தீர்வுகள் தேடிக்கொண்டிருப்பவர்கள்
எவ்வளவு துரதிர்ஸ்டமானவர்களெனில்
அதன் காரணமாய் நான் எவ்வளவு
பாக்கியசாலி என்பதைப் புரிய விழைகிறேன்
ஆதாலால் உனக்கும் உன்பால் வீசும் காற்றுக்கும் நன்றி❤️

நன்றி🙏

——————————————————————————————————————-

நினைவாஞ்சலி….💐

இப்படியாகிவிடும்
சூழல்கள் எப்பொழுதாவது வரும்
அப்படித்தான் கடந்த
நான்கு வாரவிடுமுறைகளில்
இரண்டு நாட்களும்
இடைவிடாது ஒரு நிகழ்வு

இருப்பு விகிதத்தை இறப்பு மேவியதோ
என்றுமாற்போன்று என்னமோ
மரணத்தின் இறுமாப்பாக இப்படி
இந்த மாதமட்டும் எட்டு நாட்களும் யாரோ ஒருவருடைய முப்பதாம்நாள் நினைவாக அமைந்துவிட்டது

அங்ஙனமெனில் போனமாதம் முழுவதும்
யாரோ ஒருவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறோம் என்று பொருள்
பலருக்கு ஒருவருடைய இருப்பு
அவரது மரணத்தின் மூலமாய்
நினைவுக்குள்ளாக்கப் பட்டிருக்கிறது

துண்டம் துண்டமாக பலரது வாழ்விலும்
அங்கம் பெற்றிருந்த ஒருவரது வரலாறு
முழுமையாக வெளிப்படுத்தப்படுவது
இந்த முப்பதாம்நாள் நிகழ்விற்தான்
அதனாற்தான் அன்றைய தினத்தில்
கல்வெட்டு என்ற ஒன்று வெளியீடாகிறது

ஆனால் நாங்கள் ஒருவர் மற்றவரது
இருப்பையும் மதிப்பதில்லை
இறப்பையும் மதிப்பதில்லை என்பதை
நிகழ்வில் எங்கள் ஒழுங்குமுறையே
காட்டிவிடுகிறது நமது மேசை உரையாடல்களால்
மேடையில் நடப்பதை மேசையில் நடப்பவை மீறி ஒலித்தன

திரும்பி வரும்போது மனைவி கூறினாள்
என்ன இருந்தாலும் அந்தியேட்டிச்
சாப்பாட்டின் சுவையே வேறுதான்
அவளிடம் எனக்குக் கூறுவதற்கு இன்னும் நிறைய
கதைகள் உண்டென நான் அறிவேன் ஏனெனில்
அவள் இருந்த பெண்கள் மேசையில் இருந்துதான்
அதிக சத்தம் வந்து கொண்டிருந்தது…😞

நன்றி🙏

———————————————————————————————————–

இன்னுமேன் தாமதம்…….✍️

எவ்வகை விருப்பினாலும்
நான் கடினமாகவில்லை
எவ்வகை இழப்பினாலும்
நான் பலவீனமடையவுமில்லை

நான் அசையாமலும் இல்லை
நீ என்மேல் வைத்திருக்கும்
வேரூன்றிய அன்பிற்காய்
இம்மியும் நான் பயப்படவுமில்லை

நான் பிணங்குமென் கேள்விக்குரிய
எண்ணங்களால் சூழப்பட்டிருக்கிறேன்
அன்பெனும் சிதைந்த வலைகளில் சிக்கிப் பெருவலியில் வாடுகிறேன்

என்னால் வருவதைக் காண
என்றுமே முடிந்ததில்லை பின்னர்
சுயவெறுப்பால் நானே நெய்த படுக்கையில்
நிம்மதியற்றுத் தூங்கவும் முடிவதில்லை

அலட்சியத்தின் ஒரு நீட்சியாய்
பல சந்தர்ப்பங்களில் தன்னை வெளிப்படுத்தப் பயப்படும் என் தனித்துவம்
தனிமைக்குள் அடங்கித் தவிக்கிறது

மேவுமுன் எண்ணங்களாலான ஆடைகளை
இனியேனும் நான் அணிவது முடியலாம்
தடைக்குள்ளான அன்பைப் புனரமைத்து
தாமதமின்றி நீ வருவது உண்மையெனில்..❤️

நன்றி🙏

———————————————————————————————————–

கவிஞர்கள் பிறந்த கதை…✍️

காகிதங்கள் யாவும்
ஒருநாள் ஒன்று கூடின
பேனாக்களுடன் பேசவேண்டிய
கட்டாயம் அவர்களுக்கு

பேனாக்கள் தங்கள்மேல்
வன்முறைகளைத் திணிப்பதாக
புகார் கூறின காகிதங்கள்
மறுதலித்துப் பேசின பேனாக்கள்

கோரிக்கைகளின்றிக் கிடந்த
சொற்கள் திகைத்தன
உச்சரிப்புத் தேவைகளற்றிருந்த
எழுத்துக்களுக்குக் கொண்டாட்டம்

தம் கடுமைகளுடைத்து வரிகள் படைக்க
இதயத்தில் ஏராள ஏக்கங்கள்-எத்தனை
காலந்தான் அவையும் கண்ணியம் காக்கும்

நடுவரான கடவுளின் நாயகி கூறினாள்
காதலர்களையெல்லாம் கவிஞர்கள் ஆக்கிவிடு
காகிதமும் பேனாவும்
பிறவிப் பெரும்பேறு அடையுமென்றாள்

காலமாற்றங்களைச் செவிமடுத்து
காகிதங்களும் பேனாக்களும் தத்தமது
செயற்திறன்களை வடிவங்களை மாற்றிவிட்டன
ஆனால் கவிஞர்கள் மட்டும் மாறவேயில்லை

ஆயிரத்தோராவது தடவையாக அவன்
தன் திறன்பேசியின் தொடுதிரையில் எழுதினான்
உன்னைவிட அன்பே வேறெவரும் இங்கே அழகென்று இல்லவே இல்லையென்று…😊

நன்றி🙏

———————————————————————————————————–

தலைமைத் தகைமை..😊

நியாயமற்று இருப்பதற்கான
எல்லா நியாயங்களும்
அநியாயத்திற்கு அவனிடம்
மிகத் தெளிவாகவே இருந்தன

வாசலை ஒட்டிய வரவேற்பறையில்
தன் பெற்றோரின் மாலையணிந்த படங்களோடு வள்ளுவரையும் ஒரு
ஓரத்தில் தொங்க விட்டிருந்தான்
கடவுளரின் படங்கள் வேறொரு
அறையில் மறைவாக இருந்தன

பெரும்பனிக் காலங்களில்
பனியொதுக்கும் இயந்திரத்திற்காகவும்
பசும் கோடைகாலங்களில்
புல்லுவெட்டும் இயந்திரத்திற்காகவும்

அக்கம்பக்கம் எல்லாம் விசாரித்து
அவர்கள் காரணங்களோடு கைவிரித்த பின்னர்
அவர்களை இனத்துவேசிகள் என்று சபித்தபடி
மூடி வைத்திருக்கும் தன் இயந்திரகளை இயக்கி
முணுமுணுத்தபடியே தன் கடமைகள் கழிப்பான்

அவனைத்தான் மக்கள் பிரதிநிதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் அமைப்பொன்றிற்கு
அடுத்த தலைவராக வேண்டுமென்று சில
அல்லக்கைகள் வந்து வருந்திக்
கேட்டுக் கொண்டிருந்தார்கள்

ஏனெனில் நியாயமற்று இருப்பதற்கான
எல்லா நியாயங்களும்
அநியாயத்திற்கு அவனிடம்
மிகத் தெளிவாக இருப்பதால்………😊

நன்றி🙏

——————————————————————————————————-

மயிலிறகே மயிலிறகே……🌹

பார்வைகளின் வீச்சம்
அளைய முடியாத புள்ளியில்
இழைய விழையும்
இதயங்களின் உரையாடல்

கதைத்துப் பேசிய இடங்களில்
சொல்லிக் களைத்த கதைகளில்
கூறப்பட்ட கனவுகளை
காபந்து பண்ணும் காதல்

மெல்லப் பேசுகின்ற இதயமும்
இரைந்து குரலெழுப்பும் புத்தியும்
முட்டிக் கொள்ளாதவிடத்து
நியாயப்படுத்தப்படும் ஊடலின் இருப்பு

மெளனமாய் இறுதியில்
ஒரு மயிலிறகாய்
காற்றில் அலைகிறது
நியமனத்திற்குள்ளான வாழ்க்கை❤️

நன்றி🙏

——————————————————————————————————————-

தோற்ற மயக்கங்கள்……🌹

கற்களிற் செதுக்கியவற்றை
ஓலைச்சுவடிகளில் ஏற்றினோம்
சுவடிகளில் ஏற்றியவற்றை
மரக்கூழ் காகிதங்களில் எழுதினோம்

காகிதங்களில் எழுதியவற்றை
இணையத்தில் ஏற்றி
மெய்நிகர் சேமிப்புகளில்
கடவுச்சொற்களால் காபந்து பண்ணுகிறோம்

இவற்றோடு பயணித்த காதல்மட்டும்
எப்பொழுது வேண்டுமானாலும்
தனியுரிமை மீறலைச் சந்திக்கும்
பரிதாபநிலைதான் இன்னமும் எங்களை ஈரமுடன் வைத்திருக்கிறது என்பதை நீயும்தான் ஏற்றுக்கொள்ளேன் என் கண்ணம்மா❤️

நன்றி🙏

————————————————————————————————–

இல்லை……..❤️

இல்லாதவற்றை அன்றில்
இயலாதவற்றை
இல்லை என்று கூறாதவரை
சுற்றஞ்சூழல் நட்பு உறவுகளென
ஏராள அழைப்புகள்…….

பொய்யிலேயே கை பூப்பறிப்பது
மனதை மரத்துப்போக வைத்ததில்
இல்லையென்பதை
ஏனென்ற காரணிகளுடன்
இல்லையென்றே விளம்பினேன்…

அரிதாரம் பூசுவது சருமத்தையன்று
ஆன்மாவைச் சிதைப்பதை
உணருகையில்
உள்ளதை உள்ளபடி கூற அது
இல்லையென்பதாய் எதிரொலித்தது

உண்மையில் இல்லையென்பது என்ன
அது ஒரு கசப்பான மருந்து
இல்லையென்ற உண்மையை ஏற்க மறுக்கும் கேட்போற்கு வெறுப்பையும்
இல்லையென்ற உண்மையை விளக்கிக் கூறவேண்டியதாய் ஆகிவிட்டதென மருகிக் கூறுவோற்கு வேதனையையும் தரும் அவசியமான கசப்பு மருந்து

கூட்டமாய் விலகும் பன்றிகளை விடவும்
தென்புடன் தலைநிமிரும்
ஒற்றைச் சிங்கமாய் நிற்பது உயிருடன்
இருக்கும்போதே வாழும் நிலை
இல்லையென்று கூறி இனியேனும் வாழ்ந்துதான் பார்ப்போமே…..😊

நன்றி🙏

———————————————————————————————————–

கேட்கக் கூடாது…………….❤️

கேட்கக்கூடாத ஒன்று
ஒரு ஓவியனிடம்
அவன் ஓவியப் பொருள் பற்றி..
ஒரு சிற்பியிடம்
அவன் அச்சிற்பவழி தரவிழையும்
சரித்திர வரைபுகள் பற்றி..

எழுத்தாளனிடமும் அங்ஙனமே
எழுத்தின் கருப்பொருள் பற்றி
அவன் இழையவிடும் தளைகள் பற்றி

கேட்கக்கூடாதவை இவை ஏனெனில்
அவர்கள் எண்ணித் துணிந்தவற்றை
உணரப் பணிய வேண்டியது நாங்களே

வெளிப்படுத்துவது கலைஞனின் திறமை
வாழ்க்கையை இயற்கையை
மற்றும் அவனது கற்பனை உட்பட
பற்பல விடயங்களென
எல்லாவற்றையும் வெளிப்படுத்துவது
ஒரு கலைஞனின் கடமை

அவற்றை அவன் அவனது
சொந்த வழியில் அவனது சொந்தப் பார்வையில் வெளிப்படுத்துவதென்பதே கலை
இறுதியில் படிப்போரின் பார்ப்போரின்
கேட்போரின் புரிதலே அக்கலையின் ஆகிருதியை முடிவு செய்யுமென்பதே நிலை

கலைஞனின் கவலை மக்கள் மட்டுமே
மனிதர்களை கதாபாத்திரங்களை
அவன் கலைகளாய் செதுக்குக்கிறான்
அக்கற்பனைச் சிற்பங்கள் இருட்டு முடிச்சுகளாய் வெளிச்சப் பொட்டுகளாய்
அவர்கள்வழி அவனை வழிநடத்துகின்றன

அவர்களின் பயணத்தை
அவர்களின் வாழ்க்கை பாதைகளை அழுத்தங்கள் எவையுமின்றி
சுதந்திரமாகச் சொல்வதேயன்றி அவன்
அவர்களுக்கான வழிகளை
அவர்களிடம் திணிப்பதில்லை

ஏனெனில் ஒரு கலைஞனுக்கு தன் படைப்புகளை நியாயப்படுத்துவது வேலையன்று நாங்களாகிய மக்களின் பரந்துபட்ட புரிதல்களால்
அவன் படைப்புக்கள்தான்
அவனை நியாயப்படுத்த வேண்டும் ஆக
கேட்கக் கூடாதவை அவையன்றோ…😊❤️

நன்றி🙏

—————————————————————————————————————-

இனிய சர்வதேச பெண்கள்தின வாழ்த்துகள்🌹🌹
International Women’s Day 2024.

பெண் இன்னமும் நடக்கிறாள்……✍️

For the women Not the destination but the journey itself has not yet begun.

அவளுக்கான சாலைகள் குறுகியவை
அவளது சந்திப்புகள் கடவைகள்
குரோதங்களால் நிறைந்தவை அவள்
செய்வதறியாது செய்யும் தவறொன்றோ
சற்றே சத்தமானதாய் சிரிப்பொன்றோ
அவளை நெருப்ப்பாற்றில் தள்ளிவிடும்

தன் சிறகுகளை நீட்ட வேண்டும்
என்று நீண்ட கனவு காண்கிறாள்
கொட்டுகள் கண்டு பயப்படாது
உயர உயரப் பறக்க விரும்புகிறாள்
எண்ணற்ற வேட்டைக்காரர்களின்
சஞ்சாரங்களை எண்ணி அஞ்சி அடங்குகிறாள்

நடக்க நடக்க அவள் அணியும் புன்னகை
கண்ணில் இருக்கும் கண்ணீரைத் துடைத்தெறிய போதுமானதாக இல்லை
எவரும் கண்டுகொள்ளாத அவளது அழகிய இதயத்து வலி துருவேறிய இரும்பாய்
அவள் உருவையே குலைக்கிறது

அவள் குரல் யாருக்கும் கேட்பதில்லை
ஒரு வாக்கியம் அல்லது ஒரு வார்த்தை
மகிழ்ச்சியின் சிரிப்போ அன்றில்
வலியின் அழுகையோ அனைத்தையும்
தன்னுள் அடக்குவதால் பெயரளவில்
தாய் என்று அழைக்கப்படுகிறாள்

சமயங்களில் இரவில் வானம் பார்க்கும்
அவளிடம் மேடை போட்டு நட்சத்திரங்கள் கூட்டமாய் அவள் துன்பங்கள் தீரவும்
அவலங்கள் தீரவும் வாழ்த்துவதாய் இங்கே
பெண்ணியம் பேசுவர்களின் கண்ணியப் பேச்சு
ஆனால் அவள் இன்னமும் நடக்கிறாள்..😢

நன்றி🙏

————————————————————————————————————

எதுவரை…………. 🌹

வாழ்வின் இறுதிக்கு வந்துவிட்டதாக
அடிக்கடி மனதிற் தோன்றுகையில்
உண்மையில் என் கனவுகள் தொடங்கும் தருணங்களில் நான் வாழ்வது புரிகிறது

வாழ்கிறேன் ஏனெனில் வாழ்ந்தாக வேண்டும்
என் அருகில் நீ இல்லாத போதிலும் உன்னைக் கனவினில் காண்பதற்காகவேனும்
நான் இன்னமும் வாழ்ந்தாக வேண்டும்

ஒன்றுமில்லாத நாட்களின் முடிவினில் இரவு விழும் போது நான் எங்கள் காதலை
புதிய கனவாகக் காண்கிறேன்
உன்னை இறுதியாகவேனும்
என் கைகளில் வைத்திருக்க வேண்டி…..

என் கனவுகளில் நீ என்னைப் பார்க்கும் வரை
அதிகாலைப் பனியின் அதிகாரம் ஓயும் வரை
என் கனவில் மணிக்கணக்கில்
என்னுடன் இருக்கும் வரை
இறுதியாக நாங்கள் ஒன்றாக
இணையும் என் கனவுகள் நனவாகும் வரை❤️

நன்றி🙏

———————————————————————————————————–

நலம் நலமறிய…..✍️

எப்பொழுதோ கேட்ட
ஒரு பாடல் வரியொன்று
ஞாபகத்தில் முட்டிமுட்டி
மோதிக் கொண்டிருக்கிறது

அந்த வரியிலிருந்து தப்பிய
இரண்டு சொற்கள் மட்டும்
ஈறுகளுக்கிடை சிக்குண்ட
இனிக்கும் வெல்லச் சில்லங்களாய்…

நீ மனதை உடைத்துப்
போன பின்னர் இப்படித்தான்
இன்பங்கள் சில்லம் சில்லமாய்
உடைந்த துண்டங்களாய்……

எங்கேயோ நலமாய் இருப்பதாக
நீ நடிப்பதை நான் அறியாதவாறு
பொய்யாகவேனும் பொது வெளியில்
யாரும் புரியாதவாறு ஒரு பதிவையிடு

ஈறுகளில் ஏறிய துணுக்கைகளை
வாயலம்பித் துடைத்தாற்போன்று
உன்னைப் பற்றிய எண்ணங்களையும்
நானும் என் மனமுடைந்து மனந்துடைத்து….😞

நன்றி🙏

—————————————————————————————————————-

நாமென்பது………………🌹

நமக்கு நாமே செதுக்கிக் கொண்ட
உணர்ச்சிக் கூண்டுகளில்
நாம் சிக்கித் தவிப்பதும்
அதை அறியாதிருப்பதென்பதும்
ஒரு இழப்பை விடவும் பெரிய துன்பம்

எங்கள் இழப்பின் எடையைச்
சுமக்கவும் வேறொருவரின்
வலியை மதிக்கவும் இடைவிடாது
கற்றுத்தர விழைகிறது இயற்கை

தற்கொலையென்பது தன்னைக்
கொல்ல விரும்புவதன்று தனக்குள் இருக்கும் வலியைக் கொல்ல விரும்புவது
என்பதைப் புரிந்து கொள்வது நம் கடமை

கனவாகவேனும் ஒவ்வொருவரும்
பணத்தால் வாங்க முடியாத ஒன்றை விற்க
பாதுகாப்பற்றவர்களுக்கு தைரியம் தர
விழிப்புணர்ச்சியற்றவற்கு
பொது அறிவு கொடுக்க மனதாலேனும்
தொடர்ந்து முயற்சிப்பதே முறைமை

தற்கொலையே முடிவென்பவற்கு
முற்றுப்புள்ளியன்று ஒரு காற்புள்ளி
கொடுக்க வேண்டும் ஏனெனில்
அவர்கள் தொடர்ந்து தங்கள் சொந்தக் கதைகளை இப்பிரபஞ்சத்தில்
எழுதக்கோருவதே கர்மாவின் கட்டளை

நம்மைச் சுற்றி எல்லாம்
சரியாக இருந்தால் மட்டுமே
நாம் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்க முடியுமென எண்ணி நாம்
சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு
அடிமையாவது சமயோசிதமற்ற மடைமை

அச்சங்களை எதிர்கொள்வதன் மூலம் இறப்பை மதிக்கவும்
தாராள மனதுடன் ஆக்கப்பூர்வமாக நேர்மையாக இருக்கவும் வாழும்
வாழ்க்கையை ஞானத்துடன் வாழவும்

எங்கள் சொந்த மதிப்புகளைப்
பிரதிபலிக்கும் மற்றும் கண்டறிய உதவும்
பல முரண்பாடான கேள்விகளை
எம்மை நாமே கேட்டிடின் நாமென்பது யாரென்பது சித்தத் தெளிவாகுமென்பதே உண்மை ❤️

நன்றி🙏

——————————————————————————————————————-

கவலைகள்
🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

கவலைகளற்ற வாழ்க்கை எவற்கும்
கனவிற்கூட வசமில்லை

துன்பதுயரங்களென்று
கடந்து விடப்போகும்
கணங்கள் பலவற்றால்
ஒரு வீடு சமைத்து அதில்
குடியிருப்பவர் நம்மில் பலர்

இருப்போர் இல்லாதோர்
எல்லோர்க்கும் கவலை உண்டு
இல்லாதோர்க்கு ஒரு கவலை
இருப்பவர்கட்கோ பல கவலை

இலை அவிழும் காலத்தில்
மரங்கள் மனமுடையுமெனில்
அவை வசந்த காலத்தில்
துளிர்வதைத் துறந்து விடும்

வீரனுக்குக் கவலை
விழுப்புண்
கோழையின் கவலை
நகக்கீறல்

வீரன் அதைத் தன் தகுதிகளால்
ஆட்கொள்ள
கோழையோ அதன் எரிவில்
குளிர் காய்கிறான்

கவலைகளின் ஊற்றுக்கண்களை
நாம் தேடி நிற்பின் அவை
பயமென்ற இடுக்குகளில்
பதுங்கியிருப்பது புரிய வரும்

நடந்தால் நல்லது
நடக்கவில்லையெனில்
அடுத்ததாய் உயர்ந்ததொன்று
எனும் மனோநிலை
எந்த நிலையிலும்
எவற்கும் முக்கியம்

கவலைகள்
புதைகுழிகள் போன்றவை
விலகி அவற்றிலிருந்து
தடம் பதித்தால்
திரும்பிப் பார்க்கையில் அன்று
பட்ட கவலைகள் யாவும் இன்று
தடயங்கள் வலுவிழந்த
தற்காலிகப் பின்னடைவுகளே
என்பது புரிய வரும்.
—————————
நன்றி.🙏

———————————————————————————————————

கனவு தேசம்……✍️

ஒருமுறைக்குப் பலமுறை
அவர்களது காடெரிந்தது
எரிப்புக்களின் எதிரொலியாய்
இவர்களது நதியுமுடைந்தது

தேசத்தை வரையறுத்து எங்ஙனமாய்
பிறந்த வீடு இருக்குமிடம் தேடித் திரும்பும் வழியை தமது மூதாதையர்களின் ஆத்மாக்களிடம்
இப்பொழுது இவர்கள் கேட்கின்றனர்

உண்மையான இன்பங்கள்
உளன்று திரிந்த புழுதி மண்ணின்
மடியில் உள்ளனதெனவும்
கனவு இவர்களை அங்கு அழைத்துச் செல்லுமெனவும் நம்புகிறார்கள் ஏனெனில்
இவர்கள் சுதந்திரமாகப் பிறந்த ஊர் அது

பருவகால பறவைகளாய்
இவர்கள் இடம்பெயர்ந்தனர்
அசையாத பனைமரங்களாய்

அவர்கள் அங்கேயே இருந்தனர்
ஒரு வீட்டுத் தோட்டத்தில்
இருபகுதியும் மீண்டும் இணையலாம்

இவர்கள் அனைவரும் ஒருவர்
என்றே கற்பனை செய்கிறார்கள்
துயரங்கள், காயங்கள் மற்றும்
அவமானங்கள் எவையுமில்லை
இவர்களின் கற்பனை தேசத்தில்

இவர்கள் தங்கள் அம்மாவின் காலடிகளில் நியாயங்கள் கற்றதில்
தைரியமாக இருக்கவும் நிரந்தர
இருப்பு நிர்மலமான தங்கள் சொந்த வானத்தின் கீழேயென்றும் நம்புகிறார்கள்

இவர்களின் மனதில் தாயகம்
தேங்கிய நிலையிலேயே உள்ளது இவர்கள் விட்டுச் சென்ற வாழ்க்கையை நீடிக்க
அவர்களுடன் அங்கே திரும்புவதற்காக இன்னமும் காத்திருக்கிறார்கள்…………✍️

நன்றி🙏
——————————————————————————————————–

என் மனச்சுவரில்…
என் முதற் காதலி
…………🌹
———————-
(சர்வதேச தாய்மொழி நாள்)

சிறுகதை
ஒன்றின்
முதல் வரியாய்
ஒரு அழகிய
கவிதையின்
கடைசி வாசகமாய்

எனக்குள்
நீ
அறையப்பட்டது
அவ்விதமே

விடலையா
வாலிபமா
பராயம்
ஞாபகத்தில்
இல்லை

ஆனால்
உன்
நெருடலான
பிரசன்னம்
மட்டும்

இன்றுவரை
என்
நெஞ்சிலே
தங்கி இருப்பதென்னவோ
உண்மை

இடுக்குகள்
தேடி அலையும்
ஈரம் போன்று
உன்னைச்
சுற்றி சுற்றியே
வருகிறேன்

முன்னும்
பின்னுமாய்
உன்
முந்தானையில்
தொங்கிச் சிரிக்கிறது
என் காதல்

அன்று
பேசு பொருளல்லவே
காதல்
பேசிக் கொள்ளாமலே
பிரிந்தோம்

இன்றோ
மாசடைந்த
பண்டமாய்
இதயம்

மாலை
மரியாதைகளுடன்
சிலுவையொன்றைச்
சுமக்கிறது

கனவுகளில் மட்டும்
நீ வந்திருந்தால்
நடுவயது மயக்கமென
நகர்ந்து நடந்திருப்பேன்

கற்பனை வேளைகளில்
தோன்றியிருந்தால்
என் கவிதைகளின்
பிறப்பிடம் நீயென
உனை
போற்றி வணங்கியிருப்பேன்

ஆனால் நீயோ
என் மூச்சுக்
காற்றானாய்

இப்பொழுதெல்லாம்
அடிக்கடி
ஈரப்பதன் இழக்கிறது
என் சுவாசம்
ஏனெனில்
உன் வருகையில்
சீர் இல்லை

உன் பெயர்
தமிழ்
உனக்குத் தொழில்
கவிதை
உனக்கான பதவி
என் முதற் காதலி.
————————
நன்றி🙏

——————————————————————————————————–

Happy Family Day 2024…….🌹

ஏனெனில் இது நம் குடும்பம்…….❤️

அழைக்க வேண்டும் என்ற எண்ணம்
அதிகரித்துக் கொண்டே போகிறது
ஆனால் அழைப்பதை மட்டும்
ஒத்தி வைத்துக்கொண்டே வருகிறோம்

நன்றாக இருக்கிறார்களா நமது
நல்லிருப்பை அவர்கள் அறிவார்களா
அவர்களில் யாருக்கும் திருமணமாகி விட்டதா
அவர்களுக்கு நெருக்கமானவர்களில் நமக்கு நெருக்கமானவர்கள் உள்ளனரா

அடிக்கடி நாங்கள் கவலைப்படுகிறோம்

கடைசிச் சந்திப்பை நாம் மறந்தோமா நாங்கள் மீண்டும் சந்திப்போம் என்பதில் நம்மைப்போன்றே அவர்களும் உறுதியாக உள்ளனரா

இன்னொரு நாளையும் வீணாக்கிடாது
பேசிடவே நாங்கள் விரும்புகிறோம் அந்த
ஒரேயொரு தொலைபேசி அழைப்பு
எல்லா மனவுளைச்சல்களையும் உடைத்தெறிந்து விடுமெனத் தெரிந்தும்………

தயங்குகிறோம் சராசரி மனிதர்களாய்
சின்னச் சின்னக் கோபங்கள் பாரிய மகிழ்வுகளை காவு கொள்வதை நிறுத்தி இன்றேனும் அந்த அழைப்பை ஏற்படுத்துவோம்
ஏனெனில் எமக்கு எம் குடும்பம் முக்கியம்❤️

நன்றி🙏

————————————————————————————————–

ஆதலினாற் பேசுவோம்……🌹

நவீன உலகம் பற்றிய முக்கிய
நல்ல விஷயம் என்னவெனில்
நல்ல உணர்வுகளைப் பற்றி
நாம் சுதந்திரமாகப் பேசலாம்

பேசுவதால் சில நேரங்களில் நாம் மிகவும் காயமடைகிறோம் ஏனெனில் நாம் நம்மை நம்புவதில்லை என்பதால் அல்லது எப்படி நம்புவதென்பதை மறந்துவிடுவதால்………..

முந்தைய தலைமுறையினருக்கு இந்த விவஸ்தைமிகு உணர்ச்சிகளால்
ஏற்படும் காயங்கள் மற்றொரு
உறவுப் பிரிவாக இருந்திருக்கும்

ஆனால் நவீன உலகில் இவை
அனைத்தையும் கடக்க இலகுவழி
உரையாடல்களுக்கு வாய்ப்புக்களுண்டு
ஆயினும் நாங்கள் இவற்றிற்கு முற்றிலும்
எதிரான செயல்முறைகளை நாடுகிறோம்

சுதந்திரம் என்ற சொல்லின் புரிதல்
இதயத்தில் ஏறாதவரைக்கும் எதிர்வரும்
இடர்களுக்குப் புதிய புதினங்களையும்
கலாச்சார மாற்றங்களையும் குறைகூறிப்
பயனில்லை ஆதலினாற் பேசுவோம்…❤️

நன்றி🙏

———————————————————————————————–

எங்கேயும் எப்போதும்……..❤️

காதலை ஏதோ
காய்ச்சலைப் போன்றும்
அந்த நோய்க்கு
ஒரு காதலர்தான்
பரிகார மாத்திரை
போன்றும் எண்ணாமல்
காதலை பிராணவாயுவாய்
எண்ணிச் சுவாசித்துப் பார்ப்பின்
காதல் இனிக்கும்………

காதல் சிலரது நோக்கில்
ஒரு பயணப்பாதை
மற்றும் சிலருக்கு ஒரு தரிப்பிடம்
அங்ஙனமாய்
நோக்கி நோகாமல்
காதலை நமது பயணமாகவே
எண்ணிப் பார்ப்பின்
காதல் இனிக்கும்………..

காதல் ஏதோ
பத்திரமாய் கையாளப்படவேண்டிய
கைக்குண்டு போன்று
பலருக்குள் மனவுளைச்சல்
பாதுகாக்கப்பட வேண்டிய
தேசத்தின் எல்லை போன்று
இடைவிடாத குடைச்சல்
அவற்றைக் களைந்துவிட்டு
காதலை ஒரு ஒற்றைப் புன்னகையாய்
எண்ணிச் சுமப்பின்
சுமப்பதும் எளிது
காதல் இனிப்பதும் உறுதி…….

கண்விழித்த நேரம் முதல்
கண்மூடித் தூங்கும்வரை
கண்ணுக்குத் தெரிபவை
காதால் கேட்பவை அனைத்தையும்
காதலித்துப் பார்ப்பின்
கண்மூடித் தூங்கையிலும்
காதல் நம்மைக் காதலிக்கும்
அத்தகைய என் காதலில்
நீயும் இருக்கிறாய்
என்பதாற்தான் என் காதலின்
பெயர் நீயானாய் என் கண்ணம்மா❤️

நன்றி🙏

———————————————————————————————————–

உண்டென்றெனில்…..✍️
Aftermath of a much ado Valentine’s😊

என் தலைவிதியின் மீது எனக்கு
ஒரு குறைபாடு உண்டு
இந்த முடிவற்ற தேடலில்
பல கருத்து வேறுபாடுகள் உண்டு

விதியின் நெகிழ்வான விரல்களால்
வாழ்க்கை கொடுத்த பாடங்களின்
ஒவ்வொரு பிரச்சினைக்கும்
எனக்குள் ஒரு ஆட்சேபனை உண்டு

முடிவில்லாத காதல்களுக்காக
நான் கடன் வாங்கிய புன்னகைக்காக
வாழ்க்கையை வாழ்வதற்கு முன்பே
இறக்க வேண்டி இருப்பதற்காக
எனக்குள் ஒரு ஆட்சேபனை உண்டு

ஆனால் என் இழந்த குழந்தைப்
பருவத்தை எப்படி மீட்டெடுப்பது
என்பதற்கு யாராவது பதில் கூறினால்
இந்த வேறுபாடுகள், எதிர்ப்புகள் அனைத்தையும் விட்டுவிட்டு புதியவை பழகலாம் என்று நம்புகின்ற மனமும் உண்டு❤️

நன்றி🙏

——————————————————————————————————————-

மறுபடியும்…………..❤️

Happy Valentine’s Everyone..🌹

இருளில் மிளிரும் நட்சத்திரமாய்
நீ எப்பொழுதாவது
ஒளிரும் நிலவின் விரோதத்தை
உணர்ந்திருக்கிறாயா……..
இல்லையெனில் நான் எழுப்பிய இக்கேள்வியின் நிச்சயமற்ற
தன்மையை நிராகரிக்கவே விரும்புவாய்

ஒரு பனிப் பூவின் மென்மையுடன்
நீ இருப்பதாலோ என்னவோ
உன்னால் இப்பூவுலகப்……….
பூரிப்புகளின் மிருதுவான மூச்சை
உள்வாங்குபவளாய் இருத்தல் முடிகிறது
இதன்வழி காதலின் அனைத்துத் தற்காலிக சந்தேகங்களையும் அகற்றுகிறாய்

இனிக் காதலில் மூழ்கிய இதயங்களாய் ஒருவருக்காய் மற்றவர்…..
அக்காதலையே மன்றாடுவோம்
இந்த உலகின் கடைசி குழந்தைகளாக
நாங்கள் மட்டும் இருந்தால் மட்டுமே
ஒரு தோல்வியின் உணர்வை எங்களால் நிம்மதியாக அனுபவித்தல் என்பது முடியும்

உன் மனதை மாற்றும்படி உன்னைச் சமாதானப்படுத்த என்னை…….
என்னதான் செய்யக் கூறுகிறாய்
மறுசீரமைக்கப்பட்ட ஒரு இடைநிலை ஒப்பந்தமாக வார்த்தைகளிலிருந்து
முதலில் “ என்ன செய்வாய்”என்று நீ கேட்பின்
இங்கு “உனக்காக நான் மட்டுமே இருக்கிறேன்” என்று நான் கூறுவேன்….❤️

நன்றி🙏

—————————————————————————————————————-

முன்னை இட்ட தீ……….✍️

தப்பிக்க எப்பொழுதும்
பல வழிகளைக் கண்டுபிடிக்கும்
தந்திரமான மனித மனம்
எப்பொழுதும் புதிய கதவுகளைத்
திறந்து கொண்டேயிருக்கும்….

மக்கள் மீண்டும் மயக்கப்படுகிறார்கள்
ஒரு சாரார் இழப்பு தலைவிதியெனவும்
மற்றோர் சாராரின் வெற்றி மதிநுட்பமெனவும்
பழையனவே மீண்டு புதிய வழிகளில்
புதிய அணுகுமுறைகளோடு…

வாழ்க்கை எப்பொழுதோ
கைக்கெட்டிய தூரத்தில் இருந்திருக்கும் மனிதர்களின் தன்னல முடிவுகளால்
நாம் காண்பது இனமொன்றின்
விரிந்து கிடக்கும் வெற்றுக் கரங்களை

தமிழர்களாய் நாம் மௌனமாக நம் தலைவிதியை நொந்து இலட்சியங்கள் இறந்துவிட்டவையாக அறிவிக்கும் சமிக்ஞைக்காகக் காத்திருப்போம் அறிந்திருந்தும் இன்னும் அறியாதது போன்று பாசாங்கு செய்திடுவோம்

ஆனால் இறந்தவர்கள் கூறிச் சென்ற பாடங்களைப் படிக்கத் தவறியவர்களாக இன்னமும் நாம் வாழும்போதே
எப்பொழுதோ இறந்துவிட்டோம்
எனும் கதையை எதிர்காலம்
எமது சரிதையாக எழுதுமென்பதே உண்மை😞

நன்றி🙏

———————————————————————————————————–

நானென்றால்….….❤️

இவளுக்கும் அவளைப் போன்றே முகம்
அவளுக்கும் இவளைப் போன்றே குணம்
ஆரத்தழுவுகையில் இருவரிடமும் ஒரே கூறுகளாலான இனிமை வாசமொன்றுண்டு

அரவணைக்க மறுத்து அவள் அதட்டினால்
அதன் ஆயுள் அரைமணி நேரந்தான்
இவள் அரவணைத்தால் மடியிருப்பாள்
அதட்டினால் நாட்கள் வாரங்களெனப் புறக்கணிப்பாள்

அடிக்கடி என்னைத் இருவரும் தேடுவதுண்டு
காரணகாரியங்களின்றி விசாரிப்பதுமுண்டு
அவள் மட்டும் கண்டவுடன் கலங்குவாள்
இவள் கண்டுங் காணாதவளாய் கடந்து போவாள்

தாம் பிடித்த முயல்களுக்கு மூன்று கால்களென்பதில்
இருவரிடமும் ஒரு நியாயமிருக்கும்
அவள் எனக்காகவேனும் இறங்கிப் போவாள்
இவளோ தானே முடிந்த முடிவென்பாள்

இருவரையும் என் தோழிகளென்பேன்
இணையான இரு ஆளுமைகள் என்பேன்
இப்பேருலகின் பெருவிருப்பென்பேன்
அவள் என்னைப் பெற்ற தாய்
இவள் நான் பெற்ற மகள்………❤️

நன்றி🙏

———————————————————————————————————–

நோதலும் தணிதலும்………… 🌹

வாழ்க்கைக் கலையென்பது ஒரு
இருபக்கக் கூரான கட்டாரியெனில்
நோதலும் தணிதலும் அதன்
இருமுனைகள் என்பேன்

எங்ஙனமென்று நீ கேட்பாய்
ஒரு புது அனுபவம்
உன் இதயக் கதவைத் தட்டுகிறது
அதை அமைதியாக உள்ளே
நீ அனுமதிக்கிறாய்

கொஞ்சம் சிந்தித்திருப்பின்
அதனாற் கிடைக்குமென நீ எண்ணும் பேரின்பமென்பது மைல்களுக்கு
அப்பாலும் இல்லையென்பதை
உன் மனமுணர்ந்திருக்கும்

அங்ஙனமில்லாமால் உன் நிலைத்தன்மையிலிருந்து விலகி
ஊன் உயிரைக் கறைப்படுத்தி
உன் அமைதியைக் கொள்ளை கொடுத்து
இதயம் சேற்றில் புதைந்திருப்பதை
இப்பொழுது கண்ணாரக் காண்கிறாய்

கடுமையாக உழைக்கும் கடிகார முட்கள்
வலுவேற்றப்பட வலுவேற்றப்பட
காலையில் தலை கலைந்து
மாலையில் மயங்கி உழைக்குமே தவிர
மழையைத் தழுவும் உணர்வுகளைத் தேடி
புறப்பட்டுப் போக எத்தனிப்பதில்லை

மனச்சேற்றின் சுமைகளால் மற்றும் மனச்சோர்வடைந்த உணர்ச்சிகளால்
தணிப்பு கசக்கத் தொடங்குகிறது ஆனால்
இடர்மிகு இவ்விருப்பில் பற்பல புதியனவற்றைச் சுவாசித்து வெந்து
நோதல் மட்டும் நிறுத்தப்படுவதில்லை

நீண்ட காலத்திற்கு முன்பு
ஒரு புதிய அனுபவம்,
உன் இதயக் கதவைத் தட்டியது,
நீ அதை முற்றிலும் அமைதியாக
உள்ளே அனுமதித்தாய்……..
கொஞ்சம் சிந்தித்தாருப்பாயெனில் இந்த
நோதலும் தணிதலும் இருபக்கக் கூரான
ஒரு கலையென்பதை உணர்ந்திருப்பாய்🙏

நன்றி🙏

—————————————————————————————————————–

இப்பொழுது மழை…..🌹

பாலையில் பெய்யும் மழையோ
மலைமுகடுகளைத் தழுவும் மழையோ
அன்றில் இப்பொழுது
இங்கே பொழிவது போன்று

பனிப்பாறைகளைக்
பணிய வைக்கும் மழையோ
யாவற்றிலும் உன் வாசம்
உணரமுடியுமேயன்றி நுகரமுடியாது

பெருஞ்சுமையாக இருந்த
பனிக்குவியல் இப்பொழுது
மெல்ல மெல்லக் கரைகிறது
மேடை கிடைத்த தினவில்
ஊழிக் கூத்தாடும்
ஒரு தேர்ந்த நடனதாரகை
போன்று மழையும்…..
உள்ளே மனதில் நீயும்…….

மழையின் பின்விளைவுகளை எண்ணி
மனிதர்களுக்குள் பதட்டம்……
நானோ மயங்கிச் சரியும் மழையை
கிறங்கிப்போய் இரசிக்கிறேன் ஏனெனில் அதன்………………..
ஒவ்வொரு துளியிலும் உன் வாசம்
உணரமுடியுமேயன்றி நுகரமுடியாது
மழையும் நீயும் ஒரு ஜாதி
வருகையிலும் வராத பொழுதுகளிலும்
இருவருமே இன்பத் தொல்லை❤️

நன்றி🙏

—————————————————————————————————————–

அக்கினிக் குஞ்சொன்று வேண்டும்………🔥

மெட்டுக்குள்
சிறையிருக்க மறுக்கும்
சொற்கள்
பாடல் வரிகளாவதில்லை
கரைகளுக்குள்
கட்டுப்பட மறுக்கும்
காட்டாறுகள்
நதிநீர்நிலைகளாவதில்லை

வேர்களைக்
கிளைபரப்ப மறுக்கும்
மரங்கள்பெரு விருட்சங்களாவதில்லை
இறகுகளை
இழக்க மறுக்கும்
பச்சைக் கிளிகள்
பேசும் கூண்டுக்கிளிகளாவதில்லை

அங்கீகாரம் எனப்படுவது யாதெனில்
அதிகாரத்தில்
உள்ளவர்களின் கர்வத்துடன்
அங்கீகாரம்
தேடுபவர்களின் சுயமரியாதைகள்
செய்து கொள்ளும்
சமரசங்களெனில் அது மிகையில்லை

கிளர்ச்சிகளின் முடிவிற்தானே
வரலாறுகள் பிறக்கின்றன
அந்த வரலாறுகளால் கொண்டாடப்படுவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களைச்
சமரசங்கள் செய்து கொண்டவர்களெனில்
அத்தகைய வரலாறுகளைப் படைக்கும் பிதாமகர்களின் பெயர் புரட்சிக்காரர்கள்
அவர்கள் அடிக்கடி பிறக்கவேண்டும்
இல்லையெனில் வரலாறுகள் திரிபுபடும்😊

நன்றி🙏

—————————————————————————————————————-

இதுவும் கடந்து போகும்…….😊

உன்னோடு பயணித்த நாட்கள்
பின்கோடுகள் பிசகிய
கடிதங்களைப் போன்று
கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன

கடிதங்களிற்கான மாற்று வடிவங்களை
அனுப்புநரோ பெறுநரோ
எங்ஙனமாயேனும்
பெற்றுக் கொண்டிருக்கக் கூடும்

காற்றில் ஆடி அலைந்து களைத்த
நூலறுந்த பட்டத்திற்கும்
இளைப்பாற ஒரு மரக்கிளையோ
புற்தரையோ கிடைப்பதில்லையா

பின்கோடுகள் பிசகிய கடிதங்களும்
நூலறுந்த பட்டங்களும்
இறந்தும்……..,
மறுபடி பிறக்கையில்

உன்னோடு பயணித்த நாட்களும் வேற்றுருவில்…….
நிகழவே செய்யும் ஏனெனில் எல்லாமே
இங்கே கடந்து போகவே செய்கின்றன😊

நன்றி🙏
World optimists day Feb 02/2024

————————————————————————————————————

நீதானே………..….🌹

கரையுரசிக் கடலடையும்
ஒவ்வொரு அலையும்
தரை தூரமில்லையென
சகலைகளுக்குப் பொய் கூறும்

தென்றலோடு சேர்ந்தலையும்
இலைக்கூட்டங்கள் யாவும்
குளிர்காலம் அருகிலென்று
வேர்களை வியர்க்க வைக்கும்

கோடையில் அச்சமற்றவையாக
சேட்டைகள் செய்யும் சிற்றுயிர்கள்
கடும்பனியின் இருட்டே உலகமென்று
இணைகளுக்குக் கதையளக்கும்

புத்திமான் பலவான் எனப்படுவது
தேவைகளுக்கேற்ப கூறும் பொய்யெனில்
வாழுதல் மட்டுமன்றி காதலில் வீழ்தலும்
புரையோடிய பொய்யென்பது மெய்தானே❤️

நன்றி🙏

தொடரும்…