சுட்டெரிக்கும் சூரியனின் வெம்மை தாளாமல் காற்றுக்கூட அசையமறுத்து நிற்கும் நிசப்தம் நிரம்பிய மதியப்பொழுது தகதகவென எரியும் மேனியில் கசகசத்து வழியும் வியர்வையினைத்   துடைக்கத் திராணியற்று எப்பவும் போல தனிமையின் துயரம் தொண்டையை அடைக்க கண்களை மூடியபடி கடுந்தவம் புரிந்தது அந்த அடிக்கல்(அத்திவாரக்கல்). அதன் தவத்தைக் கலைப்பது போல இடுப்பு மூட்டை யாரோ முட்டித்தள்ள “நேற்று பக்கவாட்டாய் இடித்ததில் விலா எலும்புகள் ஒருபக்கம் விலத்தி அதன் வேதனை இன்னும் தீரவில்லை இன்று இடுப்பில் பதம் பார்க்கின்றாளே இவளை இப்படியே விட்டு வைத்தால் இருந்த இடம் தெரியாமல் பண்ணி விடுவாள்..” சினத்துடன் சீறிப்பாயவென விழித்த கண்கள் வியப்பில் ஆழ்ந்தன.

எங்கிருந்து வந்தது இந்தச் சிறுக்கிக்கு பச்சைப் பட்டாடை? அவள் வரவுக்கு கட்டியம் கூறியது போல மௌனித்து நின்ற அனல் காற்றும் மெல்ல அசைந்து வருடிக் கொடுத்ததில் உடலை நெளித்து செல்லமாய் சிணுங்கியது அந்தப் புது நாற்று.
“அழகு ஒரு சிபாரிசுக் கடிதம்” அறிஞரின் கூற்று ஒன்று ஞாபகத்திற்கு வர ஆற்றாமை தாளாமல் கண்களை இடுக்கியபடி ஓரக்கண்ணால் நாற்றை உற்று நோக்கியது அடிக்கல். மீண்டும் ஒரு குலுக்கல், இடையை எக்கித் தள்ளியதில் இன்னுமொருபடி நீண்டதுமல்லாமல் ஏளனமாகச் சிரிக்கவும் செய்தது அந்த இள நாற்று. “இடத்தை கொடுத்தால் மடத்தைப் பிடுங்குகிறாயே- வெள்ளத்தோடு வெள்ளமாய் அடைமழைக்கு அடி பட்டு அகதித் தஞ்சம் கோரியவள் நீ ..! அன்று என் அடியின் கீழ் அகப்பட்டு மூச்சுத் திணறியபோது பாவம் கடுகளவு என்றாலும் உயிருள்ள பிராணி என்றுதானே உனக்கு உயிர்ப்பிச்சை போட்டேன்.. அடிக்கல் முடிக்கமுதல் இடையே வெட்டியது நாற்று. “ அட என்ன புதுக்கதை அளக்கின்றாய் உயிர்ப்பிச்சை போடுகிற ஆளின் இலட்சணத்தைப் பாரேன். வரண்டு வெடிச்ச மூஞ்சியும் ஒட்டி உலர்ந்த குழி விழுந்த கண்ணுமாய் கண்ணாடியில் ஒரு தடவை உன்னைப் பார்த்து விட்டுப் பேசு..!” அகதி என்ற சொல்லில் அவமானப்பட்டது போல ஆக்ரோஷத்துடன் தொடர்ந்தது நாற்று.

என் அன்னை பூமா எனைத் தாங்கினாள் தாகத்திற்கு தண்ணீர் தந்தாள். அப்பன் சூரிய பகவானின் சக்தி கொண்டு என் பாரம்பரியச் சொத்து பச்சைய மரகதமணியில் உணவைத் தயாரித்து நான் என்பாட்டிலேயே வளருகின்றேன். இதெல்லாம் உன்னால் எங்கே முடியப்போகிறது? வெறும் ஜடம்! அதனால் தான் பொறாமையால் முக்கி முனகுகிறாய். இளமைத் திமிருடன் பட பட வென்று பொரிந்து தள்ளியது நாற்று.

ஓ..! என்னமாய்ப் பேசுகிறது இந்தச் சிறுசு? போனகிழமை அளவில் தான் மெல்லத் திறந்த பாதி விழிகளுடன் பிஞ்சுக் கரங்களால் மெல்லமாய் எனைத்தட்டி “என்னை வெளால கூட்டிப் போறியா..” என மழலையாய் என்னிடம் கெஞ்சியது. அதன் மென்மையான ஸ்பரிசத்தில் நான் மெய் சிலிர்த்திருக்காவிடில் அந்த மழலை மொழியில் நான் உளம் பூரித்திருக்காவிடில் இது எனக்கு கீழ் அல்லவா சமாதி அடைந்திருக்கும்…. அடிக்கல் மனதிற்குள் நினைத்த மறுகணமே வேகமாக வந்த காற்று சுழன்று அடித்ததில் மனசு திக்கென்று அடித்தது “பாவம் சின்னன், காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் துவண்டு ஒடிந்து போயி இருக்குமோ ..!பதைபதைத்த மனத்துடன் ஏறிட்டு நோக்கின அடிக்கல் அசந்தே போய்விட்டது.
காற்றோடு காற்றாய் வளைந்து நெளிந்து ஆடி கலகலத்துச் சிரித்த நாற்று இளஞ்செடியாக செல்வியாக மாறி புதுப்பொலிவு பெற்று இருந்தது. “என்ன துணிச்சல்? எத்தனை வேகம்? இளங்கன்று பயமறியாது என்பது இதுதானோ? ஆனால் இதற்கு புத்தி சொல்லி வைக்க வேண்டும்..”(மற்றவர்களை உயர்த்தி வைத்துப் பார்த்து மகிழ்ச்சி அடையும் பரம்பரையில் வந்த பிறவிக் குணமோ என்னமோ..) என்னதான் ஏட்டிக்கு போட்டியாக பேசினாலும் நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் என நாற்றின் நாளாந்த வளர்ச்சி கண்டு மனம் களிக்கவே செய்தது அடிக்கல்.
 
“இங்க பார் புள்ளை உலகம் உனக்குப் புதுசு, கவனமாக இரு. காற்று தென்றலாய் வந்தால் கொஞ்சித் தான் பேசும். ஆனால் அதன் மறுபக்கத்தைக் காட்ட வெளிக்கிட்டால்… புயலாய் வந்து உன்னைத் துவம்சமே பண்ணி விடும்..!. நம்ப நட! நம்பி நடவாதே! இதைத் தான் நான் உனக்கு சொல்லுவேன்..” கண்டிப்புடன் கூறிய அடிக்கல்லைப் பார்த்து

என்ன வேதாந்தம் கதைக்கின்றாய் ..? அதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. நான் வாழ்க்கையை  ரசிக்க அனுபவிக்க பிறந்தவள். என் வண்ணம், வனப்பு கண்டு எல்லாரும் என்னிடம்  உறவாட விரும்புகிறார்கள். அதைக்கண்டு உனக்கு பொறுக்க முடியவில்லையோ.. பொறாமை முண்டம் –தீட்டித் தீர்த்தது செடி.

“பொறமை–? எனக்கு உன்னிடத்திலா-?   இவ்வளவு நாளும் வெளி உலகம் காணவென என்னை இடித்து இடித்து தள்ளி உடலுக்கு தந்த வேதனையைவிட உன் வார்த்தைகள் வடுவாக என்னை வதை செய்கிறது பெண்ணே! இந்த இளமை அழகு இவை எல்லாம் நிலை அற்றவை கண்ணே! எங்கள் பரம்பரை அழகு என்னவென்று உனக்குத் தெரியுமா? கலை அழகு! அறிஞர்களும் சான்றோர்களும் போற்றுகின்ற காலத்தால் அழியாத கல்வி அழகு. என் தாய் ஒரு கலைக்கோயில் அவளை இங்கே குடி இருத்தி இந்த ஊர்மக்கள் என்னமாய் வழிபட்டார்கள் தெரியுமா? .. சற்றுமுன் தாய் தந்த சீதனம் மரகதமணி என்று பாரம்பாரியத்தைப் பற்றி பெரிதாக பீற்றிக் கொண்டாயே!  என் தாயாருக்கு இந்த ஊரே திரண்டு வந்து அள்ளிக் கொடுத்த கதை உனக்கு தெரியுமா–?”

“ஊரே வரண்ட ஊர், அது வேறு அள்ளிக் கொடுத்தாலும், இது என்ன பொய் அழகு? இது தான் உங்கள் கலை அழகோ..? உன்னைப் பார்த்தால் தெரியவில்லையா உன் தாயின் அழகு? நளினமுடன் நையாண்டி பண்ணியது செடி.

“என்னைப் பற்றி எதையாவது சொல்லு. ஆனால் என் தாயாரைப் பற்றியோ இந்த ஊரைப் பற்றியோ  ஏதாவது சொன்னி எண்டால் எனக்கு கெட்ட கோபம் வரும். “இந்த ஊரவர்கள் கிராமவாசிகள்; தான். ஆனால் இருக்கிற வளங்களைப் பயன்படுத்தி வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவர்கள்”  எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்ற கோட்பாட்டில் வாழ்ந்தவர்கள். அதற்கு எடுத்துக் காட்டாய் சமயத்தையும், கல்வியையும் ஒருங்கிணைத்து அறவளிகாட்டினார் மகா புருசன் மகாதேவ சுவாமிகள்.
    
அவர் மனச் சிந்தனையில் கருவாகினவள் தான் என் தாய்.  அவளுக்கு உருக்கொடுக்க இந்த ஊர்மக்கள் எல்லாம் எப்படி ஒன்றுபட்டார்கள் தெரியுமா? ஓவ்வொரு நாளும் ஒரு பிடி அரிசியாய் உமலில் சேகரித்து உவந்தளித்தார்கள்–’’

“ என்ன வீடு வீடாய் அரிசி பிச்சை எடுத்தா–? அப்படிச் சொல்லேன் பிச்சைக்கார வம்சம் என்று’’ வழமை போல இடைமறித்து கேவலமாக எள்ளி நகையாடிய செடியைப் பார்த்து எரிமலையாகக் குமிறியது அடிக்கல்.

    ‘’ கழுதைக்கு எங்கே தெரியப்போகிறது கற்ப+ரவாசனை? அந்த அரிசி சேகரிப்பு எதைக்குறிக்கிறது தெரியுமா? இந்த ஊர்மக்களின் ஈதல்பண்பு, அன்புடமை, ஒற்றுமை உணர்வு சிறுகச் சேகரித்து பெருவாழ்வு காணவேண்டும் என்ற ஆர்வம், அறிவுத்தாகம் இப்படி உயர்ந்த பண்புகளைத் தான் அது குறித்து நிற்கின்றது. அப்படித் தோன்றிய
என் பரம்பரையை வரலாற்றுப் பெருமை படைத்தது என்று தான் நான் கருதுகின்றேன்–‘’

அதற்குப் பிரதிபலனாய் என் அன்னை ஊர்மக்களை கல்வியால் மேம்படச் செய்தாள்.  எத்தனை தலைமுறைகள் பாண்டித்தியம் அடைந்தன.  என் அம்மா சொல்லுவாள் அது ஒரு பொற்காலம் என்று. மேலூர் முருகனும் அவளுமாய் கைகோர்த்து நின்ற நேரம் சமயமும், கல்வியும் வாழ்வுடன் பின்னிப் பிணைய மகோன்னத நிலையை அடைந்தது இந்தக் கரம்பொனூர்.
    என்பணி செய்து கிடப்பதே என அவள் வழி நானும் தொடர்ந்தேன் – எவ்வளவு கல்விமான்கள், எத்தனை பள்ளிச் சிறார்கள் ஓசை ஒலி எல்லாம் ஆனாய் நீயே என அந்த முருகன் கோயில் மணியும் கற்பித்தல் ஒலிகளும் கணீர் என்று காதுகளில் இன்றும் ஒலிக்கிறது. கண்களை மூடிப் பரவசமாகிய அடிக்கல் மீண்டும் தொடாந்தது.

அம்மா கூறியது போல் எனக்கும் அது பொற்காலம் தான். கல்லா நெஞ்சில் நில்லான் ஈசன் என்ற தாரமந்திரத்தை தமதாக்கிக் கொண்டு எத்தனை விதமான ஆசிரியர்கள் கற்பிக்க வந்தார்கள் அத்தனை பேரும் என்; ஞாபகத்தில் இல்லாவிடினும்—

அவன் மூன்றுகுறி திருநீற்றுப் ப+ச்சுக் காரன் கனகரெத்தினம் — மாணவர்கள் கொட்டாவி விட்டாலே போதும் எழுந்து நின்று சொல்ல வேண்டும். நெடுநீர் மறதி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக்கலன் என்று— குற்றவாளி நின்று மாணவர்களை கசடறப் பிழிந்து கற்பிக்கும் அவன் குறும்புகாரன் கூட அம்மா சுள் சுள’; என்று சுட்ட தோசையில் நீ முணு சாப்பிட்டால் மிச்சம் எத்தனை? என மாணவர்களை  குசினி வரை கூட்டிப்போய் கணக்குப் படிப்பிக்க கையாளும் தந்திரங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை

….எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என்று உறுப்பு எழுத்துக் பழக்கி சிறார்களின் தலை எழுத்தையே மாற்றுகின்ற பொறுமையின் சின்னம் கமலம்மா—! தமிழ் இலக்கியம் திருவருட்பயன் என்று வேறுபட்ட துறைகளில் பாடபோதனைகள் செய்தாலும் ஆங்கிலத்தில் சரளமாய்ப் பேசி தலமைப்பீடத்தில் அமர்ந்து சாதனைகள் செய்திட்ட சகலகலாவல்லி —-சதாரூபவதி–!

போரடிக்கும் சரித்திரத்தை மாணவர் விரும்பும் கதைப் புத்தகங்களாக சித்தரிக்கும் வல்லமை கொண்ட சின்னவள் ஞானம் ஏகாம்பரம்—!

யுஇ டிஇ உஇ னஇ நஇ க — என ஆங்கிலத்தின்  அகரங்களை ஆணிவேராய் புகுத்தி அன்னியத்தின் சிகரங்களையே தொடவைத்த கிருபா முத்துகுமாரசாமி—-!

களை கட்டும் நவராத்திரி விழாக் காலங்களில் ஓம் சக்தி ஓம் என்று கிளிக்குரலில் பாடுவதோடு அல்லாமல் சரஸ்வதியாகவே மாறிவிடும் பின்வீட்டு செல்லம்மா!

இப்படி ஊர்வாசிகளில் சிலர் இன்னும் என் ஞாபகத்தில் ஓட்டியபடி – அதுமட்டுமல்ல அயலூர்களில் இருந்து கூட வந்து தமது சொந்தப்பிள்ளைகளைப் போல நினைத்து படிப்பித்து ஆளாக்குகின்ற ஆசிரியப் பெருந்தகைகள் எத்தனையோ பேர்.

அதில் அந்த சரசாலை அருணாசலம் ஆழமாய் என் அடிமனத்தில் மட்டடுமல்ல எத்தனயோ மாணவர்கள்  மனத்திலும் தான் – விஞ்ஞானத்துறையில் மறுமலர்ச்சியையே உண்டு பண்ணியவன் – படிக்காத மாணவர்களுக்கு அவன் கொடுக்கும் பிரம்படி கண்டு நானே அவனைக் கடூரமாய்ப் பார்த்துண்டு, ஆனால் அத்தனை தண்டனைகளும் மாணவர்களின் வாழ்வைத் தித்திக்கும் தேனாய் மாற்றிய என்று அவர்கள் எனக்கு எழுதிய கடிதங்கள் மூலம் கண்டு கொண்டேன்)  அப்படி எத்தனையோ விதமான வழிகாட்டல்களில் பட்டம் பதவி பெற்று, என்னில் தவழ்ந்த எத்தனையோ செல்வங்கள்  சீரும் சிறப்புமாய்த் தான் வாழ்கின்றார்கள்.

நீண்ட நேரம் கதைத்ததால் மூச்சுவாங்க நிறுத்திய படிக்கல்லை முதன் முதலாக பரிதாபத்துடன் நோக்கியது ஓரளவு வளர்ந்துவிட்ட அந்த ஆலமரம், என்றாலும் என்ன யாருமற்ற அனாதையாயத் தானே நீ –? பொலிவிழந்து உருக்குழைந்து கவனிப்பாரற்று கிடக்கின்றாய் உன்னால் உருவாக்கப்பட்ட அந்த உன்னத மக்கள் எல்லாம் எங்கே – கல்லா நெஞ்சில் நில்லான் ஈசன் என்றாய் கற்கை முடிந்தவுடன் நில்லாமல்  உனக்குச் சொல்லாமலே இந்த ஊரை விட்டுப் போய்விட்டார்களா?  என்ன?   குரலைத் தாழ்த்தி கரிசனத்துடன் கேட்டது ஆலமரம்..

யார் பட்ட கண்ணோ? கூடிவாழ்ந்த சனம் எல்லாம் சின்னா பின்னமாய்த் சிதறி ஒடிய கதை–! தமிழ் இனத்தின் தலை எழுத்தை யார் என்ன சொல்வது?  ஆனால் எதை அழித்தாலும் அவர்கள் பெற்ற கல்வியை யாராலும் அழிக்க முடியாது பார்.  திசை மாறிய  பறவைகளாய் திக்கற்றுப் போனாலும் எங்கோ ஒரு மூலைகளில் சிறப்புடன் தான் வாழ்வார்கள்.,

என்னைக் கவனிக்கா விட்டால் என்ன சுற்றிவரப் பார். எத்தனை இளைய தலைமுறைகள் எழுந்திருக்;கின்றன என்று, அங்கொன்றும் இங்கொன்றுமாய் மிஞ்சி நிற்கும் மக்கள் கூட்டம் இன்னும் இல்லாமல் இல்லை மீண்டும் துளிர்க்கும் வசந்தமாய்– அவர்களின் கற்கை ஒலிகள் தூரத்திலிருந்தாவது என் காதில் விழத்தானே செய்கிறது.   உற்றுக் கேட்க எத்தனித்த அடிக்கல்லை மீண்டும் பரிதாபத்துடன் நோக்கியது ஆலமரம்.

என்னதான் இருந்தாலும் அவர்கள் உன்னைக் கவனித்து இருக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மூலமான தாயல்லவா நீ. உன்னை அழியாமல் அவர்கள் பாதுகாத்து இருக்க வேண்டும்.  வசதிபடைத்தவர்கள் எல்லாம் உயிர்களைப் பிடித்துக் கொண்டு ஓடி விட்டார்கள் சுயநலவாதிகள்.

மீண்டும் மீண்டும் என பிள்ளைகளை அப்படிச் சொல்லாதே —  என் செல்வங்கள் 
எங்கிருந்தாலும் நல்லா வாழ வேண்டும். அதுவே எனக்குப் போதும் கண்கள் பளிக்க உறுதியுடன் கூறிய அடிக்கல் மேலும் கதைக்க விரும்பம் இல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டது. மரமும் அதன் மௌனத்தைக் கலைக்காமல் அமைதியாயிற்று

நீண்ட நெடுந் தூக்கம்– மனதின் சுமைகளை எல்லாம் இறக்கி வைத்ததால் என்னவோ—! கண்விழித்த  அடிக்கல்.  குழுகுழுவென்ற யுஊ அறையில் இருப்பது போன்ற உணர்வு பரவ அண்ணாந்து பார்த்து அதிசயித்துப்போனது ஒங்கி வளர்ந்து அகலக் கிளை பரப்பி பச்சைக்கொடி பிடித்து அதனை அணைப்பது போல நின்றிருந்தது அந்த ஆலமரம்,

கவலைப் படாதே –! இனி உன்னை வெயிலோ மழையோ ஒன்றும் செய்யாது தனிமை கூட உன்னை அணுகாது நான் என்றும் உன் பக்கத் துணையாக இருப்பேன்

முதிர்ந்த வயதின் பக்குவத்துடன் கூறிய அந்த ஆலமரத்தைப் பார்த்து  ஓ இவளை என்னமாய் நினைத்து எப்படி எல்லாம் பேசி இருப்பேன்  நெகிழ்ந்தது. அடிக்கல்லின் கண்ணீரை மெல்லத் துடைத்தது அந்த ஆலமரம்.

-பிறேமலதா