அன்னை ..
என்னைப் படைத்ததால்…
உயர்ந்தாளில்லை
தன்னைத் தேய்த்ததால்
தாழ்ந்தாளுமில்லை!

அன்பைப் பேணி
பண்பைப் போற்றி
மண்ணில் வாழ்ந்ததால் – இன்றும்
கண்ணில் வாழ்கிறாள்

பொறுமைக்குப் பூமி..
பொய்யாகி விடும் இவளால்!
பூவுக்கு வாசைன..
நிலவுக்குக் குளிர்மை..
எல்லாமே.. பொய்!
எல்லாமே.. எல்லாமே பொய்!
எல்லாமும் இவளாய் இருக்க..
இயற்கை எப்படி ஜெயிக்கும்?

காலனைக் கண்டதும்
கண்ணீர் விடுவாள்
தனக்காயல்ல..
தன் பிள்ளைக்காய்
வாழத்தெரியாமல் – என்பிள்ளை
வீழ்ந்துபட்டுப் போய்விடுமோ என்று

நொந்து பட்டுப் போவாள் – உயிர்
கருகிப் பட்டுப் போவாள்!
வாழ்வின் பூரணம் அவளே!
பூரணம் எனும்
வார்த்தையின் பொருளும் அவளே! 
அவள் வாழும் வரையில் 
ரணம் தர வேண்டாமே
அவளுக்கு ரணம் தர வேண்டாமே!

-மோகன்  குமாரசாமி