கத்தும் கடலோசை
காற்றில் மிதந்து வரும்
கடுகி வரும் கப்பலெல்லாம்
காவலூரை நாடி வரும் -
கணபதீஸ் வரத்தான் களிநடம்புரிய
கண்ணகியின் சிலம்பொலி கணீரென்று ஜதிபேசும்
தேவன் கடவையிலும் – செபஸ்ரியானிலும்

தெய்வீக ஒலி எழும்பும்
பருத்தியடைப்பு வீதி தொட்டு
பாலாவி ஒழுங்கை வரை
பள்ளிப் பாலர்கள் -
துள்ளிக்குதித்து
அள்ளிப் பருகும் – அறிவுப்பட்டறை
சண்முகநாதனில்  சரணடையும் – அந்தப்
பொன்னான நாளின் – ப+பாளராகம்
உங்கள் நெஞ்சுக் குழிக்குள்
நிச்சயம் இசை எழுப்பும்

அன்னிய கரங்களில் 
பொன்னாய் மின்னுமாம் – நெல்மணிகள் -
கரம்பொனுக்கு இது காரணப் பெயராம் -
சின்னவயதில் – சிறுமணல் கூட்டி
அகரம் எழுதியபோது – அம்மா
அழுத்தி எனக்கு சொன்னதாக ஞாபகம்.

அரசர் வளவுக்குள் – அழகாக வீடுகட்டி
அரசமர நிழலில் – ஆடுபுலியாட்டமாடி
கூட்டமாய் தோழியருடன்
கூட்டாஞ்; சோறாக்கி – பகிர்வில்
தம் பங்கு குறைந்ததென்று – சட்டியை
தட்டிவிட்டு ஓடிய சின்ரெல்லாக்கள்…….

கோயில் கேணியில்
குளிப்பதற்கு தடாபோட்ட பெரியதம்பிக்கு
வீராப்பாய் – நெல்லிமர உச்சியில் ஏறி
குளித்தால் குற்றாலமென
குத்துக் கரணம் போட்ட விடலைகள்……

அந்தி சாய்ந்;து விட்டால்
அரைக் குடத்து தண்ணியை
அவசரமாய் சாய்த்து விட்டு
நவசியர் கிணத்துக் கட்டில்
நம்மூர் கன்னியர்கள்
எதிர் காலக் கனவுகள்
எல்லையில்லா சிரிப்பலைகள்……..

திசையெட்டு மிருந்து வந்து – எங்கள்
திருவிழாவிற்கு தோள் கொடுக்கும்
காளையர்கள் -
கிடாய் வாங்கும் சாக்கில்
‘கேற்’ றடியில் பெண் பார்க்கும் படலத்தை
கச்சிதமாய் முடித்து நிற்பர்.
சிறுசுகளுக்கு
சிவராத்திரி வந்து விட்டால்
தெருவெல்லாம் – ஊர்க்கோலம்
விடிந்து எழுந்து பார்த்தால் -
வீட்டுப் படலைகள் – திசைமாறும் திருக்கோலம்

ஒடியல் கூழ் என்றவுடன் -
உறவுகள் கூடிநிற்கும் – கந்தனின்
ஒற்றைப்பனைக் கள்ளு – பெரிசுகளை
காத்தவராயன் கூத்தாட வைக்கும் – அந்த
என் கிராமத்து உறவுகள்
உங்களுக்கும் நினைவு வரும்

யார் கண்பட்டதோ? என் பொன்னகரம்
பொலிவிழந்து விட்டது.
உறவுகளை –  உரிமைகளை
உடைமைகளை இழந்து
துப்பாக்கி ஒலியும்
துரத்தி வரும் ஓநாயும்
மொட்டைப் பனைமரமும் -
முகடில்லா வீடுகளும்
பட்ட மரங்களும்
பாழடைந்த கோயில்களும்
வகிடிழந்த வீதிகள்
வாழ்விழந்த வயல்காடுகள்
யார் கண்பட்டதோ?
கண்ணீர் விடுகிறது என் கரம்பனூர்.

-திருமதி சாரதா பரநிருபசிங்கம்

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கவிதைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 4, 2014