குளிர்… குளிர்… குளிர்…
கதிரவன் கனடாவில் தன்
கடமையைக் குறைத்துக் கொண்டான்
காரிருளின் காலம் அதிகமாகியது
பறவைகள் பறக்கின்றன அவை
பரவசமாய் பாடிப்பாடிக் கொண்டு பறக்கின்றன..

குளிர்காலம் வருகிறது என்று குமுறுது
கூட்டம் கூட்டமாக
குறையேதும் இல்லாததுபோல்
குளிர் இல்லாத தென்திசை நோக்கி
குடும்பத்தோடு பறக்கின்றன..

அதோ ஒரு அழகிய மரம்
அதிலும் கூட்டமாக அமர்கின்றன
ஆறி மீண்டும் தாம்போக வேண்டிய
அந்தம் நோக்கிப் பறக்கின்றன..

கரம்பன் என்ற ஆலமரத்தில்
கண்ணகி அம்மனின் அருளில்
காலம் காலமாய்
கூட்டம் கூட்டமாய் வாழ்ந்த நாம்

கோவில்திருவிழாக்கள் கொண்டாட்டங்கள்
கோலம்போட்டு பொங்கல் விழாக்கள் என்று
கோஷமிட்டு ஆனந்தமாய் இருந்தோம்

கண்ணூறு பட்டாற்போல் திட்டமிட்டு  
காட்டாற்று வெள்ளம்போல் வந்த
கலவரம் என்ற பீதியால், பீடிகை இல்லாமல்
பதட்டத்துடன் பறந்தோம் பிரிந்தோம்

பதறிச்சிதறுண்டோம்                                                                                                                               பாதுகாப்புத்தேடி பலவேறு நாடுகளில்
பல்பிடுங்கப்பட்ட நாகங்களாகப்
பலமற்று இருந்தோம்
 
இப்படிப்பறந்தவர்களில் பலர் கனடா என்ற
பாரிய விருட்சத்தில் பாதுகாப்பாய்ச் சேர்ந்தோம்
கடந்துபோன ஆண்டில்
கலகலப்பாக நிறைவுபெற்ற
கதம்பத்தில் கூடிக்களிப்புற்றோம்
 நம் குடுபத்தோடு நாமும்       
 அந்தப்பறவைகளைப் போல..

கரம்பன் கதம்பத்தால் நம் இனத்தோடு
சேர்ந்து கொண்டோம் குடும்பமாக
ஆடல் பாடல் என்று அதோ
அந்தப் பறவைகளைப் போல…
குளிர் கரைகிறது ஆதவன் தன்
கடமைக் காலத்தை அதிகரித்துக் கொண்டான்
அதிக வெளிச்சம்

அதோ அந்தப் பறவைகள்,
மீண்டும் வடக்கு நோக்கிப் பறக்கின்றன
அவைகளுக்குத் தெரியும் வடக்கும், தெற்கும் தமக்கு
நிரந்தரம் இல்லை என்று
ஆனாலும் அதே கூட்டம்
அதே இனம், அதே ஆனந்தம்
அதே பாடல் வழியில் மீண்டும்
அந்த அழகிய மரம்
ஆனந்தமாக கூட்டமாக அமர்ந்து
ஆறி மீண்டும் பறக்கின்றன
ஆசையோடு போகவேண்டிய இடம்நோக்கி
ஆம் நாம் நினைப்பது போல்
நம்மண்ணில் நமக்கு விடுதலை கிடைத்தால்…
 
மீண்டும் அதே கரம்பன் என்ற
ஆலமரத்திற்கு அடிக்கடி பறந்து
ஆனந்தமாய் கூடிக்கொண்டாடி மகிழ்வோமா?
அருமையான அந்தப் பொங்கல் விழா அன்று
அதோ அந்தப் பறவைகளைப் போல?

-காவலுர் வரதன்

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கவிதைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 4, 2014