எந்தையும் தாயும் கூடிக்குலவி
சொந்தமுடன் நம் மண்ணில்
மனை மக்கள் நலனே என்று
மகோன்னதமாய் வாழ்ந்த நிலை
மந்த மாருதம் போல்
நெஞ்சை மெல்ல வருட
பந்த பாசங்களுடன் கூடி
பள்ளி சென்ற பருவம் – இன்றும்
சந்திரப் பிம்பமாய் கண்ணில் 
காட்சியளிக்கின்றதே..

அதில்
வசந்தம் வரும்..
வாசலில் மல்லிகை பூக்கும்
திறந்த திண்ணையில் சுகந்தம்
தூங்க விடாமல் முரண் பிடிக்கும்
புலர்வதற்கு முன்னே புள்ளினங்கள் பாடிவர
போர்வையை விலக்கினால்
பூப்போட்ட சேலையுடன் – அம்மாவின்
மாக்கோலம் எதிரில் நிற்கும்

வரப்புயர்ந்த பயிர்களெல்லாம்
வளம் கொழித்து
வண்ணமயிலாய் ஆட்டமிட
வண்ணத்துப் பூச்சிகளின் ஜாலங்களில்
வானவில் கூட நாணிப் போகும்
சின்னத் தூறலில் சிலிர்த்து நிற்கும்
செடிகள் எல்லாம்
படர்ந்து பற்றைக் காடாய்
பாதை மறைத்துப் போனதேனோ?

மூச்சிரைக்க நீரிறைத்து
முள்வேலி தனைப்போட்டு
காத்திருந்து கதிரறுத்து
கன்னியர்க்கு மணமுடித்து

காலமெல்லாம் துணையிருக்கும்
கண்ணகிக்குப் பொங்கலிட்டு
வாழவைக்கும் கறவைக்கும்
வயிராற புல் செழித்த
பொன்னான பூமியெல்லாம்
புழுதியாய் பறப்பதேனோ?

மாதுவில் தோட்டமா!
மாகியப் பிட்டி வயற்காடா!
தெங்கங் குளமா!
தெற்கத்தைக் கரம்பையா?
வா என்று கூவியழைக்காமலே
வட்டமிடும் வானம்பாடிகள்
இப்போ கூவிக் குரலெடுக்க முடியா
ஜீவனற்றுப் போனதேனோ?

யாரிடமும் போனதில்லை
யாசித்தும் நின்றதில்லை
உயிர் கொடுத்து உழைத்ததினால்
உலகமெலாம் ஓடி நாம்
உயர்வு பெற வைத்த மண்ணின்
உருக்குலைந்த சோகத்தை                                                                                                                                         இன்று நினைத்தாலும்
நெஞ்சம் கனக்கிறது.

-மோகன் குமாரசாமி