தேசங்களின் எல்லை தாண்டி
நேசங்களுடன் இங்கு
உறவாடினும் –
வாசம் என்னவோ அந்தக்
கத்தாழங் காட்டில் தான்
பருவங்கள் மாறுவதும்
பகல் இரவு எழுவதும் – தெரியாத
துருவக் குளிரில்
வாழ்க்கை கூட ஒரு
தொட்டிச் செடிதான்
போர் மேகம் விலகும்…
புதிய பாதை திறக்கும்…
எத்தனை காலத்து
ஒற்றைக் கால் தவம்!
நாளை விடியும் என – இந்த
நடுவயதில் நைந்து போன வெள்ளாந்திகள்
இந்த வேடந்தாங்கலை விட்டு
விரைந்து செல்லத் துடிக்கின்றன
அவர்களுக்குத்தான் தெரியும்
அழுத்தும் ஆடையின்
அமுக்கும் காலணியின் வலி!
புரண்டு புரண்டு
பஞ்சனையில் படுத்தாலும்
உறக்கம் என்னவோ – அந்த
ஓலைப் பாயில்தான் என
ஓயாமல் அடம்பிடிக்கின்றன
சுமையுடன்இ சுமைதாங்கி
தேடிய உடல் –
இந்த சுகங்களைக் கூட
துச்சமென நினைக்கின்றன
ஆண்ட வீடெல்லாம்
காலத்தின் மாற்றத்தில்
காரை பெயர்ந்து
கள்ளரால் கயவரால் – மூலைக்
கல்லேயில்லாத மூளியாகி –
நூல் பிடித்த நேர்த்தியாய்
ஐயனும் – நல்லவனும்
இறுக்கி வரிஞ்ச வேலியெல்லாம்
எல்லைகளற்ற ஏகாந்தவெளியாகி
குட்டி மரியானின் சூழ்மீனில்
சட்டி மணக்க –
சப்பி உண்ட நாக்கெல்லாம்
உப்புச் சப்பற்று உலர்ந்து போனாலும்
ஆதியோடந்தம் அலசி ஆராய்ந்த
அரங்கப் பட்டறை
ஆனந்த வாசகசாலை
அடியோடு சாய்ந்தாலும்
மூலவேரென்னவோ அங்கே தானென்று
மூச்சிழுத்துக் கிடக்கிறது
ஆம் அவர்களுக்குத் தான் தெரியும்!
மழையின் நசநசப்பில்
ஊறிப் போன நம்மண்ணின்
காலத் தடயங்களை!
-திருமதி. சாரதா பரநிருபசிங்கம்