செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை சித்திரை மாதம் 6ம் திகதி சனிக்கிழமை கனடா, மார்க்கத்தில் அமைந்துள்ள கலைக்கோவில் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. சலங்கைப்பூசை என்று சொல்வதைவிட, எமது இளைய தலைமுறையினருக்கு எமது பாரம்பரிய கலைகளை அறிமுகம் செய்யும் ஒரு நிகழ்வாகவே இது இருந்தது.  “வளரும் பயிரை முளையிலே தெரியும்” என்பதற் கிணங்க  அகவை எட்டு நிரம்பிய அதிசா தனது மூன்று வயதில் இருந்து கலைக்கோவில் நடன ஆசிரியை நாட்டியக் கலாநிதி ஸ்ரீமதி வனிதா குகேந்திரனிடம் நடனத்தைச் சாத்திர முறைப்படி கற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அதிசா திலீPபன் தனது நடனத்தில் ஒவ்வொரு பாடலிலும் இசைக்கேற்ப, தாளம் பாவம் கலந்து தன் உணர்வை வெளிப்படுத்தி, தமிழ் மொழியை நன்கு விளங்கி அதனை உள்வாங்கித் தன் உள்ளுணர்வுடன் நடனம் ஆடி, சபையிலுள்ளவர்களை ஆச்சரியப்பட வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இவரது தங்கையான மூன்று வயது நிரம்பிய குழந்தை அய்ரா திலீபன் “சின்னச் சின்ன முருகா! சிங்கார முருகா” என்ற பாடலுக்கு அக்கா அதிசாவுடன் சின்னக்காலால் தாளம் தப்பாமல் பாவத்துடன் பொருளை உணர்ந்து ஆடிய விதம் சபையோர் எல்லோரையும் மெய்மறக்கச் செய்தது,

மிருதங்க வித்வான் குகேந்திரன் அவர்கள் இந்தப் பிள்ளைகளையும், இவர்களின் தாயார் நவகீதா அவர்களையும் வாழ்த்தி ‘பெற்றவர்கள் மட்டும் பெற்றோர்கள் அல்ல, பிள்ளைகளின் வளர்ச்சியில் பங்கு பெறும் அனைவருமே பெற்றோர்கள்தான்’ என்று குறிப்பிட்டார்.

அடுத்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட எழுத்;தாளர் குரு அரவிந்தன் தனது உரையில், ‘இங்குள்ள பிள்ளைகளை இதுபோன்ற ஏதாவது ஒரு துறையில் ஈடுபட வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் பிள்ளைகளை ஆரோக்கியமான உடல், உள நலத்துடன் வாழவைப்பது மட்டுமல்ல, எமது மொழியையும், பாரம்பரிய கலைகளையும் இந்த மண்ணில் தொடர்ச்சியாகத் தக்க வைக்க முடியும் என்பதைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதற்காகக் கனடிய மண்ணில் கடந்த 30 வருடங்களாக நாங்கள் பாடுபட்டோமோ அது, இதுபோன்ற இளைய தலைமுறையினரால் முன்னெடுக்கப் படுவதையிட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது’ என்று குறிப்பிட்டார்.

அடுத்து எழுத்தாளர் இணையத் தலைவர் அகணி சுரேஸ், மார்க்கம் நகரசபை உறுப்பினர் யுனைற்றா நாதன், மற்றும் அதிசாவின் கல்லூரி ஆசிரியர் ஆகியோரின் வாழ்த்துரைகள் இடம் பெற்றன.

‘சலங்கைப்பூசை என்பது ஒரு ஆரம்பம், இதனைத் தொடர்ச்சியாக இடை நிறுத்தாமல் தொடர்ந்து பயின்று அடுத்த தலைமுறையினர் எமது கலைகளைப் பயில்வதற்கு நீங்கள் இருவரும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும், கனடிய மண்ணில் எமது தமிழ் மொழி, பண்பாட்டுடன் புது வரலாறு படைத்து, ஆரோக்கியமாக வாழ வேண்டும்’ என்றும் இளம் தலைமுறையினருக்கான கனடாவில் இருந்து வெளிவரும் ‘வதனம் இதழ்’ சார்பாக அதிசா, அய்ரா இருவரையும் அதன் நிர்வாக ஆசிரியரான கமலவதனா சுந்தா வாழ்த்தினார்.

சலங்கைப் பூசைக்கு வருகை தந்தோருக்குச் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு நிகழ்வு மிகவும் சிறப்பாக நிறைவுற்றது.

-குரு அரவிந்தன்