சென்ற சனிக்கிழமை 20-4-2024 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாகவும், உலகப்புத்தகத் தினத்தைக் கொண்டாடும் முகமாகவும் ரொறன்ரோவில் கனடியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டும், விற்பனைக்கும் கனடியத் தமிழ் எழுத்தாளர் இணையத்தால் வைக்கப்பட்டிந்தன. கனடாவின் பல பாகங்களில் இருந்தும் மிகப் பெரிய அளவில பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வுக்கு ஆதரவு நல்கினார்கள். முக்கியமாக இளையதலைமுறையினரும், சிறுவர்களும் பெற்றோருடன் வந்து கலந்து கொண்டு தமக்கு விரும்பிய நூல்களை வாங்கிச் சென்றது குறிப்பிடத் தக்கது.
இதன் மூலம் அடுத்த தலைமுறையினரிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும், இந்த மண்ணில் தமிழ் மொழி நிலைத்து நிற்க வேண்டும் என்ற எழுத்தாளர் இணையத்தின் ஆதங்கத்தை நிறைவேற்றவும் இந்த நிகழ்வு பெரும் உதவியாக இருந்தது.
கனடாவில் இதுபோன்றதொரு தமிழ் நூல்களின் சங்கம நிகழ்வு நடப்பது இதுவே முதற்தடவையாகும். சுமார் 50 மேற்பட்ட நூலாசிரியர்கள், பதிப்பகத்தினர், ஊடக நிறுவனங்கள் தங்கள் ஆக்கங்களை இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தி இருந்தனர். கனடா எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள், மஞ்சரிகள், மற்றும் ஏனைய தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் என்று பல விதமான இலக்கிய ஆக்கங்களும் இடம் பெற்று இருந்தன.
கலை 10 மணியளவில் மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து கனடா தேசியப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, அகவணக்கம் ஆகியன இடம் பெற்றன. தொடர்ந்து பொருளாளர் க. ரவீந்திரநாதனின் வரவேற்புரையும், தலைவர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமையுரையும் இடம் பெற்றன. அடுத்து மதிப்புக்குரிய பாஸ்ரர் ஜெயானந்தசோதி அவர்களின் வாழ்த்துரையும், தொடர்ந்து துணைத்தலைவரும், ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவருமான எழுத்தாளர் குரு அரவிந்தனின் உரையும் இடம் பெற்றன.
குரு அரவிந்தன் தனது உரையில் ரொறன்ரோவில் நடக்கும் இது போன்ற முதல் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும், குறிப்பாக வெற்றிகரமாக இந்த நிகழ்வு நடப்பதற்கு உதவியாக இருந்த இளைய தலைமுறையினருக்கும், நூல்களைக் காட்சிப்படுத்தியவர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். பொது அறிவை விருத்தி செய்யவும், எமது வரலாற்றைப் புரிந்து கொள்ளவும், எங்கள் மொழி இந்த மண்ணில் நிலைத்து நிற்கவும் இது போன்ற நூல்களின் கண்காட்சி இளைய தலைமுறையினருக்குப் பெரிதும் உதவியாக அமையும் என்பதை எடுத்துக் குறிப்பிட்டு, இதுபோன்ற ஒரு நிகழ்வை ஏற்படுத்திக் கொடுத்த கனடா தமிழ் எழுத்தாளர் இணைய நிர்வாகக் குழுவினருக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது சுமார் 10 எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை வெளியிட்டும், அறிமுகம் செய்தும் வைத்தனர். இரண்டு மணியளவில் கனடாவில் பிறந்து வளர்ந்த இளைய தலைமுறையினர் பங்குபற்றிய பட்டிமன்றம், நடனம், உரைகள், திருக்குறள் சார்ந்த உரைகள் போன்ற பயன்தரும் நிகழ்வுகளும் தமிழில் இடம் பெற்றன. பெற்றோர்கள் மிகவும் ஆர்வத்தோடு சிறுவர்களின் பங்களிப்பைப் பார்த்து ரசித்தனர். இதைவிட வாசகர்கள் தங்கள் அபிமான எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் மற்றும் கட்டுரையாளர்களையும் நேரடியாகச் சந்தித்து உரையாடவும், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த நிகழ்வு அவர்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. கௌரவ அரசியல் பிரமுகர்களும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வின்போது, மதிய உணவும், சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன. மாலை 5 மணியளவில் இணையத்தின் செயலாளர் கமலவதனா சுந்தாவின் நன்றி உரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
– குரு அரவிந்தன்