முத்தமிழ் என்று அழைக்கப்படுகின்ற இயல், இசை, நாடக வடிவங்களைக் கட்டிக் காப்பதில் புலம் பெயர்ந்து கனடா வந்த ஈழத்தமிழர்கள், வேலைப் பளுவுக்கு மத்தியிலும் மிகவும் ஆர்வத்தோடு அத்துறையில் ஈடுபட்டார்கள். தொடக்கத்தில் பொருளாதார ரீதியாகத் தங்களைத் தாங்களே நிலை நிறுத்திக் கொள்வதில் கஸ்டங்களை அனுபவித்தாலும், தங்களுடன் ஒன்றாக இணைந்த கலை வடிவங்களைப் புலம் பெயர்ந்த மண்ணில் வெளிக் கொண்டுவருவதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை.
அந்த வகையில் தமிழரின் கலை வடிவங்களை ஆரம்பத்தில் முன்னெடுத்துச் சென்றவர்களில் நடிகர், நாடக நெறியாளர், படத்தயாளிப்பாளர் என்று பல வடிவங்களில் இனங்காணப்பட்டவர்களில் திரு. ஸ்ரீமுருகன் அவர்களும் கலகலப்பு தீசன் அவர்களும் அடங்குவார்கள். இவர்கள் இருவரின் 50 ஆண்டுகால கலைச் சேவையைப் பாராட்டி, வாழும்போதே கௌரவிக்க வேண்டும் என்ற பெருவிருப்போடு இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதேபோல கலைஞர்களை வாழும்போதே கௌரவிக்கும் நிகழ்வில் முன்பு நாடக, திரைப்பட நடிகர் கே. எஸ். பாலச்சந்திரனுக்கு விழா எடுத்தபோது அந்த நிகழ்விற்குத் தலைமை தாங்கியிருந்தேன். தொடர்ந்து செந்தில்நாதன், கமல்பாரதிக்கும் அவர்களின் கலைச்சேவைக்காகக் கனடாவில் சென்ற மாதம் வெள்ளிவிழா கொண்டாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் இணுவில் என்ற ஊரைச் சேர்ந்த, ‘கலகலப்பு’ என்ற கையெழுத்து இதழை நடத்திய தீசன் அவர்கள் நகைச்சுவை நாடகம், திரைப்படம் போன்றவற்றின் மூலம் ‘கலகலப்பு தீசன்’ என்று கனடாவில் நன்கு அறிமுகமானவர். ‘கலகலப்பு’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்றையும் தயாரித்திருந்தார். கரவெட்டியைச் சேர்ந்த ஸ்ரீமுருகன் நடிப்பு, நாடகம், ஒப்பனை, திரைப்படம் என்று பல துறைகளில் கால் பதித்தவர். இவர்கள் இருவரையும் முதன் முதலாக கனடாவில் மகாஜனக்கல்லூரி முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி வீட்டில்தான் சந்தித்தேன். அன்று தொடங்கிய நட்பு, எழுத்து, நாடகத்துறையில் இருந்த என்னைத் திரைப்படத் துறைக்குள் உள்வாங்கியது. ஸ்ரீமுருகனின் ‘சுகம்சுகமே,’ ‘சிவரஞ்சனி’ மற்றும் வேலி போன்ற திரைப்படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதும் வாய்ப்பை அந்த நட்பு ஏற்படுத்தித் தந்தது. ஜனகன் பிச்ஸேசாரின் சிறந்த திரைக்கதை வசனத்திற்கான விருதைச் ‘சுகம் சுகமே’ திரைப்படம் 2007 ஆம் ஆண்டு எனக்குப் பெற்றுத்தந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் தமிழ்நாட்டின் கலைஞர் தொலைக்காட்சிக் குறும்படத்துறை என்னை உள்வாங்கியது.
இந்தக் கலைஞர்களைப் போலவே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட சிலரை, வாழ்நாள் சாதனையாளர்களாகக் கனடா எழுத்தாளர் இணையத்தின் மூலம் சமீபத்தில் கௌரவித்திருந்தோம். இயல், இசை, நாடகம் போன்ற துறைகளில் நேர்மையாக ஈடுபடுபவர்கள் பணத்தையோ அல்லது பதவியையோ எதிர்பார்த்துச் செய்வதில்லை, அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தங்கள் திறமைக்கு வாசகர்கள், ரசிகர்கள், நேயர்களிடம் இருந்து ஒரு பாராட்டைத்தான். அந்த வகையில் இங்குள்ள எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் அவர்களின் திறமையைப் போற்றி, வாழும்போதே அவர்களை மதிப்போம், இது போன்று அவர்களையும் கௌரவித்து மகிழ்வோம்!
-குரு அரவிந்தன்