தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பெற்ற எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜன் அவர்களின் நூல்கள் வெளியீட்டு மற்றும் அறிமுகவிழா சென்ற மே மாதம் 25 ஆம் திகதி 2024 அன்று கனடா ஸ்காபறோ நகரில் உள்ள பைரவி நுண்கலை மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் மேற்படி விழாவிற்கு தற்போதைய தலைவரும் கவிஞருமான அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.
மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து கனடா தேசியப் பண்ணும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பெற்றன. அடுத்து நிர்மலா இரத்தினசபாபதி அவர்களின் வரவேற்புரையும், தொடர்ந்து அகணி சுரேஸ் அவர்களின் தலைமை உரையும் இடம் பெற்றன. அவர் தனது தலைமை உரையில் ‘தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்டிருக்கும், இவரைப் போன்ற புலம் பெயர்ந்த படைப்பாளிகளை இனங்கண்டு அவர்களது ஆக்கங்களை வெளிக் கொண்டு வருவதில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் என்றும் முன்னின்று செயற்படும்’ என்று குறிப்பிட்டார்.
அடுத்து திரு. சாமி அப்பாத்துரை, திருமதி சுகல்யா ரகுநாதன், திரு அ. தேவதாசன், உதயன் ஆசிரியர் திரு. ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோரது வாழ்த்துரைகள் இடம் பெற்றன. தொடர்ந்து, ‘நல்லது நடக்கட்டும்;’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு திருமதி மேரி கியூரி போல் அவர்களும், ‘கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்’ என்ற கட்டுரைத் தொகுப்புக்கு திரு. தங்கராசா சிவபாலு அவர்களும், இலக்கியத்தென்றல் ‘பொன்விழா மலருக்கு’ சிந்தனைப் பூக்கள் எஸ். பத்மநாதன் அவர்களும், ‘கொத்துரொட்டி’ சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் இணைய உபதலைவர் திரு. குரு அரவிந்தனும் நயவுரை வழங்கினர்.
குரு அரவிந்தன் தனது நயவுரையில் கொத்து ரொட்டிக் கதைகள் பற்றிக் குறிப்பிட்டு, அனேகமான கதைகளில் கிராமிய பேச்சுவழக்கு இடம் பெற்றிருப்பதையும், மண்வாசைன, நாட்டுநடப்பு, குடும்பசூழல், பல்வேறு இனங்களுடன் நட்புறவைப் பேணுவது போன்ற விடயங்கள் இடம் பெற்றிருப்பதையும், வடமாகாணத்தில் ஆகக்கூடினால் உறவினர்களுடன் வேலிச்சண்டைதான் இடம் பெறும், ஆனால் கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்கள் பல்லின மக்களையும் எதிர் கொள்ள வேண்டிய சூழலில் இருப்பதையும், கஞ்சி குடிப்பதற்குக்கூட பயந்து வாழவேண்டிய சூழ்நிலையில் இருப்பதையும் அன்றே இவர் தனது கதைகளில் எடுத்தாண்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
கோவிலூர் செல்வராஜன் அவர்களைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவதானால், தற்சமயம் லண்டனில் வசிக்கும் இவரது இயற்பெயர் செல்வராஜன் இராசையா. இவர் ஒரு எழுத்தாளர், கவிஞர், ஈழத்து பாடகர், நடிகர், மற்றும் பத்திரிகை ஆசிரியர். இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் இருந்த இவர் பல நாடகங்களிலும் பங்கேற்று நடித்துள்ளார். இவர் எழுதிய முதலாவது சிறுகதை ‘விடியாத இரவுகள்’ என்பதாகும்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் செயலாளர் கமலவதனா சுந்தா அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து கோவிலூர் செல்வராஜனின் ஏற்புரை இடம் பெற்றது. அவர் தனது ஏற்புரையில் வருகைதந்த அனைவருக்கும் மற்றும் விழாவைச் சிறப்பாக நடத்திய கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
குரு அரவிந்தன்