நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுதான் ‘சூம்’ என்று சொல்லப்படுகின்ற மெய்நிகர் நிகழ்வாகும். பல்வேறு நாடுகளில் இருந்தும், பலரும் பங்கு பற்றக்கூடியதாகவும் இது அமைக்கப்பட்டிருக்கின்றது. சென்ற சனிக்கிழமை யூன் 15 ஆம் திகதி இலக்கியவெளி குழுவினர் சர்வதேச ரீதியாக இலக்கியம் சார்ந்து நடத்திய மெய் நிகர் நிகழ்வு ஒன்று இடம் பெற்றிருந்தது. கோவிட் காரணமாக வெளிவராத நூல்கள் பற்றிய திறனாய்வுகளும், கருத்துப் பரிமாற்றங்களும் கனடிய தமிழ் இலக்கியத்தின் துரித வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது.
இந்த நிகழ்வில் எழுத்தாளர் குரு அரவிந்தனின் படைப்புகள் என்ற தலைப்பில் பலர் உரையாற்றினார்கள். முதலில் அறிமுக உரை நிகழ்த்திய இலக்கியவெளி அகில் சாம்பசிவம் அவர்கள், சர்வதேசப் புகழ்பெற்ற, ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் அதிக வாசகர்களைக் கொண்ட எழுத்தாளர்களில் ஒருவரான குரு அரவிந்தன் ரொறன்ரோவில் கணக்காளராகவும், ஆசிரியராகவும் பணியாற்றுகின்றார். கனடிய தமிழ் சிறுவர் இலக்கியத்தின் முன்னோடியான இவர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம், பீல்பிரதேச குடும்ப ஒன்றியம் போன்றவற்றில் முக்கியமான பதவி வகிக்கின்றார். இதைவிட கனடாவில் இருந்து வெளிவரும் ‘தமிழாரம்,’ ‘வதனம்’ போன்ற இதழ்களின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது’ என்று குறிப்பிட்டார்.
அடுத்து உரையாற்றிய கலாநிதி மைதிலி தயாநிதி அவர்கள் குரு அரவிந்தனின் தற்போது வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகளான, இனிய நந்தவன வெளியீடுகளான ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ மற்றும் ‘யாதுமாகி நின்றவள்’ ஆகிய நூல்களோடு தொடர்பு படுத்தித் தனது உரையை நிகழ்த்தினார்.
தொடர்ந்து உரையாற்றிய வைத்திய கலாநிதி மேரி கியூரி போல் அவர்கள் மணிமேகலைப் பிரசுர வெளியீடுகளான ‘இதுதான் பாசம் என்பதா?’, ‘நின்னையே நிழல் என்று’ ஆகிய நூல்களைத் தொடர்பு படுத்தித் தனது உரையை நிகழ்த்தினார். 25 வருடங்களுக்கு முன் எப்படி எங்கள் சமூகக் கட்டமைப்பு இருந்து என்பதை, அனுராதா ரமணன் அணிந்துரை எழுதியுள்ள குரு அரவிந்னின் கதைகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன என்பதையும், தமிழகத்து பிரபல இதழ்களில் இந்தக் கதைகள் வெளிவந்திருப்பதையும் குறிப்பிட்டார். ஈழப்போராட்டம் சார்ந்த கதைகளை முதன் முதலாகத் தமிழக இதழ்களில் குரு அரவிந்தன் வெளிக் கொண்டு வந்து தமிழக வாசகர்களுக்கு அறியத்தந்ததையும் எழுத்தாளர் வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்) அதைப்பற்றிக் குறிப்பிட்டிருந்ததையும் எடுத்துக் காட்டினார்.
அடுத்து உரையாற்றிய கலாநிதி சு. குணேஸ்வரன் அவர்கள் ‘உறங்குமோ காதல் நெஞ்சம்,’ ‘உன்னருகே நானிருந்தால்’ ஆகிய நாவல்களைத் தொடர்பு படுத்தித் தனது உரையைத் தொடர்ந்தார். குரு அரவிந்தன் யாழ்ப்பாணத் தமிழில் ஏன் எழுதுவதில்லை என்ற தனது ஆதங்கத்தையும் அப்போது வெளிப்படுத்தினார்.
அடுத்து திறனாய்வாளர் சி. ரமேஸ் அவர்கள் ஞானம் இதழின் அட்டைப்பட நாயகனான குரு அரவிந்தனை ‘ஆச்சரியம் தரும் எழுத்தாளராகக்’ குறிப்பிட்டிருப்பதை எடுத்துக்காட்டி, குரு அரவிந்தனின் ஆறு நாவல்களை ஒப்பிட்டுத் தனது உரையைத் தொடர்ந்தார். ‘என்ன சொல்லப் போகிறாய்’ என்ற நாவலைப் பற்றிக் குறிப்பிடும் போது, கியூபிசக் கோட்பாட்டைப் (ஊரடிளiஅ) பின்பற்றி எழுதிய முதல் ஈழத்து எழுத்தாளர் குரு அரவிந்தன்தான் என்பதில் சந்தேகமில்லை. ஏனைய நாவல்களில் இருந்து இதன் படைப்பு முறைகள் மற்றும் சாராம்சத்தில் வேறுபடுத்தப்பட்டு, உளவியல் தரவுகளைக் கொண்டு, பல முன்னோக்குகளை ஆதாரமாகப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றது. எழுத்தாளர் அ.முத்துலிங்கத்திற்கு பிறகு வந்த எழுத்தாளர்களில் அதிகம் அறியப்பட்ட, பரந்துபட்ட வாசகர்களைக் கொண்ட எழுத்தாளராகக் குரு அரவிந்தன் இப்போது இருப்பது எங்களைப் பெருமைப்பட வைக்கிறது. முத்துலிங்கம் அவர்கள்; ஓரிடத்தில் ‘குரு அரவிந்தனின் நாவல்களை வாசிக்கும் போது, ‘ஐஸ்கிறீம் குடிப்பது போன்ற சுவை இன்பத்தையும், முடிந்துவிடுமோ என்ற ஏக்கத்தையும் அனுபவிக்க முடிகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். குரு அரவிந்தனின் எல்லா நாவல்களையும் குணேஸ்வரன் வாசிக்கவில்லை என்றுதான் நினைக்கின்றேன், வாசித்திருந்தால் அவருடைய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
அடுத்து தமிழகப் பேராசிரியர் முனைவர் கரு முத்தையா அவர்கள் உரையாற்றினார்கள். ‘எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய பொதுத் தமிழில் எழுதியபடியால்தான் இன்று குரு அரவிந்தன் பலரையும் கவர்ந்த சர்வதேச எழுத்தாளராக, தமிழகத்தின் அத்தனை பிரபல இதழ்களிலும் எழுதுவதால் மூன்று கோடிக்கும் மேற்பட்ட வாசகர்களைத் தனதாக்கிக் கொண்டிருக்கின்றார். சங்க இலக்கியப் புலமை மட்டுமல்ல, அறிவியல் சார்ந்த புனைவுகளையும் வெளிக்கொண்டு வந்திருக்கும் ஒரு எழுத்தாளனின் பெரிய பலமே அவனது வாசகர் வட்டம்தான், இதைத்தவிர வேறு என்ன வேண்டும்.’ என்று குறிப்பிட்டார்.
-சுலோச்சனா அருண்