கடந்த 23-08-2024 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ‘ஆக்குவாய் காப்பாய்’ திரைப்படத்தின் அறிமுக வைபவத்தில் ‘பாரதி ஆர்ட்ஸ்’ மதிவாசன் அவர்களின் அழைப்பை ஏற்று அனைவரும் அங்கு கலந்து கொண்டனர். நிகழ்வில் ஆரம்ப உரையாற்றிய மதிவாசன் அவர்கள் பின்வருமாறு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். ‘உலகில் பல நாடுகளில் வாழும் எமது தமிழ் மக்கள் மத்தியிலிருந்து தொடர்ச்சியாக பல திரைப்படங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் கனடாவிலும் அதற்கு விதி விலக்காக இருக்காமல் பல கலைஞர்கள் தொடர்ச்சியாக இந்த திரைப்படத்துறையில் இயங்கிவருகின்றார்கள்.
எனக்கும் இவ்வாறான சந்தர்ப்பங்கள் நிறையவே கிடைத்து வருகின்றன. அவ்வாறான சாதகமான சந்தர்ப்பங்களை நான் சரியாகவே பயன்படுத்தியுள்ளேன் என்று தான் நான் எண்ணுகின்றேன். அந்த வரிசையில் எனது இயக்கத்தில் தற்போது இந்த ‘ஆக்குவாய் காப்பாய்’ என்னும் திரைப்படம் இம்மாதம் 28ம் திகதி முதல் திரைக்கு வர இருக்கின்றது. இந்த திரைப்படத்திற்கான ஒளிப்பதிவை கனடா வாழ் கலைஞர் ஜீவன்ராம் ஏற்றுக்கொண்டு திறமையாகச் செய்துள்ளார். மேலும் நடிக நடிகைகள் மற்றும் இந்த திரைப்படத்தில் தோன்றிய குட்டி நட்சத்திரங்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எனவே எனது இந்த திரைப்படத்திற்கு இங்கு பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை நடத்தி வருகின்றவர்கள் என அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.