இந்திய நாட்டுத் தென் பகுதியிலே – ஓர்
இன்பத் தீவொன்றினைக் கண்டிடுவோம்
ஏற்றமுடைய அத்தீவினிலே பலர்
என்றும் வளத்துடன் வாழ்ந்தனரே
கன்னலும் செந்நெல்லும் காய்கறியாவுமே -யாரும்
களிப்புடன் அத்தீவில் பெற்றிடலாம்
மின்னும் மரகதம் மேலான முத்துக்கள்
இன்னும் பல வளம் அங்குண்டு காண்
சைவத் திருக்கோயில் பற்பலவாம் – அங்கு
பௌத்த விகாரைகள் பற்பலவாம்
யேசு மரித்தாயின் தேவாலயங்களும்
சிறந்த பள்ளி வாசலுமுண்டாம்
ஈழமெனப் பெயர் பெற்றவளாம் – அவள்
இலங்கை எனப் பெயர் கொண்டவளாம்
சூழும் அலை கடல் அவள் உடையாம் நல்ல
சுந்தரக் கோயில்கள் அவள் அணியாம்
சீனம் முதலான தேசங்களோடவள் – அன்று
சிறப்பாய் வியாபாரம் செய்திருந்தாள்
வானம் முட்டப் புகழ் பெற்றிருந்தாள்
அவள் வளத்தைக் கலக்கினர் ஜரோப்பியர்
கண்ணீர் வடித்துக் கலங்கிடும் காரிகை -தன்
கண்ணைத் துடைத்துக் கலங்குகின்றாள் அவள்
கண்ணீர் துடைப்பவர் யாருமில்லை அவள்
கவலை தணிக்கவோ யாருமில்லை
என்ன பழி செய்தேன் யானு மென்றே – அவள்
ஏங்கித் தவிக்கிறாள் மனதினுள்ளே
இல்லையோ தெய்வமும் இவ்வுலகில்
என் துணையாரென மயங்குகிறாள்.