கண்ணான கதிரவனே காவல்புரி நாயகனே
        எம்மீது இரக்கம் வைத்து எல்லா வளமும் தந்திடுவாய்
        காலாகாலத்தி லந்தக் கருமுகிலும் சுமந்து வந்து
        மேலாக எம் வயலுள் விதைத்திட்ட வித்துத் தானும்
        முளையாகி முனைத்து வந்து முதிய பயிர் வளர்ந்திடவே 
        சோனா மாரி பெய்து சுகந் தரவே வையுமப்பா (கண்)

        தலை சாய்க்கும் நெற்கதிர்கள் தக்கபடிதான் விளைய
        தழைத்து வளர்ந்து நிற்கும் வாழை மரக்குலை பழுக்க
        பச்சைப் பசேலென்றந்தப் பசிய கீரை முழைத்து வர
        அச்சமில்லாது நாமும் அன்புடனே வாழ்ந்திருக்(கண்)

        சீரான வாழ்வு பெற உன் திருவுள்ளம் இரங்கிடாதோ
        ஏர்பூட்டி உழுது வைத்தார் எம்முடைய மூதாதையர்
        வரம்புகள் கட்டி வைத்தார் வாழ வழிகாட்டி வைத்தார்
        'நீருயர நெல்லுயரும்" என்ற நீதி தன்னை வகுத்து வைத்தார்.  (கண்)

        நேர்மையுடன் பொறுமைதன்னை நீராகக் கண்டிடுவோம் 
        ஆர்வத்தோடு கல்வி கற்று நேசப் பயிரை வளர்த்திடுவோம்
        ஒழுக்கம் என்னும் உயர் வரம்பை உயர்த்தி நாமும் கட்டிடுவோம்
        உண்மை தனைப் பேசிப் பேசி ஒற்றுமையாக வாழ்ந்திடுவோம்