மரங்களே மாரிகால மரங்களே!
இலை உதிர்த்து எழில் நிறைந்து
குளிர் எதிர்த்து வாடா நிற்கும் மரங்களே
மரங்களே மாரிகால மரங்களே!
மா முனிவர் போல் உலகப்
பந்த பாசத் தொடர் அறுத்துப்
பட்ட மரங்கள் போலே நிற்கும்
மரங்களே மாரிகால மரங்களே!
இயற்கை தந்த அனைத்தும் சக்தி
இன்பம் தரும் ப+வாய்க் காயாய்க்
காண என்று ஏங்கி நிற்கும்
மரங்களே மாரிகால மரங்களே!
உரம் மிகுந்த உங்கள் பட்டை
உள் துளைத்து குளிர் நடுக்க ஒண்ணுமோ?
ஒவெனத்தான் நீங்கள் அலற முடியுமோ?
மரங்களே மரங்களே மாரிகால மரங்களே!
இயற்கை அன்னை விதித்தவிதி
இதுவே யென்று எண்ணி நீங்கள் நிற்கிறீர்
குளிரினையே நாங்கள் வெல்வோம் என்று கூறி நிற்கிறீர்
மரங்களே மாரி கால மரங்களே!