சேவலும், நாயும் நல்ல நண்பர்கள். இரண்டும் காட்டு வழியே நடந்து சென்றன. அப்போது இருட்டிப்போயிற்று. எனவே மேற்கொண்டு பயணம் செய்யாமல் ஒரு மரத்தடியில் அவையிரண்டும் தங்கிப்போக நினைத்தன.

சேவல் வழக்கம்போல மரக்கிளையில் ஏறிக்கொண்டது. நாயோ மரத்தடியில், வேர் ஒன்றின் ஓரமாகப் படுத்தது. சற்று நேரத்தில் இரண்டும் உறங்கிப் போனது.

விடியும் நேரம் வழக்கம்போல் சேவல் தனது சிறகுகளை அடித்தபடி 'கொக்கரக்கோ…' என்று கூவியது. சேவல் சத்தத்தைக் கேட்ட நரிக்கு விழிப்பு வந்தது. சேவலைப் பிடித்துத் திண்ண வேண்டும் என்ற ஆசையும் கொண்டது. மரத்தடிக்கு ஓடி வந்தது. மரக்கிளையில் சேவல் அமர்ந்திருப்பதை நரி பார்த்ததும் அதன் நாவில் நீர் ஊறியது.

சேவலைப் பார்த்து நரி சொன்னது:

'ஆகா! எவ்வளவு இனிமையான பாட்டு.  இதைப்பாடுகின்றவரைப் பார்த்து பேசவும், பாராட்டவும் நான் விரும்புகிறேன். அவர் கீழே இறங்கி வந்தால், நான் மகிழ்ச்சி அடைவேன்' என்று அன்பான குரலில் கூறியது.

சேவலோ நரியின் தந்திரத்தைப் புரிந்து கொண்டது: எனவே அதுவும் பணிவோடு கூறியது:

'உங்கள் பாராட்டு என்னைப் பெருமைப்படுத்துகிறது. நானும் உங்களைப் பார்க்க விரும்புகிறேன். ஆனால், எனது அண்ணனின் அனுமதி இல்லாமல் நான் கீழே இறங்க முடியாது. எனவே, இப்போது நான் எனது அண்ணனை அழைக்கிறேன்'

என்று கூறி, சேவல் தூங்கிக் கொண்டிருந்த நாயைச் சத்தம் போட்டு எழுப்பியது.

அலறியடித்து எழுந்த நாய், நரியை உடனே கண்டுகொண்டது. மறுகணம் அதன்மேல் பாய்ந்தது. இதை எதிர்பாராத நரி, தப்பினேன் பிழைத்தேன் என்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.