பரந்த வெளிகள்
        அகண்ட ஆகாயம்
        நீண்ட நதிகள்
        நிரம்பும் காற்று
        உயர்ந்த மலைகள்
        உள்ளாழக் கடல்கள்
        உருளும் சமுத்திரம்
        உவமையில் மீன்கள்

        சந்திரன் சூரியன்
        சனி முதற் கோள்கள்
        உயிர்ப்பன உயிரிலா
        எத்தனை படைப்புகள்
        இவையெல்லாவற்றிலும்
        எது முதல் தோன்றிற்று?

 

        கடவுள் படைப்பெனக்
        கண்ட இவற்றுள்
        மனிதன் முதலா?
        மரஞ் செடி முதலா?
        மிஞ்சிய முதலா?
        எது முதலென்ற
        ஜயம் தீர்க்க
        மேலை நாட்டினர்
        பரிணாமமென்ற
        கொள்கையை நாட்டினர்

        சமயம் என்ற 
        தடத்தில் பட்டோர்
        தத்தம் பாட்டில்
        விளக்கம் கண்டனர்
        ஓமென முழங்கி
        ஒரு பெருநாளில்
        விண்ணில் பறந்து
        விழுந்த இந்த 
        உலகம் தானும் 
        இறையது ஊதிய
        இயக்கமே என்று
        இந்துமக்கள்
        ஏற்றுக் கொள்ளவும்
        ஆதாம் ஏவாள்
        அவர்களோடு
        ஆனதே மற்றெலாம்
        என்றனர் ய+தரும்
        இஸ்லாமியர் கிறிஸ்தவர்
        எனப் பட்டோரும்

        கனவில் யாவும்
        தோன்றித் தோன்றிக்
        கனவுத் தெய்வம்
        வடித்ததே பாரென
        அவுஸ்திரேலிய அபொறிஜினர்
        அலசிக்காட்டவும்
        இந்தியர் எகிப்தியர்
        கொரியர் சீனர்
        மத்திய ஆசியர்
        செவ்விந்தியர்கள்
        எல்லோர் தாமும்
        இம்மண்ணிலெவ்வாறு
        மக்கள் தோன்றினர்
        மரஞ் செடி தோன்றின
        என்ற கதையை
        எடுத்தியம்புகிறார்.

        எப்போ மனிதர்
        எவ்விதம் தோன்றினர்?
        மரஞ்செடி முதலா?
        மக்கள் முதலா?
        என்ற வாதம்
        எமக்கேன்? எமக்கேன்?
        சீரிய வாழ்வு
        சிறந்த நோக்கம்
        மக்களோடு மரஞ்செடிதானும்
        மிருகம் பறவை
        மீனினம் யாவும்
        இம்மண்ணுலகில்
        இன்புடன்  வாழ
        வழிவகுத்திடவே
        மனிதரால் முடியும்.

        இருப்பினும் மனிதா
        என் செய்கின்றாய்?

        நச்சு வாயுவை
        நாளும் கக்கி
        பிராண வாயுவைப்
        பிழைத்துப் பிழைத்து
        மெல்ல மெல்ல
        எல்லா உயிர்களும்
        நசித்துப் போக
        நாளும் நலிந்திட
        வழியது கோலி
        வாழ்ந்து கொண்டு
        சகல உயிர்களும்
        சலித்து மறையும்
        சங்கடமான நிலையுண்டாக்கி
        மானிட வாழ்வையும்
        முடிக்க எண்ணினையோ?