2026 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் சென்ற சனி ஞாயிறு ஆகிய 19 ஆம் 20 ஆம் திகதிகளில் ரொறன்ரோவில் உள்ள பில் கோகர்த் மேல்நிலைப் பள்ளி மண்டபத்தில் 2வது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. “தொல்காப்பியத்தை நாம் ஏன் கற்க-கற்பிக்க கொண்டாட-பரவலாக்க வேண்டும்” என்னும் பொருண்மையின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக இடம் பெற்றது. தொல்காப்பியத்தை இலகுவான முறையில் இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளத் தக்க முறையில் பல இளைய தலைமுறையினரும் உள்வாங்கப்பட்டதால் அவர்களும் பங்களிப்பு வழங்கியிருந்தனர்.

தொல்காப்பியம் சார்ந்த போட்டிகளில் இளையோரும் முதியோரும் மிகவும் ஆர்வத்தோடு பங்குபற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியவர்களும் மிகச் சிறப்பாக உரையாற்றி இருந்தனர்.

17 ஆம் திகதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது 100க்கும் மேற்பட்ட தமிழ் மன்றங்கள், ஊர்ச் சங்கங்கள், கல்விக்கூடங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பெருவிழாவாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்,  செயலாளர் திரு. சுகந்தன் வல்லிபுரம்,  ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இல. சுந்தரம் ஆகியோர் இந்த 2வது மாநாடு பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தனர். அவர்கள் குறிப்பிட்டது போலவே மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது. பல நாடுகளில் இருந்தும் அறிஞர்கள் வந்து மாநாட்டில் கலந்து கொண்டனர்.

19 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணியளவில் பாரம்பரிய பறை இசை நடனத்துடன் விழா ஆரம்பமானது. தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்து, கனடாபண், மன்றப்பாடல், அகவணக்கம், நாட்டுக்கு நன்றிசொல்தல் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. தலைவர் முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் உரையைத் தொடர்ந்து மாநாட்டு மலரை அருட்திரு ஜோசப் சந்திரகாந்தன் அவர்கள் வெளியிட்டு வைத்தார். தொடர்ந்து திருமிகு காண்டீபன் கணேசலிங்கம், முனைவர் கால்டுவெல் வேல்நம்பி ஆகியோரது உரை இடம் பெற்றது. அடுத்து மாணவர் அரங்க நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. நிகழ்ச்சித் தொகுப்பாளராக திரு ரமணன் சந்திரசேகரமூர்த்தி பணியாற்றினார். இரண்டாம் நாள் தொகுப்பாளராக திருமதி ஜோதி ஜெயகுமார் பணியாற்றினார்.

2ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. இளையோர் மற்றும் பெரியவர்களுக்கான நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. யோகா நிகழ்ச்சி, கானமும் காட்சியும், வில்லுப்பாட்டு, அறிஞர் கருத்துரை, நடனம், தலைவர் உரை, தொகுப்புரை, கண்ணகி அம்மன் நாட்டிய நாடகம், முனைவர் நிருசா தவராசாவின் உரை, தொல்காப்பியம் சார்ந்த சிறுவர்களின் உரை போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இரண்டு நாட்களும் இணைய வழியாகவும் நேரடியாகவும் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.

இந்த மாநாட்டு ஆய்வரங்கில் பங்கு பெற்றுவதற்காக 300 மேற்பட்ட கட்டுரைகள் வந்திருந்தன. அவற்றி 96 கட்டுரைகள் மட்டுமே தெரிந்தெடுக்கப்பட்டன. பல தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றிருந்தாலும் மானிடவியலைச் சார்ந்து 3 கட்டுரைகள் மட்டுமே இடம் பெற்றன. அவற்றில இரண்டு கட்டுரைகள் இணையவழியாக இடம் பெற்றன. ஒரு கட்டுரைரையை ஞாயிற்றுக் கிழமை ஆய்வரங்கில் மானிடவியலில் “வெட்சித்திணையில் ஆநிரைகவர்தல்” என்ற தனது கட்டுரையை திரு. குரு அரவிந்தன்  நேரடியாக வாசித்திருந்தார். சபையில் இருந்த டாக்டர் வரதராசன் ரகுராமன், முனைவர் வாசுகி நகுலராசா, முனைவர் பார்வதி கந்தசாமி, திருமதி மைதிலி தயாநிதி ஆகியோர் காலத்திற்கு ஏற்ற சிறந்த கட்டுரை என்று குறிப்பிட்டுப் பெரிதாகப் பாராட்டியிருந்தனர். முதலாவது தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டிலும் குரு அரவிந்தன் அவர்கள் பனியும் பனிசூழ்ந்த “ஆறாம் நிலத்திணை”யைப் புதிதாக அறிமுகம் செய்திருந்தார். பட்டப்படிப்புக்காகப் பல மாணவர்கள் இந்தக் கட்டுரையைத் தேர்ந்தெடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மன்றத்தின் செயலாளர் திரு சுகந்தன் வல்லிபுரத்தின் நன்றியுரையுடன் 2வது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக நிறைவுற்றது. ஆய்வுக் கட்டுரைகள் நூல் வடிவிலும் இடம் பெற்றிருக்கின்றன. நிகழ்ச்சியை ஒன்றுபட்டுச் சிறப்பாக நடத்தி முடித்த செயற்குழுவினருக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும் பாராட்டுகள்.

-சுலோச்சனா அருண்