thedchanaசிறந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான தெட்சணாமூர்த்தி காவலூர் கரம்பொன் மேற்கு கிராமத்தில் பிறந்தவர். மலாயன் பென்சனியரான திரு.செல்லத்துரை, இரெத்தினம் தம்பதிகளின் ஐந்தாவது மகனான இவர் தனது இருபதாவது வயதிலிருந்தே சிறுகதைகள் எழுத ஆரம்பித்து தற்போதும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கின்றார்.1983ம் ஆண்டு முதல் கனடாவில் வசித்து வரும் இவர் 2001ம் ஆண்டு 'சுதந்திர மண்'என்ற சிறுகதைத் தொகுதியினை வெளியிட்டிருந்தார்.

இந்நூல் மணிமேகலை பதிப்பகத்தினரால் பிரசுரிக்கப்பட்டது. சுதந்திரமண்,பஞ்சாமிர்தம்,வேடதாரி, புனர்ஜென்மம் போன்ற பதினெட்டு சிறுகதைகளைக் கொண்டது இச்சிறுகதை தொகுதி. தமிழக த்தில் 1980ம் ஆண்டில் வெண்மதிப் பதிப்பகத்தார் நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சுதந்திர மண் சிறுகதை சிறந்த சிறுகதைக்கான பாராட்டுப் பரிசினைப் பெற்றமை குறிப்பிடத்தக் கது. வெகுவிரைவில் மற்றுமொரு சிறுகதைத் தொகுதியினையும் இவர் வெளியிடவுள்ளார்.

மேலைக் கரம்பொனைச் சேர்ந்தவர் என்பதனால் மேகமூர்த்தி என்ற புனைபெயரிலேயே இவர் ஆர ம்ப காலங்களில் சிறுகதைகளை எழுதிவந்தார். இவர் எழுதிய சிறுகதைகளுள் முதன் முதலாக பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை 'நிம்மதி ஏது?' என்பதாகும். வீரகேசரி நிறுவனத்தினரால் மித்திரனின் வார இதழாக வெளியிடப்பட்ட ஜோதி என்ற பத்திரிகையில் 1967ம் ஆண்டு வெளி வந்தது. அதனைத் தொடர்ந்து தினபதி பத்திரிகையில் தினமொரு சிறுகதை என்ற திட்டத்தில் இவரது பஞ்சாமிர்தம், ஸ்ரீதனம், பாலாபிNஷகம் போன்ற பல சிறுகதைகள் வெளிவந்தன. தொழில் நுட்பக்கல்லூரியின் நுட்பம், மல்லிகை ஆகிய மலர்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்தன. இவர் வெறும் கற்பனைக் கதைகளை எழுதாது சமூகத்திலுள்ள மூடநம்பிக்கைகள், அநீதிகள் ஆகியவற்றினைக் கருப்பொருளாகக் கொண்ட உண்மைக் கதைகளையே எழுதி வருகின்றார்.

தனது எழுத்துத்துறை அனுபவங்களுடன் தெட்சணாமூர்த்தி 1972ம்ஆண்டின் இறுதிக்காலப் பகுதி யில் வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராக இணைந்து கொண்டார். அதன் பின்னர் அவரது எழுத்தாற்றல் விரிவடைந்தது. சிறுகதைகளை மாத்திரம் எழுதிக் கொண்டிருந்த அவர் எஸ்.ரி.மூர்த்தி என்ற பெயரில் கட்டுரைகள், நேர்காணல், நாட்டிய, நாடக விமர்சனங்கள் ஆகியவற்றினையும் எழுதி வந்தார். அக்காலத்தில் பிரபல்யமாக இருந்த ஆனந்தவல்லி சச்சிதானந்தன், ரங்கா விவேகானந்தன் போன்ற பரத நாட்டிய தாரகைகளின் நேர்காணல் கட்டுரைகள், நாட்டிய விமர்சனங்கள், கணேசபிள்ளை, பாலேந்திரா போன்றோரின் நாடகங்கள் பற்றிய விமர்சனங்கள் ஆகியவற்றினையும் எழுதி வந்தார். மூர்த்தி அண்ணா என்ற பெயரில் வீரகேசரியின் வார இதழில் சிறுவர்களுக்கான குட்டிக் கதைகளையும் எழுதி வந்தார். உலக சாதனையாளர் ஆழிக்குமரன் ஆனந்தன் 1980ம் ஆண்டு தலைமன்னாரிலிருந்து தனுஷ;கோடி வரை நீந்திச்சென்று திரும்பவும் தலைமன்னாருக்கு நீந்தி வந்தபோது அப்போது ஈழநாடு பத்திரிகையில் பணிபுரிந்த பாமா இராஜகோபாலுடன் இவரும் வள்ளத்தில் கூடச்சென்று அச்சம்பவத்தினை முதலில் செய்தியாகவும் பின்னர் தொடர்கட்டுரையாகவும் வீரகேசரியில் எழுதினார். அதனையடுத்து இவர் வீரகேசரி மூர்த்தி என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

நாட்டு நிலைமை காரணமாகவும், பொருளாதார மேம்பாட்டுக்காகவும் இவர் தனது பத்திரிகையாளர் பதவியைத் துறந்து வெளிநாடு புறப்பட்டார். 1983ம்ஆண்டு கனடாவுக்கு வந்த இவர் தமிழ் தட்டச்சு இயந்திரமோ, கணணியோ இல்லாதிருந்த அக்காலகட்டத்தில் மொன்றியல் நகரில் 'கியூபெக்- ஈழத் தமிழ் ஒன்றியம்' வெளியிட்டு வந்த தமிழ் எழில் என்ற மாதாந்த கையெழுத்துப் பத்திரிகையின் ஆசிரியராக தொண்டாற்றி வந்தார். கதை, கட்டுரைகள், கவிதைகளை தானே வெவ்வேறு பெயர்களில் தனது கைப்பட எழுதினார்.

கனடாவில் ரொறண்டோ மாநகரிலிருந்து வெளிவரும் தமிழ் வாரப் பத்திரிகைகளான தங்கத் தீபம், செந்தாமரை, ஈழநாடு, முழக்கம், பிரான்ஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு போன்ற பத்திரிகைகளுக்கும் தொடர்ந்து இவர் வீரகேசரி மூர்த்தி என்ற புனைபெயரில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றினை எழுதி வருகின்றார். கரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உபதலைவராகவும், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் நூல் வெளியீட்டுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்து பொதுத் தொண்டும் புரிந்து வருகின்றார். இதனால் இவரை அறியாதோரும், தெரியாதோரும் இல்லை என்றே கூறலாம். பேர் புகழை விரும்பாது அடக்கத்துடன் ஆக்க இலக்கியத்தில் ஈடுபட்டு வரும் இவரை வாழும் போதே எமது கரம்பொன் இணையத் தளத்தின் மூலம் கௌரவிப்பதில் பெருமை அடைகின்றோம்.