வற்றாத நீருற்று
வரட்சி இல்லாப் பூஞ்சோலை
தென்றல் விளையாடும்
தென்னை மரத்தோட்டம்
வாழை இளஞ்சோலை
வளமுள்ள மாங்காடு
முந்திரிகைப் பந்தல்
முதிர்ந்த பழக்குலைகள்
சிறுவர் பூங்கா
மரங்களே மாரிகால மரங்களே!
மரங்களே மாரிகால மரங்களே!
இலை உதிர்த்து எழில் நிறைந்து
குளிர் எதிர்த்து வாடா நிற்கும் மரங்களே
மரங்களே மாரிகால மரங்களே!
மா முனிவர் போல் உலகப்
பந்த பாசத் தொடர் அறுத்துப்
பட்ட மரங்கள் போலே நிற்கும்
மரங்களே மாரிகால மரங்களே!
நேரான பாதை
நேரான பாதையிலே செல்வோம் செல்வோம்
நிலையாக ஓரிடத்தில் நிற்போம் நிற்போம்
சீராக யாவையுமே பார்ப்போம் பார்ப்போம்
சிறப்பான தனிவழியைக் காண்போம் காண்போம்.
பூவழகு
முல்லை மலர் மொட்டு
முகிழ்த்து வரும் ரோஜா
அல்லிமலர் அரும்பு
அரிய கனகாம்பரம்
மல்லிகைப் பூவினங்கள்
மகிழ்வூட்டும் அப்பிள்பூ
இல்லை எனாதபடி
இதழ் விரிக்கும் தாமரை
நயாகரா நீர்வீழ்ச்சி
நயாகரா நீர் வீழ்ச்சி
நாடுவோர் கண்காட்சி
வெண்பனி வீழ்வதுபோல்
வீழ்ந்திடும் நீரலைகள்
விசிறியே தண்ணீரால்
விளையாட்டாய் நனைத்துவிடும்
ஓடத்தில் போவோரங்கே
ஓடவே முடியாதப்பா
அம்மாவின் அப்பம்
அம்மா ஒரு நாள் எனக்கு
அப்பம் இரண்டு தந்தார்
அருமையான அப்பம்
அம்மா எனக்கு மூன்று
அப்பம் வேண்டு மென்றேன்
அன்புடன் என் அம்மா
அப்பம் மூன்று தந்தார்
'அம்மா நன்றி" என்றேன்
இலங்கை
இந்திய நாட்டுத் தென் பகுதியிலே – ஓர்
இன்பத் தீவொன்றினைக் கண்டிடுவோம்
ஏற்றமுடைய அத்தீவினிலே பலர்
என்றும் வளத்துடன் வாழ்ந்தனரே
கன்னலும் செந்நெல்லும் காய்கறியாவுமே -யாரும்
களிப்புடன் அத்தீவில் பெற்றிடலாம்
மின்னும் மரகதம் மேலான முத்துக்கள்
இன்னும் பல வளம் அங்குண்டு காண்
எங்கள் வீட்டுத் தோட்டம்
எங்கள் வீட்டுத் தோட்டம்
எல்லோருக்கும் நாட்டம்
இனிய றோசா மலர்கள்
எங்கும் நிறைந்த தோட்டம்
மஞ்சள் சிவப்பு வெள்ளை
மலர்கள் நிறைந்த தோட்டம்
மனதில் இன்பம் ஊட்டி
மகிழ வைக்கும் தோட்டம்
தைப்பொங்கல்
பொங்கல் விழா தனைத் தமிழர் கொண்டாடுவார்
புதுப் பானை தனைவைத்துப் பொங்கல் பொங்குவார்
பச்சரிசிப் பால்ப் பொங்கல் சர்க்கரைப் பொங்கல்
பதமாகப் பார்த்தெடுத்துப் பொங்கல் பொங்குவார்
மங்கலமாய் மனைமுன்னே கோலம் போடுவார்
மணி விளக்கை ஏற்றி வைத்து ஒளியைக் கூட்டுவார்
மாவிலையும் தேங்காயும் மஞ்சளும் வைப்பார்
மக்கள் உள்ளம் குளிர்விக்கும் கும்பம் ஏற்றுவார்
நல்லைநகர் நாவலர் (1822-1879)
நல்லை நகர் நாவலர்
நலங்கள் பல பெற்றவர்
சொல்லில் வாக்கு வன்மையில்
சுடரெனவே விளங்கினார்
சைவமதம் தமிழ்மொழி
தழைக்க வேண்டி நாளுமே
சமய நெறிகள் போற்றினார்
தமிழில் நூல்கள் இயற்றினார்