குயில்

        காக்கைக் கூட்டில் குயில் ஒன்று
        கவர்ந்து அதனுடை முட்டைகளை
        கோலாகலமாய் குடித்த பின்பு
        குள்ளமாய்த் தன் முட்டைகளை
        காகக் கூட்டில் இட்டதுமே
        கடுகப் பறந்து போனதுவே


மரங்களே மாரிகால மரங்களே!

        மரங்களே மாரிகால மரங்களே!
        இலை உதிர்த்து எழில் நிறைந்து
        குளிர் எதிர்த்து வாடா நிற்கும் மரங்களே
        மரங்களே மாரிகால மரங்களே!

        மா முனிவர் போல் உலகப்
        பந்த பாசத் தொடர் அறுத்துப்
        பட்ட மரங்கள் போலே நிற்கும்
        மரங்களே மாரிகால மரங்களே!


குருவி

        அழகான குருவியொன்று
        ஆலமர மீதிருந்து
        ஆனந்தமாகப் பாட்டுப் பாட

        அங்கே ஒரு வேடன் வந்து
        அதனைக் குறிவைத்துப் பார்த்து
        அம்பு தனை ஏவிவிட்டுப் பார்க்க


பருந்து

        பருந்து வானில் வட்டமிட்டுப்
        பறந்து கொண்டே போகுது
        பறவைக் கூட்டைக் கண்டதுமே
        பதிந்து கீழே தாவுது

        பச்சைக் குஞ்சை நெரித்துக் காலில்
        பற்றிக் கொண்டே போகுது
        பாவம் அந்தக் குஞ்சு தானும்
        கத்திக் கொண்டே போகுது


எங்கள் வீட்டு நாய்

        எங்கள் வீட்டு நாய் தான்
        எழுந்து வாலை ஆட்டும்
        என்னைக் கண்டு விட்டால்
        எழுந்து வந்து நக்கும்

        எலும்புத் துண்டு ஒன்றை
        எடுத்து அதற்குப் போட்டால்
        என்னை விட்டு அதனை
        எடுத்துக் கடித்துப் பார்க்கும்


நேரான பாதை

       நேரான பாதையிலே செல்வோம் செல்வோம்
        நிலையாக ஓரிடத்தில் நிற்போம் நிற்போம்
        சீராக யாவையுமே பார்ப்போம் பார்ப்போம்
        சிறப்பான தனிவழியைக் காண்போம் காண்போம்.


பூனைக்குட்டி

        பூனைக்குட்டி பூனைக்குட்டி எங்கு போனாய்
        பொன்னான லண்டன் மாநகரம் போனேன் 
        லண்டன் மாநகரத்தில் எதனைக் கண்டாய்?
        நதி கண்டேன்
        நதிமேலே பாலம் கண்டேன்
        நதிக்கரையில்
        வெஸ்ற்மின்ஸ்ரர் மணியைக் கண்டேன்


பூவழகு

       முல்லை மலர் மொட்டு
        முகிழ்த்து வரும் ரோஜா
        அல்லிமலர் அரும்பு
        அரிய கனகாம்பரம்
        மல்லிகைப் பூவினங்கள்
        மகிழ்வூட்டும் அப்பிள்பூ
        இல்லை எனாதபடி
        இதழ் விரிக்கும் தாமரை


நயாகரா நீர்வீழ்ச்சி

        நயாகரா நீர் வீழ்ச்சி
        நாடுவோர் கண்காட்சி
        வெண்பனி வீழ்வதுபோல்
        வீழ்ந்திடும் நீரலைகள்

        விசிறியே தண்ணீரால்
        விளையாட்டாய் நனைத்துவிடும்
        ஓடத்தில் போவோரங்கே
        ஓடவே முடியாதப்பா


குருவிக் கூண்டு

        கோணற் புளிய மரத்திலொரு
        குருவிக் கூண்டு அதில்
        கொஞ்சக் காலம் வாழ்ந்தனவே
        குருவி இரண்டு

        கூடி வாழக் குஞ்சுகளும்
        கீச்சுக் கீச்சென
        கொஞ்சிக் கொஞ்சிப் பாடினவே
        ஆரவாரமாய்