(அம்மா, சமூகத்திற்குச் சேவை செய்யத்தான் வேண்டும், ஆனால் எங்களுக்கு நீதான் வேண்டும் – மகளின் ஓலம் அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன.)
‘அம்மா, நீயும் எங்களோட நிற்கிறியா..?’ அருகே படுத்து இருந்த ஆறு வயது கடைசிப் பெண் சங்கீதா கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டாள்.
‘நிற்கலாம், ஆனால் கட்டாயம் வேலைக்குப் போகணுமே, நீ சமத்தாய் தூங்கு. அக்கா பார்த்துக் கொள்ளுவா’
அவளுக்கு ஆறுதல் சொல்லி, தட்டிக் கொடுத்து அணைத்து தூங்க வைத்தாள். பக்கத்துக் கட்டிலில் இரண்டாவது மகள் சுகன்யா எந்தவித கவலையும் இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்தாள்.
நேரத்தைப் பார்த்துவிட்டு வேலைக்குப் போவதற்காக அவசரமாக எழுந்து உடை மாற்றினாள். யாரோ அவளை அவதானிப்பது போல அவளது உணர்வு சொல்லிற்று. திரும்பிப் பார்த்தாள்.