கனடாவின் ஒரு பனிகொட்டும் குளிர் காலத்தில் தான் நான் அந்த பாடசாலையில் கால் வைத்தேன். இந்த நாட்டிற்கு வந்து சேர்ந்த நாள் முதலாய் இடைக் காலத்தில் எனை விட்டுப் பிரிந்து போன படிப்பைத் தொடர வேண்டும் என்ற எனது அவா, இதமான அந்த குளிர்காலத்தில் நிறைவேறியது.
தங்களால் எனக்கு எவ்வித கவலையும் வரக்கூடாது என்ற உறுதியோடு தங்களை  தாங்களே பார்த்துக் கொண்டு என்னைப் படிக்க மட்டும் வற்புறுத்தி வரும் அப்பா, அம்மாவை நினைத்துக்கொண்டு, அன்று பாடசாலை தொடக்க நாள் வகுப்பிற்குச் சென்றேன்.

ஆசிரியரிடம் அறிமுகத்தை முடித்து விட்டு மாணவர்கள் பக்கம் பார்வையை ஓட்டினேன். பரிச்சயமான உணர்வோடு எமது நாட்டவர்கள் நாலு பேர் மூலையில் உட்கார்ந்திருந்தார்கள். வகுப்பின் கடைசி ஓரத்தில் அவர்கள் இருந்த இடத்திற்கு பக்கத்தில் சென்று நானும் அமர்ந்தேன். வகுப்பில் பாடத்தை ஆசிரியர் தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருந்தார்.
 புதிய இடம், புதிய சூழல்.
வகுப்பறை சமச்சீரான இரைச்சலோடு நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் எனக்குள் ஒரு வெறுமையான அமைதி. அங்கு இருந்த நால்வரும் தமிழர்களாகவே பட்டது. யாரும் என்னோடு பேசவில்லை. நானாகப் பேச்சை ஆரம்பிக்கவும் எனக்குள் ஒரு கூச்சம்.

 விநாடிகள், நிமிடங்களாகி, மணித்தியாலம் ஆனபோது. வகுப்பு முடிவடைந்து எல்லோரும் வெளியே வந்தோம். அப்போது தான் அவன் என்னோடு வந்து பேசினான். சுருள் முடி, மாநிறம், வெள்ளை வெளேரென்ற அவனது பற்கள் நட்போடு கலந்த அவனது புன்னகையில் பளீரிச்சிட்டது.
''நீங்க Sri lanka வா?"
''பார்த்தா எப்படியண்ணை தெரியுது?
English அரைகுறையாத் தெரிஞ்ச அசல் யாழ்ப்பாணம். பெயர் மதன்! உங்கடை பெயர் என்னண்ணை.?"

''நான் ரவி. உங்களுக்கு Friends ஒருத்தரும் இல்லையே?"
''எனக்குத் தெரிந்த ஓராள் இங்கு படிக்கிறார்"" என்றேன் நான்.
ரவி அவசர அவசரமாகக் கேட்டான்.
''யாரைச் சொல்றீங்கள், தமிழாக்கள் எண்டா எப்படியும் எனக்குத் தெரிஞ்சிருக்கும் பேரைச் சொல்லுங்கள்."
அவன் சொல்லி முடிப்பதற்குள், நான் சொன்னேன் ''ரவி" என்று, தலையைச் சாய்த்து ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு இளநகை ஒன்றைச் சிந்தினான்.
 கூடவே நடந்தோம். கொரிடோர் தாண்டி,  நடுப்பகுதியில் இருந்த Library க்கு முன்பாக இருந்து கொண்டு ஆளுக்காள் பரிச்சயப்படுத்திக் கொண்டோம். நிறையத் தமிழ் மாணவர்கள் வந்தார்கள். எல்லோருக்கும் என்னை அறிமுகப்படுத்தினான் ரவி. class முடிந்ததும் பஸ் ஸ்டான்ட் வரை  வந்து என்னை பஸ் ஏத்தி, பஸ்யையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, தன் வீடு நோக்கி நடந்தவனையே நான் பஸ்க்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சின்னஞ் சிறு உருவமாய் அந்தத் திருப்பத்தில் அவன் நல்ல நண்பனாக முதல் நாளே மனசுக்குள் நிறைந்து போனான்.

 அன்று இரவு முதன் முதல் எனது கைகளில் தவழ்ந்து கொண்டிருந்த என்னருமைப் புத்தகங்களை மறுபடியும்  மறுபடியும்  பார்த்துக் கொண்டேன். படித்தும் பார்த்தேன். ஒன்றும் விளங்கியதாய் தெரியவில்லை. ஆங்கிலம் பிடிவாதமாய் என்னிடம் வர மறுத்தது. முதல் நாள் புத்துணர்வோடு பகீரப் பிரயத்தனப்பட்டு விட்டு, களைத்துப் போய் படுத்தேன்.
 உடனே தூக்கம் வரவில்லை. படுக்கையில் சாய்ந்தபடியே ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். பார்க்கும் திசையெல்லாம், பனி கோலம் போட்டிருந்தது. நான் பார்க்கும் போதும் பனி இலேசாகக் கொட்டிக் கொண்டிருந்தது.  கண்ணுக் கழகாய்த் தெரியும் இந்த வெள்ளைப் பனி உடலில் பட்டால் இதமாய்க் குளிர்ந்து மெதுவாய் ஆளைக் கொல்லவும் கூடும் என்பதை நினைக்கும் போது அழகோடு உள்ள ஆபத்தும் புரிந்தது.
 ரவி முதல் நாளில் எனக்குக் காட்டிய பரிவை, எண்ணி எண்ணிப் பார்த்தேன். புத்தம் புதிய சூழலை எனக்கு இலகுவாக்கிய அந்த நல்ல நண்பனை நன்றியோடு நினைத்தே உறங்கிப் போனேன். உறக்கம் ஆழமாக என்னை ஆக்கிரமித்திருந்தது.

 காதோரம் மேசைக் கடிகாரம் ரிங்….ரிங் என்று ஒலித்த போது திடுக்கிடவில்லை. எதிர்பார்த்த ஒலி தானே மற்றவர்களைக் குழப்பக் கூடாதென்று உடனே நிறுத்திவிட்டேன். ஆறுதலா உடம்பை நீட்டி நிமிர்ந்து  என்னைத் தயார் படுத்திக் கொண்டேன்.
 
 இன்று Class இற்குள் போனதும் ரவி பக்கத்தில் சென்று உட்கார்ந்து கொண்டேன். நீண்ட நாள் பழகியவர்கள் போல் இருவருமே நடந்து கொண்டோம். அவனிடம் நிறைய விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன. பகட்டான பந்தாக் குணம் அவனிடம் இருக்கவில்லை. யதார்த்தத்தைப் புரிந்து கொண்ட எளிமை அவனிடம் இருந்ததை என்னால் உணர முடிந்தது. பாடம் முடிந்ததும் பக்கத்தில் இருந்த 7 Eleven இல் சென்று ஒரு Coffee யும் Pattyம் சாப்பிட்டு விட்டு இரண்டாவது Floor, கொரிடோர் மூலையில் நின்று கொண்டோம் வெளியே குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. அது எப்படி இருக்கும் என்று நினைத்தாலே, இப்போது உள்ளுக்குள் குளிர்கிறது.
 அவன் மிகமெதுவாக மனசைத் திறக்க ஆரம்பித்தான். அந்த வயதில் எல்லோருக்குமே! வரும் இயற்கையான உபாதை தான் அவனுக்கும் வந்திருக்கிறது.
''மதன் நான் அவளை இதே School இல் தான் முதல் சந்திச்சனான். அவள் என்னைச் சந்திச்ச நாள் முதல் என்னோட பல்லியமா தான் நடந்து கொள்ளுவாள். எனக்கு அவளை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கும்"
ரவி இதைக் கூறி நிறுத்தியதும். அவளை நான் உடனடியாகப் பார்க்க வேண்டும் போல் பட்டது.
இந்த நல்லவனை தன்னை நாடச் செய்த அந்த பெண் யாராக இருப்பாள். ஒரு கணம் அழகழகான பல பெண்களின் உருவங்கள் மனக் கண் முன் தோன்றி மறைந்தது. கற்பனையை நிறுத்தி விட்டு.
''என்ன ரவி பேரும் சொல்லேல்ல
ஆள் இதே School தான் படிக்கிறதெண்டா
இதுக்கேன் இப்படி இழுத்தடிக்கிறீர்"" என்றேன்.
''அப்படியொண்டும் மறைக்க வேணும் எண்டில்ல மதன், கொஞ்ச நேரத்தில அவளே இங்க வருவா பாரும்"" என்று ரவி சொல்லி முடித்ததும். அந்தக் கொரிடோரில் வந்து போகும் அத்தனை தமிழ் பெண்களையும் அக்கறையோடு பார்க்கத் தொடங்கினேன்.
 ஒவ்வொருவர் எங்களைக் கடந்து போகும் போதும் ரவி இன் முகத்திற்குள் விடை தேடினேன். இதில்லை என்பது போல் ஒரு புன்சிரிப்பை வீசிவிட்டு தன் வலது கையால் நெற்றியில் தட்டிக் கொள்வான். நெற்றியில் அப்படித் அவன் தட்டுவதை அடிக்கடி நான் கவனித்திருக்கிறேன்.  எனக்கு ஒன்றுமே பேசத் தோன்றவில்லை. கொரிடோரை நோட்டமிடுவதும், பின் ரவி முகத்தைப் பார்ப்பதும், அவன் அதற்கு ஒரு சிரிப்புச் சிரித்து விட்டு கொரிடோரைத் திரும்பிப் பார்ப்பான். இப்படியே ஒரு வித எதிர்பார்ப்போடு சில நிமிடங்கள் கழிந்து விட்டன.

 நாங்கள் நின்று கொண்டிருந்த மூலைக்குப் பக்கத்தில் இருந்த Computer room கதவு திறந்து கொண்டது. அங்கிருந்து தான் அவள் எங்களை நோக்கி வந்து என்னை ஒரு முறை பார்த்து விட்டு  ரவி ஐப் பார்த்துக் குசலம் விசாரித்துக் கொண்டாள்.
''மதன் இவதான் நீத்ரா"
இருவரும் பரஸபரம் 'ஹலோ" சொல்லிக் கொண்டோம். அதற்கு மேல் அந்த இடத்தில் நின்று ரவி இற்கும் நீத்ராவிற்கும் 'சிவபூசையில் கரடி போல்" இருக்க விரும்பாமல் ஒரு Phone எடுக்க வேண்டும். என்று சாட்டுச் சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றேன். கொரிடோரை விட்டு அகலமுதல் ஒரு முறை என்னைப் பற்றித் தான் ஏதோ பேசிக் கொள்வது போல் பட்டது. என்ன பேசிக் கொள்ளப் போகிறார்கள்? என்னை ரவிக்கு  தெரிந்தே முழுசாக இரண்டு நாட்கள் முடியவில்லை!
 அவர்கள் விட்டு விலகி சிறிது நேரம் தனியே இருந்தது, கடுந்தவம் புரிவது போல் கஷ்டமாகப்பட்டது. இங்கும் அங்கும் பாடசாலை முழுவதும் சுற்றித் திரிந்தேன். பின்பு ஒரு தடவை ரவி ஐயும் நீத்ராவையும் டுiடிசயசல யில் ஒரு மூலையில் பார்த்தேன். மனசுக்குள் காதலுக்கு வாழ்த்துச் சொல்லி விட்டு அப்பால் சென்று விட்டேன். அதன் பிறகு பாடசாலை முடியும் வரை ரவி ஐப் பார்க்வில்லை.
இப்படியே அந்தப் பாடசாலை நாட்களில் நான் ரவியுடன் பேசிக் கொண்டிருப்பதும் நீத்ரா வந்ததும் அவர்களின் சுதந்திரத்தைப் பாதிக்காத வண்ணம் விட்டு விலகுவதும். எனது வாடிக்கையாக போனது. ரவி – நீத்ரா காதல் கதை School முழுவதும் ஆரோக்கியமாக உலாவந்தது. ரவியுடன் நான் நெருக்கமாக இருப்பதால் என்னிடம் சிலர் கேட்பார்கள் அவர்கள் கேட்ட போதெல்லாம் பெரிய தலையசைப் போடு நான் ஆமோதிப்பதுண்டு.
 அன்றும் அப்படித்தான் நானும் ரவியும் பேசிக் கொண்டிருந்தோம். நீத்ரா வெகு வேகமாக அழுது படி எங்களிடம் ஓடி வந்தாள். ரவி ஐ முந்திக் கொண்டு நான் தான் கேட்டேன்.
''என்ன நீத்ரா? என்ன? ஏதாவது பிரச்சனையா?
அப்போதும் அவள் என்னைக் கணக்கெடுக்கவில்லை. ரவி இடம் தான் பதட்டத்தோடு கூறினாள்.
''ரவி,  சுரேசும் அவற்ற குசநைனௌ இரண்டு பேரும் என்னைட்ட தாறுமாறா எல்லாம் கதைச்சிட்டுப் போயினம்"
''ரவி ஓட போறனி எங்களோடயும்  
வாவன் என்ன Rate என்று சொன்னா நாங்க மூன்று மடங்கு தாறம். அப்படி, இப்படி என்று
ஏதோ எல்லாம் சொல்லினம்."
என்று சொல்லிவிட்டு அவள் சுவரோடு சாய்ந்து சிறிது நேரம் அழுதாள்.
எனக்குள் முகம் தெரியாத அந்த சுரேஸின் மேல் கோபம் கூடியது. ரவி இன் நட்பிற்காக எதையும் சந்திக்க நான் தயாராக இருந்தேன். அவர்கள் 7 Eleven இல் நிற்பதை நீத்ராவிடம் கேட்டறிந்தான் ரவி. இருவரும் 7 Eleven
நோக்கிப் போனோம். அந்த மூவரில், இருவர் மட்டும் அங்கு நின்றார்கள். இருவரையும் நெங்கியதும் ரவி தான் பேச்சை ஆரம்பித்தான்.
எனக்குள் நட்பிற்காய்ப் பொங்கிய கோபம் பொறுமை காக்கவில்லை.
சுரேஸின் முகம் எனது கை முட்டியில் வந்து இடியாய் மோதியது. கை கலப்பு ஒரு திரைப்படக் காட்சி போல் நன்றாக அரங்கேறியது. சுரேஸ் முகத்தில் ரத்தத் தோடும் கோபத்தோடும் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டான். சுரேஷ் முன்பு இதே School இல் தான் படித்தான் என்று ரவி சொன்னான்.
இருவரும் அப்படியே வீடுகளுக்குப் போவோம் எனத் தீர்மானித்து, அதன் படியே நடந்து கொண்டோம்.

 மறுநாள் பாடங்களில் கவனம் செல்லவில்லை ஏனோ, தானோ என்று வகுப்பில் இருந்து விட்டு Lunch இல் கொரிடோரிற்கு நானும் ரவி வந்தோம். சுரேஸை அடித்ததற்காக அடிக்கடி நன்றி கூறிக் கொண்டான் ரவி. நான் இந்த பாடசாலைக்கு வந்த நாள் முதல் எனக்கு உதவிகள் செய்து வந்த டுடழலன இற்கு ஒரு பதிலுபகாரம் செய்தது போல் பட்டது. என்னை நினைத்து நானே பெருமைப்பட்டுக் கொண்டேன்.
 கொரிடோரில் நின்றபடி நீத்ராவை இருவருமே எதிர்பார்த்துக் காத்திருந்தோம். வழமைக்கு மாறாக சிறிது தாமதமாக நீத்ரா வந்தாள். பளிச்சென்று மனதைப் பறித்துக் கொள்ளும் அவளின் அழகான முகத்தில் அன்று எள்ளும், கொள்ளும் வெடித்தது. முதல்நாள் 7 Eleven சம்பவம் காரணம் என்ன என்று தெரியாமல் பாடசாலை முழுவதும் எல்லாத் தமிழர் வாயிலும் பேசப் பட்டிருக்க வேண்டும். காரணம் தெரிந்த இவள் கோபத்தோடு வந்திருக்கிறாள்.
''என்ன மண்ணாங்கட்டிக்கு நீர் சுரேஷ{க்கு அடிச்சனீர்"
கேள்வி என்னை நோக்கி அழுத்தம் திருத்தமாக வந்தது.

 நான் சிறிது நேரம் அவள் முகத்தையே பார்த்தேன். என்ன ஒரு முட்டாள் தனமான கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்கிறாள். இவள் நேற்று இதே இடத்தில் அழுது நின்றதை மறந்து விட்டாளா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை!
''நான் அவனை அடிச்சது ரவி இற்காக"
உப்புச் சப்பில்லாமல் எனது உண்மைக் காரணத்தைச் சொன்னேன்.
அவளின் அடுத்த கேள்வி தீர்க்கமாக வெளி வந்தது.
''ஏன் சுரேஷ் ரவி இற்கு என்ன செய்தவர்?"
 இப்போது நான் முழித்தேன். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை? ரவி ஐப் பார்த்தேன்  ரவி ஒன்றும் சொல்லாமல் என்னைப் பார்த்து விட்டு அவளை பார்த்தான்.
நீத்ரா பேசத் தொடங்கினாள்.
''மதன் உம்மில எனக்கு எந்த விதமான தப்பான அபிப்பிராயமும் இல்லை. ஆனா ரவி தான் இல்லாத ஒரு காதலை இருக்கறதா எல்லா இடமும் சொல்லி வதந்தியைக் கிளப்பி விட்டிருங்கிறார். சுரேஷ் நேற்று இப்படி ஒரு பொய்யை ரவி இட்ட சொல்லச் சொல்லி எனக்கு ஐடியா தந்தது, நானும் அதுக்கு ரவி இன்ர Reaction
ஐ அறியிறதிற்காக அப்படி சொல்ல நீங்க அதுக்குள்ள தலையைப் போட்டு பிரச்சனையைத் திசை திருப்பி விட்டிட்டீங்கள்"
 எனக்கு அவள் சொல்லச் சொல்ல…..
புயல் காலத்தில் கடல் கொந்தளிப்பது போல் மனசு கொந்தளித்தது. தனக்கு அவள் கூறியதாகவும், தான் அவளுக்குக் கூறியதாகவும் எத்தனை காதல் வரிகளை ரவி என்னிடம் கூறியிருக்கிறான். அத்தனையும் 'பொய்' என்கின்ற போது ரவி உன்னதமான நண்பன் என்ற உயர்வான எண்ணங்கள் எல்லாம் உடைந்து சுக்கு நூறாகிப் போனது.
 அவள் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருந்தாள்.
''நான் ஒரு நாளும் ரவி இடம் காதலிக்கிறன் என்டு சொன்னதே இல்லை. அவரும் ஒரு நாளும் கேட்டதும் இல்லை. அப்படி இருக்க எப்படி இது காதலாகும்? இந்த நாட்டுக்கு வந்தும் கதைச்சாலே காதல், என்ற முட்டாள் தனத்தை ரவி இன்னும் கைவிடேல்ல"
எனக்கு இப்போது சகலமும் புரிந்தது மற்றவர்கள் என்னிடம் இந்தக் காதலைப் பற்றிக் கேட்டதையும் அதற்கு நான் ஆமோதித்துச் சொன்ன பதில்களையும் ரவி இடம் கூறிய போதெல்லாம் ரவி பெரு மிதமான சிரிப்போடு அவற்றை ஏற்றுக் கொண்டிருக்கிறான். எனக்குள் இப்போது குற்ற உணர்ச்சி குறுக்குறுத்தது. எப்படி நான் ஒரு தரங்கெட்ட மனிதனுக்குத் துணை போகும் முட்டாளானேன்?
 இல்லாத ஒரு காதலுக்காய் வேண்டாத ஒரு விரோதத்தினை பிரசவித்த இந்த நட்பில் எனக்கு வெறுப்பு அதிகமாகியது. அதற்கு மேல் எனக்குப் பாடசாலையில் இருக்கப் பிடிக்கவில்லை. தொன் கணக்கில் வேதனைகளை மனதில் கொண்டு தாங்க முடியாத சுமையோடு வீடு நோக்கி நடந்தே வந்தேன். பஸ் பிடித்து அவசரமாக வீடு வரும் வரை மனமில்லை அப்போது.
 பனியின் காட்டு மிராண்டித்தனமான பிடிக்குள் இருந்த நீளமான அழகிய தெருக்களில். குளிர் உடம்பைக் குடைய நடந்தேன் வீடு நோக்கி, அரைகுறை மனிதனோடு கொண்ட அவசர நட்புக்காய் எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை.

 அதன் பின் பல தடவைகள் சுரேஸைப் பார்த்திருக்கிறேன். பார்க்கும் போதொல்லாம் நட்போடு பேசிச்சிரித்து தன் பெருந்தன்மையை என்னிடம் காட்டியிருக்கிறான். எனக்குள் மாத்திரம் சங்கடம் நெளியும்.
இப்போது கோடை காலம் சூரிய தேவனின் பட்டொளியில் கண்ணுக்கு நிறைவாக, தெளிவாகத் தெரியும் நீலவானம் அதுவும் என் மனம் போல…..

 -செல்வக்குமார். கதிரவேற்பிள்ளை