Screenshot

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவானது ஆரம்பமாகியுள்ளது.

இன்றையதினம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை சேர்ந்த நற்குணம் அபிராமி என்ற மாணவி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக வரலாற்றில் மருத்துவ பீடத்திலிருந்து ஒருவரே எட்டு தங்க பதங்கங்களை பெற்ற இந்த விடயமானது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

குறித்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் வரலாறு படைத்த மருத்துவப் பீட மாணவி நற்குணம் அபிராமி! அவர் ஒரு தலைமுறைக்கான முன்மாதிரி இளம் தலைமுறையினர், உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள் பெருமையுடன் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு சிறப்பான செய்தி. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா 19.02.2026 தொடக்கம் 22.02.2026 வரை சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஒரு பொற்கால நிகழ்வாக, ஒரு வரலாற்றுச் சாதனையை உலகிற்கு அறிவித்த தருணமாகவும் மாறியுள்ளது.

19.02.2026 அன்று நடைபெற்ற மருத்துவப் பீட மாணவர்களுக்கான பட்டம் வழங்கிய நிகழ்வில் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரினால் பல தடைவைகள் ஒரு மாணவியின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்பட்டது, அழைக்கப்பட்டது. ‘நற்குணம் அபிராமி” என்று அழைத்து பட்டம் கொடுத்த பின் பிறகும் ‘நற்குணம் அபிராமி” என அழைக்கிறார் இப்படி எட்டு தடவையாக மீள மீள நற்குணம் அபிராமி எனும் பெயர் மண்டபத்தில் ஒலிக்க எல்லோர் விழிகளும் அவளை நோக்கியே குவிந்தது. ஆம் ‘நற்குணம் அபிராமி” எனும் மருத்துவ பீட மாணவி தனது மருத்துவ படிப்பின் பல்வேறு துறைகளிலும், அதீத திறமையை வெளிப்படுத்தி மருத்துவ பட்டத்தோடு மட்டுமல்லாமல் ஒரே தடவையில் எட்டு (08) தங்கப்பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டார். ஒவ்வொரு முறையும் அந்த பெயர் உச்சரிக்கப்படும் போது, அரங்கில் இருந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பட்டம் பெற வந்திருந்த மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் படப்பிடிப்பாளர்கள் என அனைவரின் கவனத்தையும் பல்வேறு துறைகளில் அவர் பெற்ற சாதனைகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. –

மருத்துவப்படிப்பின் அனைத்து கட்டங்களிலும் (Final MBBS) முதலிடம் – மகப்பேற்றியல் (Obstetrics and Gynaecology) – சத்திர சிகிச்சை துறை (Surgery) – குழந்தை நல மருத்துவத் துறை (Paediatrics) போன்ற முக்கிய துறைகளில் விசேட சித்தி. – மற்றும் மருத்துவ பீடத்திற்கான சிறந்த மாணவருக்கான விருது என பல சிறப்பு துறைகளுக்கான விருது, பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதுவே யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் மருத்துவப் பீட வரலாற்றில், இது வரை நிகழாத ஒரு தனித்துவமான நிகழ்வாகும். பல்வேறு துறைகளில் எட்டு தங்கப் பதக்கங்கள் என்பது ஒரு வரலாற்றுச் சாதனை. ஒரே மாணவரால் அதிக எண்ணிக்கையில் பெறப்பட்ட பதக்கங்களாக இது பதிவாகியுள்ளது.

சாதாரண நடுத்தர குடும்பப் பின்னணியில் இருந்து கல்வியை நோக்கமாகக் கொண்டு முன்னேறிய இவர், தன்னுடைய ஊரான நயினாதீவிற்கும், கல்வி கற்ற பாடசாலைக்கும், பல்கலைக்கழகத்திற்கும் மட்டுமல்லாது முழு இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரது சாதனையைப் பார்த்து துணைவேந்தர் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்ததுடன், வேந்தரும் தமது ஆச்சரியத்தையும் பாராட்டையும் பதிவு செய்தனர். அத்தோடு நின்று விடாமல் முழு அரங்கமே கைதட்டி தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். அதாவது, மருத்துவப் படிப்பிற்குள் நுழைவதே பலருடைய பெரிய கனவு. அதனை வெற்றிகரமாக முடிப்பதே மிகப்பெரிய சாதனை. ஆனால், அதற்குப் பின் ஒவ்வொரு துறையிலும் உச்ச சாதனையைத் தொட்டு, தனித்துறைகளுக்கான சிறப்பு தங்கப் பதக்கங்களைப் பெறுவது அரிதான நிகழ்வு. சத்திர சிகிச்சை, மகப்பேற்றியல், குழந்தை நல மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்கி, எட்டு பதக்கங்கள் மேடையில் வழங்கப்பட்ட தருணம் அந்த அரங்கில் இருந்த அனைவருக்கும் மறக்க முடியாத நினைவாக மாறியுள்ளது.

இன்று இலங்கை முழுவதும், குறிப்பாக யாழ்ப்பாணத்தில ; சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு, பாரட்டப்படும் இந்தச் செய்தி, சாதாரண வெற்றிக் கதை அல்ல இது உழைப்பின், ஒழுக்கத்தின், கல்விப் பற்றின் வெற்றி ஆகும். புனிதமான மருத்துவத் துறையைத் தேர்வு செய்து, அதில் வரலாறு படைத்து, ‘கல்வியால் சமூகம் எவ்வளவு உயரத்திற்கு செல்ல முடியும்” என்பதற்கு அபிராமியின் இச் சாதனை ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.

கரம்பொன் நெட்” இணையத்தளம் சார்பில் மருத்துவ கற்கையில் சாதனை படைத்த எதிர்கால மருத்துவ கலாநிதி நற்குணம் அபிராமி அவர்களை வாழ்த்துகின்றது.