உலகின் பல பாகங்களில் நாடக நிகழ்வுகளை நடத்தி வரும், லண்டனைத் தளமாகக் கொண்ட தமிழ் நாடக நெறியாளர் க.பாலேந்திராவின் ‘பிரத்தியேகக் காட்சி ஏழு நாடகங்களும் பதிவுகளும’ நூல் அறிமுகமும் அரங்க நினைவலைகள் நிகழ்வும், 02.11.2025 அன்று மாலை 3:00 மணி அளவில் Agincourt Community Centreஇல் நடைபெற்றது. கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் ப.ஸ்ரீஸ்கந்தன் தலைமை வகித்தார்.

கனடா தாய் வீடு பத்திரிகை இந்த நிகழ்வுக்கு ஆதரவு வழங்கியது.
முதலில் அகவணக்கம் அனுட்டிக்கப்பட்டது.
கனடா நாட்டில் நாடகங்கள் பல மேடையேற்றி புகழ் பெற்றவரும் பாலேந்திராவின் உற்ற நண்பருமான அமரர் நா.சாந்திநாதன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, ஸ்ரீஸ்கந்தன் தலைமையுரை நிகழ்த்தினார்.
“1975ஆம் ஆண்டு ‘பிச்சை வேண்டாம்’ என்ற நாடகம் மூலம், பாலேந்திராவும் ஆனந்தராணியும் இணைந்தனர். அதைத் தொடர்ந்து ஐம்பது வருடங்கள் இவர்கள் நாடகத்துறையில் தம்பதியராக பயணித்து வருகிறார்கள். இது எல்லோருக்கும் கிடைத்து விடாது.
தொடர்ச்சியாக 50 வருடங்கள் ஒவ்வொரு வருடமும் நாடகங்களை மேடையேற்றுவதும் நாடகங்களை தயாரிப்பதும் என்று இயக்குபவர் உலக தமிழ் நாடகப்பரப்பில் பாலேந்திரா ஒருவராகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். பிற மொழியாக்க நாடகங்களோடு மண்ணின் பிரச்சனைகளைச் சொல்கின்ற பல நாடகங்களை இவர் மேடையேற்றி உள்ளார்.
பிற மொழி நாடகங்களும் எமது வாழ்வோடு ஒத்துப் போகும் நாடகங்களாவே இருந்தன. அத்தோடு ஆனந்தராணி நாடகத்துறைக்கு பெண்கள் வராத சூழலில் தனது நாடகப் பயணத்தை ஆரம்பித்து, பாலேந்திராவின் பல நாடகங்களுக்கு உயிர் கொடுத்து வருகிறார்.
இவர் இல்லாவிட்டால் அவைக்காற்று கலைக் கழக நாடகங்கள் இவ்வளவு சிறப்பாக வந்திருக்குமா என்று நான் நினைக்கிறேன். இவர்களது பல நாடகங்கள் அதிகாரத்துக்கு எதிரான குரலாக இருந்தன.”என்று குறிப்பிட்டார்.
முதலாவதாக, இலங்கை வானொலி ரூபவாஹினி தயாரிப்பாளர், மூத்த ஊடகவியலாளர் P.விக்னேஸ்வரன் உரையாற்றினார்.
இவர் பாலேந்திராவின் ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தை, வானொலிக்கும், ரூபவாஹினி தொலைக்காட்சிக்கும் தயாரித்தவர்.
அவர் தனது உரையில் கூறியதாவது:
“இந்த நூலில் உள்ள நாடகங்கள் சிறுநாடகங்கள். மிகவும் பலம் வாய்ந்தவை. குறைந்த நேரத்தில் பல செய்திகளை கூறும் வல்லமை உடையவை.
குறிப்பாக வாசுதேவனின் காத்திருப்பு காணாமல் போனவர் பற்றிய யதார்த்த நிலையைக் கூறுவது. பெற்றோரின் பரிதவிப்பை விட யுத்தம் ஏற்படுத்திய விளைவுகள், அதை இன்னும் உணராமல் இருப்பவர்கள் பற்றிய கோப உணர்ச்சி முதலியவற்றை தூண்டுவதாக நான் கருதுகிறேன்.
மிகவும் சிறப்பாக எழுதப்பட்ட நாடகம் இது.
‘பிரத்யேக காட்சி’ என்ற நாடகம் ஒரு தேர்ந்த ‘பொலிற்றிகல் சற்றயர்’ என்று நான் கருதுகிறேன். அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒரு ஏழையை எப்படி மூளைச் சலவை செய்கிறார்கள் என்பதை மிகவும் தத்ரூபமாகவும் நகைச்சுவையுடனும் எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பும் மிக சிறப்பாக இருக்கிறது.
பாலேந்திராவின் ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகம் ஒரு மாஸ்டர் பீஸ். அது ஒன்றே போதும் அவருக்கு. அப்படி ஒன்றைச் செய்தாலே அவர் நாடக உலகில் கணிக்கப் படுபவராக இருப்பார்.
எமது அப்போதைய நாடகங்களில் உரத்துப் பேசும் நடிப்பையே நாம் நல்ல நடிப்பு என்று எண்ணி வந்திருக்கிறோம். வீரம் கோபம் சோகம் போன்ற அடிப்படை உணர்வுகளை வெளிப்படுத்தும் நாடகங்கள் அவை.
விரக்தி, பச்சாதாபம், கழிவிரக்கம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் நுண்ணியமான நடிப்பை நான் முதலில் ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தில் தான் பார்த்தேன்.
50 வருடங்கள் எமது சூழலில் தொடர்ந்து இயங்குவது பெரும் சாதனை.
எம்மால் நினைத்துப் பார்க்க முடியாது. நாடகத்தின் மீது அதீத காதல் இருந்தால் மட்டுமே அப்படிச் செய்ய முடியும்.
அந்த வகையிலே பாலேந்திரா அவர்கள் மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒரு சமூகக் கலைஞர்.” என்று கூறினார்.
அடுத்ததாக, அரங்க நினைவலைகள் நிகழ்வில் ‘யுகதர்மம்’ நாடகப் பாடலை அந்த நாடகத்தில் 1979 இல் பாடி நடித்த ரவிச்சந்திரா அருமையாகப் பாடினார்.
தொடர்ந்து ‘போகிற வழிக்கு ஒன்று’, ‘பிரத்யேக காட்சி’ ஆகிய நாடகப் பகுதிகளை பாலேந்திரா – ஆனந்தராணி ஆகியோர் வாசிப்பு அரங்காக வழங்கினர்.
கனடாவில், தமிழிலும் ஆங்கிலத்திலும் பாத்திரமான நாடகங்களை மேடையேற்றி வருபவர், துஷி ஞானப்பிரகாசம். அவர் அடுத்து உரையாற்றினார்.
அவர்தனது உரையில்:
“க.பாலேந்திரா அவர்கள் பல நாடுகளில் பல முறைகள் மேடையேற்றி அந்த மேடையேற்றங்களால் தமிழ் மக்களிடையே பிரபல்யம் அடைந்த ஏழு நாடகங்களின் தொகுப்பு இந்த நூல்.
இந்த நூல் பாலேந்திரா – ஆனந்தராணி இணையரின் 50 ஆண்டு கலைப் பயணத்தை அடையாளப் படுத்துவதாக அமைந்திருப்பது தனி சிறப்பு.
இந்த 50 ஆண்டுகளிலே நாடகத் துறைக்கு இவர்கள் பங்களிப்பு, வார்த்தைகளால் அளக்க முடியாதது. அந்தச் சேவைக்காகவும் தமிழ் மொழி மீதும் நாடகங்கள் மீதும் அக்கறை கொண்டவன் என்ற வகையிலே அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.“ என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும் போது கூறியவை:
“ஒரு பனுவலை வெவ்வேறு நெறியாளர்கள் ஒவ்வொரு விதமாக அணுவார்கள் இது ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்த ஏழு பனுவல்களையும் பதிவேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இவை தொகுக்கப்படவில்லை என்பதும் ஏழு பனுவல்களும் இன்னும் பல தடவைகள் பல்வேறு நெறியாளர்களால் மேடையேற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்துடனே இவை தொகுக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாக தெரிகின்றது.
இந்த நாடகங்கள் பேசும் விடயங்கள் ஈழத் தமிழர்களுக்கு மிகவும் அண்மையானவைகளாக இருக்கின்றன. நாடகங்களோடு இணைக்கப்பட்டிருக்கின்ற ஒளிப்படங்கள் வண்ணத்தில் அமைந்து நாடக மாந்தர் ஒப்பனை ஓரளவு மேடை அமைப்பு போன்ற விடயங்கள் முக்கியமான தகவல்களை தெரிவிப்பதாக இருக்கின்றன.“
அடுத்து, அன்ரன் செக்கோவ் எழுதிய ‘சம்பந்தம்’ நாடகத்தின் ஒரு பகுதி, ரவிச்சந்திரா, ஆனந்தராணி, பாலேந்திரா ஆகியோரால் நடித்துக் காட்டப்பட்டது.
கவிஞர் சேரன் உரை:
பாலேந்திரா – ஆனந்தராணி ஆகியோரது 50 வருட முழுப் பயணத்திற்கும் சாட்சி போன்று மிகவும் சிறப்பாக அமைந்தது.
பாலேந்திரா நடித்த முதலாவது நாடகத்தை மகாஜனாக் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது பார்த்தது அழியா நினைவாக இருப்பதாக கூறினார்.
அவர் தனது உரையில்:
“இது வரை காலமும், தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் மேடையேற்றிய பெரும்பாலான எல்லா நாடகங்களையும் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
‘கண்ணாடி வார்ப்புகள்’ எனது கலை அனுபவத்தில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. தமது தலைமுறைக் கலைஞர்களுக்கு ‘கண்ணாடி வார்ப்புகள்’ போன்ற நாடகங்கள் ஒரு பெரும் நெடும் பாய்ச்சல் என்றார்.
பாலேந்திரா செய்த பல பிற மொழி நாடகங்களை பல மொழிகளில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது என்றும் அவற்றோடு ஒப்பிடும்போது, பாலேந்திரா குறைந்த வளங்களோடு மிகச் சிறப்பாக அந்த நாடகங்களை செய்தாக தான் ஏற்கனவே எழுதி இருக்கிறார் என்று கவிஞர் சேரன் கூறினார்.
இந்த உரை விபரமாக தனியாகப் பதிவு செய்ய வேண்டியது.
தொடர்ந்து சில சிறப்பு பிரதிதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
முதலாவது பிரதியை தாய் வீடு ஆசிரியர் டிலீப்குமார் பெற்றார்.
இறுதியாக பாலேந்திராவின் நன்றியுரை, நாடகப் பாடலுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
கனடாவில் வசிக்கும் முக்கிய இலக்கிய கலை ஆர்வலர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
நன்றி:- எஸ்.கே.ராஜென்
நன்றி:-வீரகேசரி வார வெளியீடு 16/11/2025









