Holy Door25 வருடங்களுக்கு ஒருமுறை திறக்கும் பரிசுத்தக் கதவு

கடந்த சனிக்கிழமை 15-11-2014 காலை 9.00 மணியளவில் ஸ்காபுறோவில் இருந்து சொகுசு பஸ்வண்டியில் திரு. மகேந்திரநாதன் தலைமையில் உறவினர்களும் நண்பர்களுமாக 50 பயணிகளுடன் எங்கள் புனித யாத்திரை ஆரம்பமாகியது. முதலில் மொன்றியாலில் உள்ள (St. Joseph Church) புனித யோசப் தேவாலயத்திற்குச் சென்றோம். அங்கு வழிபாட்டை முடித்துக் கொண்டு அன்றிரவே கியூபெக் நகரை நோக்கி எங்கள் பயணம் தொடங்கி இரவு 9.00 மணியளவில் கியூபெக் நகரை சென்றடைந்தோம்.

முற்கூட்டியே விடுதியில் படுக்கை அறைகளைப் பதிவு செய்திருந்தமையால் எல்லோரும் இரவு தங்குவதற்கு இலகுவாக இருந்தது. நிகழ்ச்சி நிரலின் அடுத்த கட்டமாக மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 16-11-2014 காலை உணவை விடுதியில் முடித்துக் கொண்டு  நாம் தங்கியிருந்த விடுதிக்கு முன்பாக அமைந்துள்ள புனித மேரி மாதா (St. Anne Church, Quebec) கோவிலில் காலை 8.00 மணியளவில் நடைபெறவுள்ள பூஜையில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றோம். பின்னர் பூஜைகளை முடித்துக் கொண்டு எல்லோரும் பஸ் வண்டியில் எமது பயணத்தின் முக்கிய நிகழ்வாக  அமைந்த 25 வருடங்களுக்கு ஒருமுறை திறக்கும் பரிசுத்தக் கதவைத் தரிசிப்பதற்காக (Basilique Cathedrale-Notre-Dame-de-Quebec (Holy Door) Quebec City) ஐ நோக்கிப் புறப்படத் தொடங்கினோம். வழியில் எங்கள் வாகன ஓட்டுனர் இயற்கையாக அமைந்துள்ள கியூபெக் நகரின் ரம்மியமான அழகை விபரித்துக் கொண்டு வந்தார். வழியில் நீர் வீழ்ச்சிகள், வியத்தகு பாலங்கள்(Bridges),  நீண்டு செல்லும்  Saint Laurent River இன் அழகு போன்றவை ரசிக்கக் கூடியதாக அமைந்தது. காலை 10.30 மணியளவில் ஆலயத்தை வந்தடைந்தோம்.

எல்லோர் மனதிலும் ஓர் ஆன்மீக புத்துணர்வு ஏற்பட்டது. ஏனெனில் 25 வருடங்களுக்கு ஒருமுறை திறக்கும் பரிசுத்தக் கதவைக் கொண்ட 350 வருட பழமை வாய்ந்த ஆலயம். உலக அளவில் இப் புனித ஆலயத்தைப் போன்று ஏழு ஆலயங்கள் தான் உள்ளது என்று சொல்லப்படுகிறது. அப்படி பல அபூர்வ அம்சங்களைக் தன்னகத்தே கொண்ட, பாப்பரசர்களின் பாதம் பட்ட  ஆலயத்தினுள் நாங்கள் காலடி எடுத்து வைக்கப் போகிறோம் என்ற உணர்வினால் எங்கள் உள்ளம் உவகை அடைந்தது. அன்று  எங்களைப் போன்று பலர் வந்திருந்தனர். இவ் விஷேட தினத்தில் இவ் ஆலயத்திற்கு வந்தால் எங்கள் பாவங்களுக்கு பரிகாரம் கிடைத்து புனிதத் தன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். உள்ளே எல்லோரையும் அன்புடன் வரவேற்றுக் கொண்டிருந்தனர். அத்துடன்  ஆலயத்தின் மகிமையையும் விளக்கினார்கள். ஆலயத்தின் மறு மண்டபத்தில் பாதிரியார்களினால் பூஜைகள் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் ஆண்டவரை வழிபட்ட பின்பு பரிசுத்தக் கதவுக்கு அருகில் நின்று நிழற்படங்களையும், ஒளிப்படங்களையும் எடுத்துக் கொண்டோம். ஏனெனில் எங்கள் வாழ்நாளில் ஒருமுறை எஙகளுக்குக் கிடைத்த இந்தப் பாக்கியத்தின் பதிவுக்குச் சான்றாக. பின்னர் பிற்பகல் 1.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10.00 மணியளவில் பாதுகாப்பாக மீண்டும் ஸ்காபுறோ வந்தடைந்தோம். இப் புனித யாத்திரையை எங்களுக்கு ஏற்படுத்தித் தந்த திரு. மகேந்திரநாதன் அவர்களுக்கும் மற்றும் பல விதமான உணவுகள வழங்கி அன்புடன் உபசரித்த அன்பர்களுக்கும், பிரயாணக் களைப்புத் தெரியாமல் பாடல் பாடியும், ஆடியும், தங்களின் பசுமையான நினைவுகளை பகிர்ந்த நெஞ்சக்களுக்கும், பயணத்தில் பாதுகாப்பாக எங்களை அழைத்துச் சென்ற ஓட்டுனருக்கும் நன்றிகள் பலப் பல. மீண்டும் இன்னுமொரு பயணத்தில் இணைவோம்.

 

-அன்புடன் மோகன் குமாரசாமி.

 

எங்கள் புனித யாத்திரையின் நிழற்படங்களும், ஒளிப்படங்களும் கீழே

 

[Best_Wordpress_Gallery id=”20″ gal_title=”gallery11″]